Published:Updated:

`5 நாள்களாக கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்' - பீதியில் புதுச்சேரி படகு இல்லம்!

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு இல்லம் அருகே கொத்து கொத்தாக இறந்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி மக்கள் கலக்கமடைந்திருக்கின்றனர்.


Dead fish
Dead fish ( S.Devarajan )

புதுச்சேரி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்றது நோனாங்குப்பம். கடலின் நீரோட்டமும் சுண்ணாம்பாறும் கலக்கும் இந்த இடத்தில்தான் புதுச்சேரி சுற்றுலாத்துறையின் படகு இல்லம் அமைந்திருக்கின்றது.

Fish
Fish
S.Devarajan

கிழக்கு கடற்கரைச் சாலையான இந்தப் பகுதியில் சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதப்பது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 5 நாள்களாகத் தொடர்ச்சியாக இறந்து மிதப்பதால் அந்தப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில் அப்பகுதி மக்களும், அப்பகுதியைக் கடக்கும் பொதுமக்களும் அந்த மீன்களைச் சமைப்பதற்கு அள்ளிச் செல்கின்றனர்.

Boat House Puducherry
Boat House Puducherry
S.Devarajan
Marine fishes
Marine fishes
S.Devarajan

“கெழங்கா, ஊடாங்கன்னி, மடவை, கெண்டை உள்ளிட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் மீன்கள் இங்கு நிறைய கிடைக்கும். அவையெல்லாம் தற்போது செத்து மிதக்கின்றன. இந்தப் பகுதியில் இரண்டு இடங்களில் சாக்கடை நீர் கலக்கிறது.

அதனால் மீன்கள் இறக்கின்றனவா அல்லது சமூக விரோதிகள் எதையாவது கலந்துவிட்டதால் இறக்கின்றனவா என்று தெரியவில்லை. எப்படிபப்பட்ட அசுத்தங்களையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழும் உடலமைப்பைப் பெற்றதுதான் கெளுத்தி மீன்கள். ஆனால், இன்று அவையும் செத்து மிதக்கின்றன” என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Fishes
Fishes
Devarajan

மீன்கள் இறப்புக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வரை பொதுமக்கள் அந்த மீன்களை எடுத்துச் செல்வதை அரசு தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.