Published:Updated:

14 வருடங்களுக்குப் பிறகு கோவை உயிரியல் பூங்காவில் பிறந்த ரோஸி பெலிகன்!

ச.கிருத்திகா
தயாளன் வ இர

பல ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்த பெலிகன் குஞ்சைக் காண, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்,

Rosy Pelican Chick
Rosy Pelican Chick

14 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் கோயம்புத்தூர் வ.உ.சி உயிரியல் பூங்காவில் ரோஸி பெலிகன் ஒன்று முட்டையிட்டு குஞ்சுபொறித்துள்ளது. 15 முதல் 20 ஆண்டுகள் வாழும் இந்த ரோஸி பெலிகன் ஒரு மாதத்துக்கு முன்பு இரண்டு முட்டைகளை இட்டது. அதிலிருந்து தற்போது அழகிய பெலிகன் குஞ்சு ஒன்று பிறந்துள்ளது. பறவைகள், மிருகங்கள் என மொத்தம் 535 இனங்கள் இருக்கும் வ.உ.சி உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 ரோஸி பெலிகன் வாழ்கின்றன. இரண்டு ஆண்டுகளாக மிருகக்காட்சிசாலையின் இயக்குநராகப் பணிபுரிந்துவரும் ஈ.செந்தில்நாதன் இதைத் தெரிவித்தார்.

E.Senthil Nathan, Zoo Director
E.Senthil Nathan, Zoo Director

ரோஸி பெலிகன்கள் குறைந்த கருவுறுதல் வீதத்தைக் கொண்டிருப்பதாக அறியப்பட்டதால், மிருகக்காட்சிசாலையில் ஒரு ஃபெலிகன் குஞ்சு பொறிக்க ஊழியர்கள் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டனர். உயிரியல் பூங்கா அதிகாரிகள், பிறந்த பெலிகன் குஞ்சுக்குச் சரியான முறையில் உணவும் பராமரிப்பும் அளிப்பதாகவும், சரியான சுகாதாரம் மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதால் இதுவரையிலும் எந்தவித நோய் தொற்றும் வராமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 2 அல்லது 3 மாதங்களுக்குத் தாய் பறவையின் பராமரிப்பில் அது விடப்பட்டுள்ளது. தாய் பெலிகன் பறவைக்கும் முட்டைக்கும் எந்த வித தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த முறை பெலிகன் பறவை முட்டையிட்டதிலிருந்து குஞ்சு பிறக்கும் வரை ஒரு நபர் மட்டுமே பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இன்று, சில பகுதிகளில் அதிக மீன் பிடிப்பு நடப்பதால், பெலிகன்கள் உணவைக் கண்டுபிடிக்க நீண்ட தூரம் பறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பெலிகன்கள் பல காரணங்களுக்காகச் சுரண்டப்படுகின்றன. அவற்றின் பை (pouch) புகையிலை பைகள் தயாரிக்கவும், அவற்றின் தோல் லெதர் தயாரிப்புக்காகவும், அதன் குட்டியின் கொழுப்பு சீனாவிலும் இந்தியாவிலும் பாரம்பர்ய மருத்துவத்துக்காக எண்ணெய்களாக மாற்றப்படுகிறது. எத்தியோப்பியாவில், பெரிய வெள்ளை பெலிகன்கள் அவற்றின் இறைச்சிக்காகக் கொள்ளப்படுகின்றன. மனித இடையூறு, தூர வாழ்விடங்கள் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களின் இழப்பு, அத்துடன் மாசுபடுதல் ஆகியவை பெலிகனின் வீழ்ச்சிக்குப் பங்களிக்கின்றன.

இத்தகைய நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்த பெலிகன் குஞ்சை காண பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குஞ்சு பெலிகனைக் கண்டு மகிழ்வதோடு மக்கள் அழிவுநிலையில் இருக்கும் இனங்களைக் காக்க விழிப்புணர்வும் முயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.