Published:Updated:

`ஏற்றத் தாழ்வுகளை அகற்றிய ராபின் ஹூட்' மங்கோலிய ஓநாய்களின் கதை... பாகம்-2

மங்கோலிய ஓநாய்
மங்கோலிய ஓநாய்

அதிகமாக ஒருவர் கால்நடைகள் வைத்திருந்தால், அந்த எண்ணிக்கையைக் குறைத்து, அவர் யாரை விடவும் பெரியவர் இல்லை என்பதையும் அவ்வப்போது மங்கோலியர்கள் மத்தியில் நிரூபித்துக்கொண்டேயிருந்தன இந்த ஓநாய்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சீன அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, 1966-ல் ஏற்பட்ட கலாசாரப் புரட்சி, அவர்களுடைய வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. உற்பத்தியை அதிகப்படுத்துவதிலேயே, அரசாங்கத்தின் கவனம் குவிந்தது. ஒவ்வொரு மக்கள் குழுவும் ஆடுகளை, குதிரைகளை அதிகமாக வளர்க்க வேண்டும். அவற்றைக் கூட்டுறவுக்குக் கொடுத்து பொருளாதாரத்தில் பங்கு வகிக்க வேண்டும். கால்நடைகளில் மாடுகளைவிட ஆடுகளும் குதிரைகளும் தீவிரமாக மேயக்கூடியவை. காட்டுயிர்களில், மான்கள் எந்த அளவுக்கு புல்வெளி நிலத்திற்கு அவசியமோ, அதே அளவுக்கு அவை ஆபத்தானவையும்கூட. இவையெல்லாம் கூட்டமாகச் சேர்ந்தால், புல்வெளி நிலத்தைப் பாலைவனமாகவே மாற்றிவிடும். ஓநாய்கள் அந்த நிலத்தை அத்தகைய பேராபத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தன. ஓநாய்களுக்கு ஒருவிதத்தில் அங்கு வாழ்ந்த நாடோடிக் குழுக்களும் உதவிக்கொண்டிருந்தன. அவர்கள், ஹன் சீனர்களைப் போல் ஓரிடத்திலேயே தங்கி வாழ்பவர்கள் அல்ல. ஓரிடத்தில் புற்கள் தீர்ந்துவிட்டால், அங்கிருந்து இடம்பெயர்ந்து வளமையான வேறிடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அப்படியே இடம் மாறி மாறி, மீண்டும் அந்தப் பழைய இடத்திற்கு வருகையில் அங்கு பழைய வளமை திரும்பியிருக்கும்.

கால்நடைகள்
கால்நடைகள்

புற்கள் இயற்கையாக வளரக்கூடியவை. அவை வளர்வதற்கான நேரத்தை இந்த நாடோடி வாழ்க்கை முறை கொடுத்துக்கொண்டிருந்தது. சீனக் கலாசாரப் புரட்சி அவர்களை இடம்பெயர விடாமல் ஒரே இடத்தில் தங்கி வாழ கட்டாயப்படுத்தியது. அதனால், அவர்கள் புற்களைத் தீவிரமாக மேயவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உந்திய அதேநேரத்தில், இடம்பெயர்வதையும் நிறுத்தியதால் புற்கள் வளர்வதற்கான நேரம் கிடைக்காமல்போனது. பிரச்னை தீவிரமாகாமல் ஓநாய்கள்தான் அவ்வப்போது கால்நடைகளை வேட்டையாடி எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்து, சமநிலையை ஓரளவுக்குச் சமாளித்துக்கொண்டிருந்தன.

  • முதல் பாகத்தை கீழே காணலாம்!

`கடவுளின் தூதுவன்,  ராஜாவுக்கெல்லாம் ராஜா!' இது மங்கோலிய ஓநாய்களின் கதை பாகம்-1

ஒருவகையில் பார்த்தால், ஓநாய்களை 'ராபின் ஹூட்' எனவும் கூறலாம். ஆம், யாரிடமும் அதிக அளவில் கால்நடைகள் இருக்காமல் அவை பார்த்துக்கொண்டன. அதிகமாக ஒருவர் வைத்திருந்தால் அந்த எண்ணிக்கையைக் குறைத்து, அவர் யாரை விடவும் பெரியவர் இல்லை என்பதையும் அவ்வப்போது மங்கோலியர்கள் மத்தியில் நிரூபித்துக் கொண்டேயிருந்தன. ஆனால், உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென்ற குறிக்கோளோடு மட்டுமே இருந்த அப்போதைய சீன அரசாங்கத்தின் பார்வையில், ஓநாய்களின் இந்த ராபின் ஹூட் வேலை மிகப்பெரிய குற்றம். அங்கு நிறைய புல்வெளி உள்ளது. ஆகவே, அதை முற்றிலுமாகப் பயன்படுத்தி அந்த மக்கள் இன்னும் அதிகமாக கால்நடைகளை வளர்க்க வேண்டும். ஆனால், அதற்குப் பெரும் இடையூறாக இருப்பது ஓநாய்கள். அவை அடிக்கடி கால்நடைகளை வேட்டையாடிச் சென்றுவிடுவதால், கால்நடை உற்பத்தி குறைகிறது. அதைத் தடுக்க, அந்த நிலப்பரப்பிற்குப் பொறுப்பேற்றிருந்த ஹன் சீனர்கள், ஓநாய்களைக் கொத்துக் கொத்தாக வேட்டையாடத் தொடங்கினார்கள்.

மங்கோலிய ஓநாய்
மங்கோலிய ஓநாய்

ஆரம்பத்தில், அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. ஓநாய்களின் சாதுர்யத்திற்கு விவசாயிகளான அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால், அவற்றுக்கு நிகரான திறமைசாலிகளான மங்கோலிய நாடோடிகளையே ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். முதலில் டெஞ்சரின் தூதுவர்களை அழிக்க மறுத்தவர்களை அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்தி, தங்கள் நோக்கத்தை சாதித்துக்கொண்டனர். மங்கோலிய ஓநாய்களை மங்கோலியர்களைவைத்தே பெரிய அளவில் வேட்டையாடினார்கள்.

1980-ம் ஆண்டின் கணக்குப்படி, அங்கு ஆண்டுக்கு 5,000 ஓநாய்கள் கொல்லப்பட்டன. காலப்போக்கில் அவற்றின் எண்ணிக்கை குறைந்தது. அதன் விளைவாக, மேய்ச்சல் விலங்குகளின் எண்ணிக்கையும் ஏறி உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகமானது. கால்நடை வளர்ப்பையும் தீவிரமாக ஊக்கப்படுத்திய அரசாங்கம், மேன்மேலும் வளர்க்கவைத்தது. மேய்ச்சல் மிகத் தீவிரமாக நடந்து, புல்வெளி, பாலையாகத் தொடங்கியது. 1994-ம் ஆண்டில் சீனாவின் மொத்த நிலப்பரப்பில் பாலை வகித்த பங்கு 17.6 சதவிகிதம். அதுவே, 2007-ம் ஆண்டில் 27.5 சதவிகிதம். அதிகரித்த 9.9 சதவிகித பாலையில் நான்கில் மூன்று பங்கு மங்கோலியாவில் பாலையாக மாறியது பழைய புல்வெளிப் பகுதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் அங்கு 230 மீட்டர் முதல் 500 மீட்டர் உயரம் வரை எழும்பும் மணற்புயலால் மக்கள் தங்கள் உடைமைகளை இழக்கின்றனர். வீடுகளை இழக்கின்றனர். 1993-ம் ஆண்டு மே மாதத்தில், மூன்று நாள்களுக்குத் தொடர்ந்த மணற்புயலில் 85 பேர் உயிரிழந்தனர், 246 பேர் காயமடைந்தனர். 1,20,000 கால்நடைகள் உயிரிழந்தன; 4,440 வீடுகள் சேதமடைந்தன. மஞ்சள் டிராகனைப் போல் வானுயர எழுகின்ற அந்த மணற்புயலைக் கண்டாலே அங்கு வாழும் மக்கள் அஞ்சுகின்றனர்.

மங்கோலிய ஓநாய்
மங்கோலிய ஓநாய்
Peter Bolliger

கலாசாரப் புரட்சியின்போது ஏற்பட்ட இந்த மாற்றம் இன்றுவரை, மங்கோலியாவின் 70 சதவிகித புல்வெளியைப் பாலையாக்கிவிட்டது. அதற்கான காரணங்களில், அதிதீவிரமான மேய்ச்சல் 80 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், சோவியத் உடைந்த பிறகு ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம், பலரையும் கிராமங்களுக்குச் சென்று மீண்டும் தம் பூர்வீகத் தொழிலான மேய்ச்சலிலேயே ஈடுபட வைத்தது.

1990-களில் இருந்ததைவிட, இப்போது கால்நடைகள் இரண்டு மடங்கு அதிகமாகிவிட்டன. ஆனால், அவற்றைக் காப்பாற்ற அங்கு போதுமான அளவுக்கு அப்போது ஓநாய்கள் இருக்கவில்லை. உந்திய தீவிர மேய்ச்சல், பாலைமயமாக்கலை மேன்மேலும் தீவிரப்படுத்தியது.

இந்தச் சமநிலையின்மையால், 1980-களில் ஆண்டுக்கு 15,000 சதுர கிலோமீட்டர் என்ற விகிதத்தில் புல்வெளிகள் பாலையாகிக் கொண்டிருந்தன.

2004-க்குப் பிறகு ஆபத்தை உணர்ந்து அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளுக்குப் பின், அந்த வேகம் குறைந்துள்ளது. இருப்பினும், இப்போதும்கூட மங்கோலியாவின் உள்பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் 1,500 முதல் 2,000 சதுர கி.மீ அளவிலான புல்வெளி நிலம் பாலைவனமாகிக்கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் பாலைமயமாதலால் மட்டுமே, ஆண்டுக்கு சுமார் 31 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருப்பதாக உலக வங்கி கூறுகிறது. முன்னர் அதிகமாகக் கால்நடைகளை வளர்க்க வேண்டுமென்று மேய்ப்பர்களுக்கு அழுத்தம்கொடுத்த அரசாங்கமே, இப்போது கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்னையின் தீவிரம் புரியத் தொடங்கியவுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இருந்தாலும்கூட, அந்நிலத்தின் பூர்வீகக் குடிகளுடைய மரபு அறிவையும் நிலம் குறித்த அவர்களுடைய புரிதலையும் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் நினைக்கவில்லை. மாறாக, இந்தப் பாதிப்புகளுக்கு அவர்களைக் குறைகூறினார்கள். புல்வெளிகளை மீட்டுருவாக்கம் செய்யத் தொடங்கிய சீன ஆய்வாளர்கள், மேய்ச்சல் விலங்குகள் மேயாமலிருக்க வேலிகளை அமைத்தார்கள். வேலிகளால் நிலத்தைப் பாதுகாத்துவிட முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. அது இயற்கை கிடையாது. இயற்கையின் வழியிலேயே சென்று மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் மங்கோலிய நாடோடிச் சமூகங்களிடமிருந்து அந்நிலத்தைப் பற்றிய புரிதலைப் பெற முயன்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, செயற்கையான வழிகளையே பின்பற்றினார்கள்.

கலாசாரப் புரட்சியின்போது, 1967 முதல் 1980 வரை அரசு சார்பாக மேய்ச்சலில் பணிபுரியச் சென்ற மாணவர்களில் ஒருவராகச் சென்ற சென் ஜி குன் என்பவருக்கு அங்குள்ள நிலைமை நன்றாகப் புரிந்திருந்தது. அவர் எடுத்த தீவிர முயற்சியின் வழியே, உலக அளவில் இந்த முறையில் பாதுகாப்பது வேலைக்கு ஆகாது என்பது தெரியவந்தது. அவருடைய பல ஆண்டுக்கால முயற்சியால், இப்போதுதான் மங்கோலிய நாடோடிப் பழங்குடிகளின் மரபு அறிவைத் தங்கள் இயற்கைப் பாதுகாப்பு முயற்சியில் அமல்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். இருப்பினும், இயற்கையின் அந்தப் பழைய சமநிலை மீண்டும் அங்கு வர வேண்டுமென்றால், அதற்கு அந்தச் சாம்பல் ஓநாய்களின் பாதுகாப்பு அங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மங்கோலிய ஓநாய்
மங்கோலிய ஓநாய்
Peter Bolliger

கலாசாரப் புரட்சி தொடங்கிய நேரத்தில், மங்கோலியாவில் சுமார் 1,57,000 ஓநாய்கள் வாழ்ந்துள்ளன. பின்னர் பெரியளவில் அவற்றின் எண்ணிக்கை குறைந்து, 1980-களில் 30,000 என்று குறைந்தது. 1920-களில் இருந்தே, அவ்வப்போது வேட்டையாடப்படும் ஓநாய்களின் தோல்கள் மங்கோலிய எல்லைகளில் கம்பளி செய்வதற்காக விற்கப்படும். அவை நல்ல விலைக்குப் போவதால், ஓநாய்களை வேட்டையாடும் நேரங்களில் மங்கோலியர்கள் அப்படிக் கொண்டுவந்து விற்றுவிட்டுப் போவார்கள். மங்கோலியர்கள் என்னதான் சீன அதிகாரிகளின் கட்டாயத்தால் அவற்றை வேட்டையாடினாலும் அவர்கள் ஓநாய்க் கறியைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சீனாவிலிருந்து வந்திருந்த வேட்டையாடிகளுக்கு டெஞ்சரைப் பற்றியோ ஓநாய்க்கு இருக்கின்ற மரியாதையைப் பற்றியோ கவலையில்லை. அவர்கள் அதை ருசித்துப் புசிக்கத் தொடங்கினார்கள். ஆகவே, மாமிசம் மற்றும் தோல் விற்பனையின் மூலம் சீன அரசு வேட்டையின் தீவிரத்தை முடுக்கிவிடவே, கலாசாரப் புரட்சிக்குப் பின்னால் ஓநாய் வேட்டை படுவேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலிருந்து 1985 வரையிலான காலகட்டத்திற்குள், அதிகாரபூர்வப் பதிவுகளின்படி மட்டுமே 3,13,153 ஓநாய்களின் தோல்கள் விற்கப்பட்டுள்ளன. ஓநாய்களை கிட்டத்தட்ட வெறிபிடித்ததைப் போல் வேட்டையாடியுள்ளார்கள்.

2004-ம் ஆண்டில், மங்கோலியா முழுக்க சுமார் 75,000 வேட்டைக்காரர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தனர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மையம் 2009-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்தது. அதில், ஓநாய்களை வேட்டையாடிக்கொண்டிருந்தவர்கள், ஆண்டுக்கு அதிகபட்சமாக 100 ஓநாய்களை வேட்டையாடிக்கொண்டிருந்தனர் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மையம் 2009-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்தது. அதன்பிறகுதான், ஓநாய் வேட்டைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, அவை பாதுகாக்கப்படத் தொடங்கியுள்ளன. இப்போது, மொத்த மங்கோலியாவிலுமாகச் சேர்த்து, சுமார் 10,000 ஓநாய்கள் இருக்கின்றன. அவை கூட்டமாகச் செயல்படுபவை. அவற்றின் வாழ்வியலைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

`ஏற்றத் தாழ்வுகளை அகற்றிய ராபின் ஹூட்' மங்கோலிய ஓநாய்களின் கதை... பாகம்-2

அமெரிக்காவின் யெல்லோஸ்டோனிலும் ஓநாய்கள் அதிகமாக இருந்தன. அவை அங்கிருந்த கால்நடைகளை வேட்டையாடிக் கொண்டிருந்ததால், அந்த மக்கள் இதேபோல் வேட்டையாடி அங்கிருந்த ஓநாய்களில் ஒன்றையும் விடாமல் கொன்று குவித்தார்கள். ஏனென்றால், தங்கள் முதலீட்டைக் கொன்று நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகிறதே என்று அவர்களுக்கு அவற்றின் மேல் அத்தனை கோபம். அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியலாளரும் சூழலியல் எழுத்தாளருமான ரெபெக்கா வாட்டர்ஸ் மங்கோலியாவில் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, அந்த மக்களிடம் அவர் அந்த விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர்கள் கேட்ட ஒரேயொரு கேள்வி,

"அப்படியொரு முட்டாள்தனத்தை உங்களால் எப்படிச் செய்ய முடிந்தது?"

அதுதான் அவர்கள். அந்த நிலத்திற்கு ஓநாய்கள் தேவை. அவசியமின்றி இயற்கை அதை அங்கு இருக்க விடவில்லை. இயற்கையைவிட மனிதர்கள் பெரிய மேதாவிகள் இல்லை. இதைப் புரிந்துகொண்ட அவர்களால் அப்படியொரு முட்டாள்தனத்தை நிச்சயமாக ஆதரிக்க முடியாது.

ஓர் ஓநாய் உங்கள் கால்நடையைக் கொல்கிறது என்றால், அது அதன் உள்ளுணர்வின்படி செயல்படுகிறது என்று அர்த்தம். இயற்கை அதற்குக் கொடுத்துள்ள வேலையும் அதுதான். ஓநாய் எந்தத் தவறும் செய்யாது.
- மங்கோலிய ஓநாய்கள், டி.டி.நரன்ஹூ
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு