Published:Updated:

பறவைகள் கூட்டமும் புலப்படாத விசித்திரங்களும்! - வாசகி பகிர்வு #MyVikatan

பூமியின் வடதுருவ குளிர் மண்டல நாடுகளில் நான் இருப்பதால் ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின்போதும் வானில் காணக்கிட்டும் அதிசயம்தான் இந்தப் பறவைகளின் ஊர்வலம்.

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

குளிர்காலம் ஆரம்பமாகும்போதே வானத்தில் கூட்டம் கூட்டமாகப் பறந்து போகும் பறவைகளைப் பார்ப்பதே ஒரு தனி சுகம். அவை பறக்கும் நேர்த்தியும் ஒழுங்கும் பார்க்கப் பார்க்க பிரமிப்பூட்டும். ஒரு பரவசம் ஏற்படும். வானத்தில் ஒரு வரைபடம் போல வளைவு நெளிவில்லாது பறந்து செல்லும் பறவைக் கூட்டம் கடைசியில் எங்கு போய் தரையிறங்கும்? இடையில் எங்கமர்ந்து ஓய்வெடுக்குமென ஆயிரம் கேள்விகள் மனதுக்குள் எழும். இவை விட்டுச்செல்லும் வீட்டுக்கே பறந்து வருமா இல்லை வழிமாறி வேறொரு திசையில் பிரிந்து செல்லுமா என எப்பொதும் யோசிப்பேன். அதிலும் நான் ஐரோப்பா வந்ததிலிருந்து இந்த `mind blowing’ காட்சியை வானத்தில் அடிக்கடி கண்டுகளிக்கும் பாக்கியம் கிட்டியுள்ளது.

Representational Image
Representational Image

பூமியின் வடதுருவ குளிர் மண்டல நாடுகளில் நான் இருப்பதால் ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின்போதும் வானில் காணக்கிட்டும் அதிசயம்தான் இந்தப் பறவைகளின் ஊர்வலம்.

விவரம் தெரிந்த காலம் தொட்டு பறவைகளுக்கும் எனக்குமான உறவு கொஞ்சம் ஆழமானதாகவே இருந்துள்ளது. பிறந்து ஏழு வயது வரை இருந்த வீட்டில் ஒரு பெரிய கோழிப்பண்னையே இருந்தது. அதோடு lovebirds, கிளி, புறா, மைனா என வளர்க்காத பறவைகளில்லை. இதற்கு மேலாக என் மூத்த அண்ணன் எங்கிருந்தோ, அடிபட்டுப் பறக்க முடியாமல் கிடந்த ஒரு கழுகை பிடித்துக்கொண்டு வந்து வைத்திருந்தார்.

Representational Image
Representational Image

தினமும் வீட்டு முற்றத்தில் வரும் குருட்டுக் கொக்கைப் பிடித்து காலில் ஒரு கயிறு கட்டி அம்மாவிடம் உதை வாங்கும் வரை வைத்திருப்பேன். ஏற்கெனவே கண் தெரியாமல் நிராயுதபாணியாக நின்று என்னிடம் மாட்டிக்கொள்ளும் குருட்டுக் கொக்கிற்கு ஆபத்பாண்டவனாய் வந்து விடுதலை பெற்றுக்கொடுப்பது அம்மாதான். அடி விழும் எனத் தெரிந்தும் கொக்கு, வாத்து என ஒன்று விடாமல் ஓடிச்சென்று பிடித்து விடுவதில் தொடங்கியதாயிருக்கலாம் என் பறவைகள் மீதான ஈர்ப்பு.

அதன் பிறகு படிப்பு நிமித்தம், வேலை நிமித்தமெனப் பல இடங்களுக்கும் இடம்மாறியதில் பறவைகளுக்கும் எனக்குமான இணைப்பு கொஞ்சம் இளகிப் போனது! ஆயினும் எங்கிருந்தாலும் வீட்டுத் தோட்டத்தில் bird seeds போட்டு வைப்பது, மரத்தில் bird house அமைத்து அதில் தண்ணீர் வைப்பது என ஏதாவது செய்து கொண்டிருப்பேன். நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும் எனக்கும் எட்டாப் பொருத்தம் என்பதும் பறவைகள் பால் என் பாசத்தை பன்மடங்காக்கியதோ என்னவோ!

Representational Image
Representational Image

சரி, இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த migratory birds (புலம் பெயரும் பறவைகள்) இறைவனின் படைப்பில் ஒரு கற்பனைக்கெட்டாத ஓர் ஆச்சர்யம். Birds Migrating எனப்படும் இந்தப் பறவைகளின் இடம் மாறல் ஒரு சுவாரஸ்யமான விஷயம். பறவை இடம்பெயர்வு என்பது ஒரு இயற்கையின் மிகப்பெரும் அதிசயம். புலம்பெயர்ந்த பறவைகள் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பறந்து, தமக்குப் பொருத்தமான, சிறந்த சுற்றுச்சூழல் நிலைமைகளையும் வாழ்விடங்களையும் கண்டுபிடித்து, இனப்பெருக்கம் செய்யவும் அவற்றின் குட்டிகளுக்கு உணவளிக்கவும் தோதுவான இடங்களை நாடிச் செல்கின்றன.

இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் நிலைமைகள் சாதகமற்றதாக மாறும்போது, ​​தமக்குத் தேவையான காரணிகள் தோதாக  இருக்கும் பகுதிகளை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கின்றன. வானத்தை அண்ணாந்து பார்க்கையில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் இந்தப் பறவைக் கூட்டத்துக்கு, அட்டவணை போட்டாற்போல் இந்த நேரத்தில் இந்தக் காலகட்டத்தில், இத்திசையில், இத்தனை நாள் பயணப்பட்டு சென்றடைய வேண்டுமெனச் சொல்லிக்கொடுப்பது யாரோ எனத் தோணும்.

Representational Image
Representational Image

வெவ்வேறு வகையான பறவைகள், வீதியில் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு வெறும் ஓரிரு மைல் தொலைவில் இடம் மாறுவதில் தொடங்கி, ஒரு கண்டம் விட்டு இன்னோர் கண்டத்துக்கு முழுவதுமாய் இடம் பெயருவது எனப் பல விதங்களில் இவை இடம் பெற்றாலும். பிரதானமாக நான்கு அடிப்படை இடப்பெயர்வு வகைகள் உள்ளன. 

இப்புலம்பெயரும் பறவைகள் வேகமாகவும் நீண்ட தூரத்துக்கும் பறக்க ஏதுவாகவும் சரியான உருவவியல் மற்றும் உடலியல் அமைப்பைக் கொண்டுள்ளன. பெரும்பாலும், அவற்றின் பயணம் சோர்வுறும் தருணத்தில், அவை தங்கள் எல்லைக்குச் சென்றடைகின்றன. இந்த புலம் பெயரும் பறவைகள் மிக மிகத் துல்லியமான வழிகாட்டலுடன் தாம் செல்லவேண்டிய இடத்துக்கு எவ்வாறு சென்றடைகின்றன என்பது உண்மையிலேயே நான் அதிசயத்து வியக்குமொரு விஷயம்.

Representational Image
Representational Image

ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்துவிட்டு குளிர்காலத்தை ஆப்பிரிக்காவில் கழிக்க நீண்ட தூரம் பறந்து செல்லும் Swallows (ஸ்வாலோஸ்) போன்ற பறவையினங்கள் மிகவும் பிரபலமானவை. நமது நாடுகளில் திடீரென நம் வீட்டுத் தோட்டத்தில் வந்தமரும் விதம்விதமான புதியரக பறவையினங்கள் கூட ஒருவேளை ஜனவரி மாதத்தில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பறந்து வந்த ஒரு பறவையாகக் கூட இருக்கலாம்.

குறைந்தது 4,000 வகையான பறவைகள் சராசரியாகக் காலநிலைக்கேற்ப புலம்பெயர்கின்றன. இது உலகின் மொத்த பறவையினத்தில் 40 சதவிகிதம். கனடா அல்லது ஸ்காண்டிநேவியா போன்ற வடக்குப் பகுதிகளில், பெரும்பாலான இனங்கள் குளிர்காலத்திலிருந்து தப்பிக்க தெற்கே சென்று குடியேறுகின்றன. இங்கிலாந்து போன்ற மிதமான பகுதிகளில், மீதி இனங்கள் இடம்பெயர்கின்றன - குறிப்பாகப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் பறவையினங்கள் குளிர்காலத்தில் போதுமான உணவைக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் இடம்பெயர்கின்றன.

Representational Image
Representational Image

அமேசான் மலைக்காடுகள் போன்ற வெப்பமண்டல பகுதிகளில் வாழும் பறவையினங்கள் மிகக் குறைவான அளவிலேயே இடம்பெயர்கின்றன. ஏனெனில் வாழ்வதற்கும் இனப்பெருக்கத்துக்கும் ஏற்ற சாதகமான வானிலை மற்றும் உணவு வழங்கல் (food supply) ஆண்டு முழுவதும் அந்த மழைக் காடுகளில் கிடைக்கின்றன. இந்தக் காரணத்தினாலேயே இலங்கை, இந்தியா போன்ற நமது பிரதேசத்துக்கே சொந்தமான பல பறவையினங்கள் இந்த migratory birds வகையறாக்குள் அடங்குவதில்லை!

நாடு விட்டு நாடு செல்வது மனிதன் மட்டுமல்ல பறவைகளும் தான்! ஆனால், எந்த இயந்திரத்தின், எவ்வித தொழில்நுட்பத்தின் துணையில்லாமல், வரைபடமில்லாமல், வாய்ப் பேச்சு இல்லாமல், இயற்கையை மட்டுமே துணையாகக் கொண்டு, நீல வானத்தில், மேக மூட்டத்தில், மெல்லிய மழையில், காடு மேடு கடந்து, இரவு பகல் கடந்து, கடல் கடந்து, மலை கடந்து, களைப்பின்றி களிப்போடு, ஒத்து ஒருமித்து, கூட்டமாகக் கூடி குதூகலித்து வாழ்வாதாரத்தைத் தேடி வாழ்நாள் எல்லாம் பறந்துகொண்டே இருக்கும் பறவைகளும் survival of the fittest தான்! இவை என்றைக்குமே இறைவனின் படைப்பில் ஒரு அதிசயமே!

பறவைகள் கூட்டமும் புலப்படாத விசித்திரங்களும்! - வாசகி பகிர்வு #MyVikatan

என்ன முக்கியமான வேலையில் இருந்தாலும் வானத்தில் இந்த அதிசய உயிர்களின் ஊர்வலத்தைப் பார்த்துவிட்டால், ஓடிச் சென்று, அவை கண்ணைவிட்டு மறையும் வரையிலும் வாய் பிளந்து, வியந்து, அண்ணாந்து பார்க்கும் தருணங்களில் நானும் ஒரு பறவையாகிறேன்! 

- றின்னோஸா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/