Published:Updated:

இந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை?

lions
பிரீமியம் ஸ்டோரி
News
lions ( கல்யாண் வர்மா )

அந்தப் பரபரப்பில் என் பின்னால் ஒரு சிங்கம் நின்றுகொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை.

ந்தியாவில் உள்ள சிங்கம் குறித்த ஆய்வாளர்களில் முக்கியமானவர் முனைவர் ரவி செல்லம். சென்னை முதலைப்பண்ணை, அசோகா (ATREE), கிரீன்பீஸ் போன்ற பல முக்கிய காட்டுயிர் ஆய்வு நிறுவனங்களில் முதன்மைப் பதவி வகித்துப் பல ஆய்வுகளை வழிநடத்தியவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் காட்டுராஜாக்களின் கதைகளை உலகமறியச் செய்துகொண்டிருப்பவரை ஒரு மாலை நேரத்தில் அவரது வீட்டில் சந்தித்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ரவி செல்லம்
ரவி செல்லம்

சிங்கங்களை ஆய்வு செய்யவேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

“இந்தியக் காடுகளில் உலா வந்த சிங்கங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. அவை அழிந்துவிடாமல் இருக்க அதீதப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டன. கானுயிர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் பாதுகாக்கவும் ஆய்வுத்துறைக்குள் செல்வதுதான் முதன்மையான வழி. அப்படித்தான் அவற்றைப் பற்றி ஆய்வு செய்யத்தொடங்கினேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

lions
lions

இந்தியத் துணைக்கண்டத்தில் கிர் காடுகளைத் தவிர, சிங்கம் வேறு எங்குமே இல்லையே ஏன்?

“இப்போது நாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில்கூட ஒருகாலத்தில் ஆசியச் சிங்கங்கள் வாழ்ந்தன. இந்தியாவில் பரவலாக வாழ்ந்த சிங்கங்கள் இப்போது ஒரே இடத்தோடு சுருங்கிவிட்டதற்கு மனிதர்கள்தான் காரணம். இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த கடைசிச் சிங்கம் 1947-ம் ஆண்டு ஈரானில் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்தியாவுக்குள் குஜராத்தின் கிர் காட்டிற்கு வெளியே வாழ்ந்த கடைசிச் சிங்கம், மத்தியப் பிரதேசத்தின் குனோ என்ற பகுதியில் 1888-ம் ஆண்டே கொல்லப்பட்டுவிட்டது. போக, சிங்கங்களுக்கு கெனைன் டிஸ்டெம்பர் மற்றும் பேபியோசிஸ் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால் குணப்படுத்துவது மிகவும் சிரமம். 1996-ம் ஆண்டு மூன்றே வாரங்களில் 1000 சிங்கங்கள் இந்த நோய்த்தொற்றால் இறந்தன. இப்போதுகூட கிர் போன்ற ஒரே இடத்தில் மொத்தமாய் எல்லாச் சிங்கங்களையும் வைத்திருப்பது பிரச்னைதான். ஒன்றிற்கு நோய் தொற்றினால் அது சரசரவெனப் பரவிவிடும். அதனால்தான் என்னைப் போன்ற ஆய்வாளர்கள் இந்தியாவின் மற்ற காடுகளுக்கும் சிங்கங்களை இடமாற்றம் செய்யவேண்டும் எனத் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறோம். சிறிது கவனம் பிசகினாலும் அந்தப் பேரழகான ஜீவராசிகளைக் நாம் இனி எப்போதும் காடுகளில் காணமுடியாமல் போகலாம்.”

இந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை?

கிர் காட்டில் உங்களால் மறக்கவே முடியாத அனுபவம் என்றால், எதைச் சொல்வீர்கள்?

“ஒரு இரவுப்பொழுதில் சிங்கக் குடும்பம் ஒன்றைப் பின்தொடர்ந்து காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தேன். ஓரிடத்தில் அவை நிற்க, நானும் ஓசை எழுப்பாமல் மறைந்து நின்று வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பரபரப்பில் என் பின்னால் ஒரு சிங்கம் நின்றுகொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. என்னை நெருங்கிய சிங்கம் என்ன நினைத்ததோ, நான் கொஞ்சம் தள்ளி வைத்திருந்த கேமராப் பையைத் தூக்கிச் சென்றுவிட்டது. கறுப்பாக இருந்ததால் எருமை மாமிசம் என நினைத்துவிட்டது போல. கொஞ்ச தூரத்தில் அது மாமிசமில்லை எனத் தெரிந்து அதைத் தூக்கிப்போட்டு விட்டது. அந்த இரவை இப்போது நினைத்தால் சிரிப்பாகவும் இருக்கிறது, சிலிர்ப்பாகவும் இருக்கிறது.”

இந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை?

India Biodiversity portal என்ற இணையதளம் பொதுமக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக விளங்குகிறது. அதைப் பற்றிச் சொல்லுங்களேன்?

“நாடு முழுவதும் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்த தரவுகளை மக்கள் பங்களிப்பின் மூலமாகச் சேகரிப்பதே அந்த இணையதளத்தின் பிரதான நோக்கம். அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுடைய தொடர் பங்களிப்பு இருக்கிறது.

இதுவரை, 27,000 வகையான உயிரினங்கள் பற்றிய 1.3 மில்லியன் பதிவுகள் கிடைத்துள்ளன. இந்தத் தரவுகளை அடிப்படையாக வைத்து இதுவரை பொதுவெளியில் 160 ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இதற்குப் பங்களிக்க மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டுமே. அவர்கள் பார்க்கும் மரம், தாவரம் அல்லது ஏதாவது உயிரினத்தின் ஒளிப்படம் மற்றும் எங்கு, எப்போது பார்க்கப்பட்டது என்ற விவரம் போன்றவற்றைப் பதிவேற்றினால் போதும். இந்தியாவில் ஆய்வாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், பொதுமக்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். நாம் ஏன் அவர்களையே ஆய்வுப் பயணத்தில் ஈடுபடுத்தக்கூடாது! இந்தத் தளம் அதற்கானதுதான்!”