Published:Updated:

அமெரிக்க வீட்டு பால்கனியில் அரிசியுடன் காத்திருக்கிறோம்! - வாசகரின் சிட்டுக்குருவி கதை #MyVikatan

Sparrow
Sparrow

குடிசைகளின் மரக் கம்புகள், மாடங்கள், பரண்கள், ஓடுகளின் இடைவெளி என்று கிடைத்த சிறு இடத்தில் நிறைவாக வாழும் சிறு பறவைகள் இவை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பல வண்ணப் பறவைகளும் பரந்த நீர்ப் பரப்பும் பசுமையான மலைகளும் பாசமிகு உறவுகளுமே மனித மனத்திற்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தருகின்றன. ’கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்ற முதுமொழிக்கிணங்க, பறவை இனத்தில் சிட்டுக்குருவிக்கென்று எப்பொழுதுமே தனியிடம் உண்டு. சுறுசுறுப்புக்குப் பெயர் போன பறவை அது. ’எனவேதான், சுறு சுறுசுறுப்பாக வேலை செய்யறவங்களைப் பார்த்து ‘சிட்டா பறக்கிறாங்க’ என்று அழைப்பது வழக்கத்திற்கு வந்தது. அதோடு மட்டுமல்லாது, ஏழைகளின் குடிசைகளிலும் ஏகாந்தமாய் வாழும் பறவை இதுவென்பதால், இது எளியோரின் பறவையாகும்.

Sparrow
Sparrow

பறந்த இவ்வுலகில் மனிதர்கள் 100-120 ஆண்டுகள்வரை வாழலாமென்றாலும், நூறைத் தாண்டி வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். மனிதர்களின் அமைதி வாழ்வுக்குத் துணையாய் நிற்கும் இச்சிறிய பறவையினத்திற்கு இறைவன் விதித்தது 13 ஆண்டுகள் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படியிருந்தும், தற்போதைய சூழலில் அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகளாகக் குறுகி விட்டதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 4 முதல் 8 அங்குலம் வரையே இவற்றின் வளர்ச்சி. 27 முதல் 39 கிராம்தான் இச்சிறு பறவையினத்தின் எடை. அதனால்தான் இவற்றிடம் உற்சாகத்திற்கும், உவகைக்கும் குறைவில்லையோ! ’குறைந்த எடையே குதூகலத்திற்கு அடிப்படை’ என்று இவை நமக்குச் சொல்லாமல் சொல்கின்றனவோ?

குடிசைகளின் மரக் கம்புகள், மாடங்கள், பரண்கள், ஓடுகளின் இடைவெளி என்று கிடைத்த சிறு இடத்தில் நிறைவாக வாழும் சிறு பறவைகள் இவை. ’சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்ற மூதுரையை நமக்கு உணர்த்தும் முத்தாய்ப்பான பறவைகள் இவை. அடைக்கலாங் குருவி, ஊர்க்குருவி, வீட்டுக் குருவி என்ற வேறு பெயர்களும் இவற்றுக்கு உண்டு. சாம்பல் நிறத்திலும், சற்றே வெண்மை கலந்தும் இருக்கும் இவற்றில், ஆண் பறவைக்கு முகத்தில் சற்று அழுத்தமான கருமை உண்டு.

சங்க இலக்கியங்களும் சிட்டுக் குருவி குறித்துப் பேசுகின்றன. ‘மனையுறைக் குருவி’, ’உள்ளுறைக் குருவி’, ‘உள்ளூர்க் குருவி’ என்றெல்லாம் பெயரிட்டு சங்க இலக்கியங்கள் சிலாகிக்கின்றன.

ஆண் குருவிகள் கூடு கட்ட, பெண் குருவிகள் 3-5 முட்டைகள் இட்டு, 12-15 நாள்கள் அடைகாத்து, குஞ்சுகளைப் பொறிக்குமாம். ஆண்டில் பலமுறை இவ்வாறு நடைபெறுமாம்.

நமது கிராமங்களில் சேவலுக்கு அடுத்தபடியாக, அதிகாலையில் தங்கள் ‘கீச், கீச்’ சத்தத்தால் மக்களை எழுப்பி விடும் மாண்பைக் கொண்ட இப்பறவைகள், தற்போது அருகி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், நமது வருங்கால சந்ததியினர்க்கு இவற்றின் படங்களைக் காட்டியே விளக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

திணை, சாமை, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை உணவாக உட்கொள்ளும் இவற்றுக்கு இப்பொழுது அவையெல்லாம் கிடைப்பது அரிதாகி விட்டது. புழு, பூச்சிகள், வெட்டுக் கிளிகள் போன்ற உயிரினங்களையும் இவை உண்ணும். பூச்சி மருந்து அடிப்பதால் அவற்றுக்கும் பஞ்சமேற்பட்டுவிட்டதால் சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி வருகிறது.

Sparrow
Sparrow

1950 வாக்கில், சீனாவில் மக்கள் சிட்டுக் குருவிகளைத் தேடித்தேடிச் சுட்டார்களாம். அதன் காரணமாக, சிட்டுக்குருவிகள் தொகை பெருமளவில் குறைந்துவிட்டதாம். அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில், பூச்சிகள் மற்றும் வெட்டுக் கிளிகளால் பயிர்கள் பலத்த சேதமடைந்து விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாம். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, உணவுப் பஞ்சத்தில் சுமார் 1.5 கோடி பேர் இறந்து போனதாக வரலாறு தெரிவிக்கிறது. சிட்டுக் குருவிகள் பாதுகாக்கப்பட்டிருந்தால், அந்தப் பஞ்சமே ஏற்பட்டிருக்காது என்கிறது வரலாறு. சமீபத்தில் நமது பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரும் அளவிலான வெட்டுக் கிளிகள் பயிர்களுக்கு நாசமேற்படுத்தியதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானிலும் சிட்டுக் குருவிகள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. சிட்டுக் குருவிகளின் அருமையை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. எனவேதான் அவற்றைப் பாதுகாக்க வேண்டி, 2010 முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20 ஆம் நாளை, ’உலகச் சிட்டுக்குருவி தினமாக' உலகநாடுகள் கொண்டாடி வருகின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு, சிட்டுக்குருவிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக நமது டெல்லி அரசு, சிட்டுக்குருவியைத் தங்கள் மாநிலப் பறவையாக அறிவித்துப் பெருமைப்படுத்தியது.

சிட்டுக்குருவியுடன் தமிழ் நாட்டிற்கு மிகுந்த தொடர்பு உண்டு. 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எங்கள் வீட்டில், பகல் முழுவதும் அவற்றின் ‘கீச் கீச்’ குரலைக் கேட்கலாம். என் தந்தையார் துவைத்துக் காயப்போடும் வேட்டியில் அவை அன்றாடம் எச்சமிடுவதும், அவற்றை மறுமுறை அலசிப் போடுவதும் எங்கள் வீட்டில் வாடிக்கை. அதற்காக ‘என் தந்தையார் அவற்றின் மீது சிறு வெறுப்பையும் காட்டியதில்லை’ என்பது கூடுதல் செய்தி. அதன் காரணமாகவே அவை அக்காலத்தில் அதிகமாக வாழ்ந்தனவோ?

Sparrow
Sparrow

தற்பொழுதும் இங்கு அமெரிக்காவில் நாங்கள் குடியிருக்கும் வீட்டில் மகளும், மருமகனும் அதற்கென்று பால்கனியில் ஒரு கூண்டைத் தொங்கவிட்டு, தினமும் காலையில் அரிசியை வைக்கிறார்கள். அவை உண்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மனது அமைதியாகிறது. கீழே வைக்கும் ‘கப்’ தண்ணீர் மட்டும் இரவில் பனிக்கட்டியாக மாறிவிடுகிறது.

தமிழ்த் திரைத்துறையும் சிட்டுக் குருவியைப் போற்றத்தவறவில்லை. பெரும்பாலான திரைப்படங்களில் சிட்டுக்குருவி குறித்த பாடல்களை வைத்துப் பெருமைப்படுத்தினார்கள். கதாநாயகிகள் சிட்டுக்குருவிகளையே தோழிகளாகப் பாவித்து வந்தார்கள். வீடு திரும்ப தாமதப்படுத்தும் கணவனின் செயலை சிட்டுக் குருவியிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக,

‘சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா

என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல.'

என்று அஞ்சலி தேவி 1960 களில் சிட்டுக் குருவியிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே

செவ்வானம் கடலலை மேல் கலந்திடக் கண்டேனே.’

என்று பாடி, சரோஜா தேவி தன் காதலை சிவாஜிக்குத் தெரிவிப்பார் ‘புதிய பறவை’யில்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ,

‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு

தென்றலே உனக்கேது சொந்த வீடு’

என்று கூறி, தன் காதலை வெளிப்படுத்துவார் ‘சவாலே சமாளி’யில்.

'முதல் மரியாதை' சிவாஜி கணேசனோ, ஜோடியோட வந்து விட்டத்தில் கூடுகட்டச் சொல்லுவதுடன், ’பொண்டாட்டி இல்லை வந்து என்னோட பாடு.’

என்று சிட்டைத் துணைக்கழைப்பார்.

இப்படி ஏகப்பட்ட பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களில் சிட்டுக் குருவியை மையமாக வைத்துப் பாடப்பட்டுள்ளன.

Sparrow
Sparrow

காதலுக்கும், சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் உறைவிடம் மட்டுமல்ல சிட்டுக்குருவி, உயர் விளைச்சல்பெறவும் அதன் உதவி இன்றியமையாதது. ஏற்கெனவே உலகில் தேனீக்கள் குறைந்து வருவதால், மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைவு ஏற்படுமென்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நேரத்தில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தால், நம் விவசாயிகளின் உழைப்பைப் புழு, பூச்சிகள் மற்றும் வெட்டுக் கிளிகள் வீணாக்கி, விளைச்சலைக் குலைத்து விடும்.

வீடுகளிலும், விவசாய நிலங்களின் அருகிலும் சிட்டுக்குருவிகள் வாழ வகை செய்வோம். வீட்டில் கண்ணாடித்தொட்டியில் வளரும் மீன் நமக்கு மன அமைதியைத் தந்து, இதய நோயைக் குறைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதை விட அதிகமான மன அமைதியையும், உற்சாகத்தையும் சிட்டுக்குருவிகள் நமக்கு வழங்கி வருகின்றன என்பதே உண்மை. அவற்றின் வாழ்வுக்காக நாம் செய்வது செலவல்ல. மூலதனம். ஆம். அவை நம்மை அமைதிப்படுத்துவதுடன் நம் விளைச்சலையும் பெருக்கிப் பட்டினிச் சாவிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது உறுதி.

சிட்டுக்குருவி காப்போம். சிறகடிப்போம் உற்சாகத்தில்!

- ரெ.ஆத்மநாதன்,

மெர்லின், அமெரிக்கா

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

விகடன் தேர்தல் களம் 2021
விகடன் தேர்தல் களம் 2021

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

அடுத்த கட்டுரைக்கு