சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

என்ன செய்கின்றன வேட்டை நாய்கள்?

வேட்டை நாய்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள்

விலங்குகள்மீதான வதை என்பதைத் தாண்டி ‘வனவிலங்குப் பாதுகாப்பு' என்கிற அம்சமும் சேர்ந்து கொண்டதால், வேட்டை எப்போதோ தடை செய்யப்பட்டுவிட்டது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது, கூடவே மாட்டு வண்டிப் பந்தயம், வேட்டை போன்ற தமிழர்களின் மேலும் சில திருவிழாக்களை ஒட்டிய விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்து மெரினாவில் நிகழ்த்திய போராட்டம், ஜல்லிக்கட்டுமீதான தடையை உடைத்தது. தொடர்ந்து மாட்டு வண்டிப் பந்தயங்களும் காவல் துறை அனுமதியுடன் நடக்கத் தொடங்கின. ஆனால் வேட்டை?

என்ன செய்கின்றன வேட்டை நாய்கள்?

விலங்குகள்மீதான வதை என்பதைத் தாண்டி ‘வனவிலங்குப் பாதுகாப்பு' என்கிற அம்சமும் சேர்ந்து கொண்டதால், வேட்டை எப்போதோ தடை செய்யப்பட்டுவிட்டது. திருவிழா மற்றும் விசேஷ தினங்களில் பாரம்பரியமாகச் சில பகுதிகளில் வேட்டைக்குச் செல்வதுண்டு. அதற்கும் இப்போது அனுமதி கிடையாது. ஜல்லிக்கட்டு, ரேஸ் போன்றவற்றிற்காகக் காளைகள் வளர்ப்பதுபோல் வேட்டைக்காகவே பிரத்யேகமாக நாய்கள் வளர்ப்பதென்பது தென்மாவட்டங்களில் வழக்கம்.

தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதிகளான விளாத்திகுளம், வேம்பார், கோவில்பட்டி தொடங்கி விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன இந்த வேட்டை நாய்கள். தொலைவிலிருந்து பார்த்தாலே மிரள வைக்கும் ஆஜானுபாகுவான இந்த நாய்கள் வேட்டை இல்லாத சூழலில் இப்போது என்ன செய்கின்றன? இவற்றின் எஜமானர்கள் இவற்றை எப்படிப் பராமரிக்கிறார்கள்?

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரத்துக்குக் கிழக்கே உள்வாங்கி இருக்கும் கல்குமி கிராமத்தில் வேட்டை நாய்களை வளர்த்து வரும் சங்கு ராஜிடம் பேசினேன்.

விஜய்
விஜய்

‘‘வாரம் ஒருநாள் சாயங்காலமானா கூட்டமா கிளம்பிடுவோம். அக்கம் பக்கத்து ஊர்க்காரங்க எல்லாம் ஒண்ணாக் கூடி பல மைல் தூரம் காடுகளுக்குள் போவோம். முப்பது நாப்பது நாய்களுக்கு மேல சேர்ந்திடும். முயல், நரி, காட்டுப்பன்னின்னு எது சிக்குதோ அதை வேட்டையாடித் திரும்புவோம். சில சமயம் வீடு திரும்ப ரெண்டு மூணு நாள்கூட ஆகும்.

இந்தப் பகுதிகளெல்லாம் வானம் பார்த்த பூமிங்கிறதால கோடையில் காட்டு வேலைகள் இருக்காது. அந்த நாள்கள்ல அடிக்கடி போறதுண்டு. பிறகு பொங்கலுக்கு மறுநாள் ‘கரிநாள் வேட்டை'யும் கன ஜோரா இருக்கும். ஜல்லிக்கட்டு விவகாரம் ஆரம்பிச்சதுதான் தாமதம், எங்களுக்கும் பிரச்னை வரத் தொடங்குச்சு. வேட்டைக்குன்னு பசங்க கிளம்பினாலே எப்படியாவது சம்பந்தப்பட்ட ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் போய், அவங்க வந்து எச்சரிக்கை விட்டதெல்லாம் நடந்தது. இப்ப போலீஸுக்கு பயந்து எதுக்கு ரிஸ்க்னு எங்க ஊர்ல யாரும் போறதில்லை” என்கிறார் சங்குராஜ்.

‘வேட்டை இல்லாத நிலையில் இந்த நாய்களை எப்படிப் பராமரிக்கிறீர்கள்' என, தன் வீட்டில் நான்கு வேட்டை நாய்களை வளர்க்கும் கல்குமிக்குப் பக்கத்து ஊரான ஓட்டுச்சாவடியைச் சேர்ந்த விஜய்யிடம் கேட்டேன்.

என்ன செய்கின்றன வேட்டை நாய்கள்?

“பொதுவா வேட்டை நாய்களுக்குச் சாப்பாடு நிறைய போடக் கூடாது. நல்லா சாப்பிட்டு வளர்ற நாய்களால பாய்ஞ்சு வேட்டையாட முடியாது. ஒரு சாதா நாயைக்கூட ஆறு மாசத்துல நல்ல வேட்டை நாயா ஆளாக்கிடலாம். முக்கியமா நீச்சல் பயிற்சி தரணும்’' என்றவர் தற்போதைய நிலை குறித்தும் தொடர்ந்தார்.

‘‘ரேஸ் காளைகளைப் பராமரிக்கறதுபோல இதுங்களைப் பராமரிக்கறதுக்குச் செலவெல்லாம் ஆகாது. ஆனா என்ன ஒரு வேதனைன்னா, இன்னைக்குப் பெரும்பாலான வேட்டை நாய்கள் வேட்டை இல்லாததால ஆரோக்கியம் கெட்டுப் போய் நோய்க்கு ஆளாகி சமயங்களில் இறந்தும்போகின்றன.சில வீடுகள்ல இதுங்களைக் கண்டுக்காமலேயே விட்டுடுறாங்க. அதுங்களாகவே கிடைக்கிறதைத் தின்னுட்டுத் தெருநாயா மாறிடுதுங்க'' என்கிறார் விஜய்.

காவல்துறையில் பணிபுரியும் நாகராஜ் ரேஸ் காளைகள், நாய் என வளர்த்துவருகிறார்.

‘‘என் அப்பா பெரிய ரேஸ் பிரியர். அவர் காலத்துல எங்க வீட்டுல ரேஸ் மாடுகள் இருந்தன. இப்ப நான் போலீஸ்ல இருந்தாலும் அப்பாவுடைய ஆசைப்படி ஒரு செட் ரேஸ் மாடு வாங்கி வளர்த்துட்டு வர்றேன். மாட்டு வண்டிப் பந்தயத்துக்குக் காவல்துறை அனுமதி இருக்கறதால அதுல எந்தப் பிரச்னையும் இல்லை.

என்ன செய்கின்றன வேட்டை நாய்கள்?

ஆனா வேட்டைக்கு சட்ட பூர்வமான அனுமதி கிடையாது. ஆனா பொங்கல் மாதிரியான பண்டிகைகளை ஒட்டி வேட்டைக்குப் போறது கிராமப்புறங்கள்ல மக்களுடைய உணர்வு தொடர்பான விஷயமா இருக்கிறதால அப்ப போலீஸ் கொஞ்சம் மென்மையா நடந்துக்கிடறாங்கன்னு நினைக்கிறேன்.

வேட்டை நாய்களைப் பராமரிக்கிறது ஒண்ணும் அவ்வளவு சிரமமான வேலை இல்லை. இதுக்குன்னு தனியா செலவெல்லாம் கிடையாது. நகரங்கள்ல பாது காப்புக்காகவும் சிலர் கௌரவத்துக் காகவும்கூட அதிகமா விலை கொடுத்து நாய்களை வாங்கி வளர்க்கிறாங்க.

கிராமம், நகரம்னு வித்தியா சமில்லாம குற்ற நடவடிக்கைகள் பெருகிட்ட இந்தக் காலகட்டத்துல வீட்டுப் பாதுகாப்புக்காக இந்த நாய்களை வளர்க்கலாம். ஒரு வேட்டை நாயின் உருவமும் தோற்றமுமே தப்பான நோக்கத்துடன் அணுகுகிற வங்களுக்கு பயத்தைத் தரும். அதனால வேட்டை இல்லாட்டியும் ஓட விடறது, நீச்சல் விடறது மாதிரியான வழக்கங்களை நிறுத்தாமச் செய்திட்டிருந்தோம்னா, வீட்டுல ஒரு உறுப்பினரா அதுங்க பாட்டுக்கு நமக்குப் பாதுகாப்பு தந்துக்கிட்டிருக்கும்'' என்கிறார் நாகராஜ்.