Published:Updated:

மழைநீர் குழாய்க்குள் சிக்கிக் கொண்ட மலைப்பாம்பு! -கேரள வனத்துறையின் இரண்டரை மணிநேர போராட்டம்

மலைப்பாம்பு
மலைப்பாம்பு

மழைநீர் குழாய்க்குள் மலைப்பாம்பு எப்போது எப்படி வந்தது என்பது தெரியவில்லை. அதன் தலைப்பகுதி மட்டும் வெளியில் தெரிந்ததால் அச்சம் அடைந்த குடியிருப்புவாசிகள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் மட்டுமே வாழும் உயிரினங்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் அபூர்வமாக நுழைந்து விடுவதுண்டு. அப்படியொரு சம்பவம் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கத்திரிகடவு என்ற பகுதியில் நடந்துள்ளது.

பைப்பில் இருந்து பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறை
பைப்பில் இருந்து பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறை

அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின், மழைநீர் வெளியேறுவதற்கான பி.வி.சி பைப்பின் முனையில் ஏதோவொரு உயிரினத்தின் தலை மட்டும் தெரிந்துள்ளது. அதைக் குடியிருப்புவாசிகள் நன்றாக உற்றுப் பார்த்தபோது அது ஒரு பாம்பின் தலை என்பது தெரியவந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்தார்கள்.

கண் இமைக்கும் நேரத்தில் மானை அடித்துத் தூக்கிய மலைப்பாம்பு... வைரலாகும் மிரட்டல் வீடியோ! #viralvideo

பாம்பு எப்படி பி.வி.சி பைப்புக்குள் நுழைந்தது என்பது பற்றியோ எத்தனை நாள்களாக இருக்கிறது என்பது குறித்தோ தெரியாமல் குழப்பம் அடைந்த குடியிருப்புவாசிகள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து, அது ஒரு மலைப்பாம்பு என்பதைக் கண்டுபிடித்தார்கள். 

பைப்பை உடைத்து மீட்கும் முயற்சி
பைப்பை உடைத்து மீட்கும் முயற்சி

பாம்பின் உடல் முழுவதும் பைப்புக்குள் இருந்ததால் அது எவ்வளவு நீளம் கொண்டது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. பாம்பை வெளியே எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதனால் பைப்பை உடைத்து எடுத்தார்கள்.

பைப்பில் நன்றாக சிக்கிக் கொண்டதால் அதில் இருந்து பாம்பை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து பாம்பை வெளியில் எடுக்க மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

பைப்பை வெட்டி எடுக்கும் தீயணைப்பு வீரர்கள்
பைப்பை வெட்டி எடுக்கும் தீயணைப்பு வீரர்கள்

காயமின்றி பாம்பை மீட்க வேண்டும் என்பதற்காக அதை அங்கிருந்து எடுத்துக்கொண்டு தீயணைப்பு நிலையத்துக்குச் சென்றார்கள். அங்கு பைப்பை வெட்டும் உபகரணத்தின் மூலம் பைப்பை பல துண்டுகளாக வெட்டினார்கள். சுமார் இரண்டரை மணி நேரத்துக்குப் பின்னர் சிறிய காயம்கூட இல்லாமல் பாம்பு மீட்கப்பட்டது. சுமார் பத்து அடி நீளம் இருந்த மலைப்பாம்பு வனத்துறையினரின் உதவியுடன் அடர்ந்து காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு