Published:Updated:

புலிக்குளம் காளை... ஜல்லிக்கட்டில்... பாயும் புலி! கழனிக்காட்டில்... கலக்கும் கில்லி!

புலிக்குளம் காளை
பிரீமியம் ஸ்டோரி
புலிக்குளம் காளை

கால்நடை

புலிக்குளம் காளை... ஜல்லிக்கட்டில்... பாயும் புலி! கழனிக்காட்டில்... கலக்கும் கில்லி!

கால்நடை

Published:Updated:
புலிக்குளம் காளை
பிரீமியம் ஸ்டோரி
புலிக்குளம் காளை
* பூர்வீகம் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த புலிக்குளம் கிராமம். இந்த ஊர்ப் பெயரிலேயே புலிக்குளம் காளை என அழைக்கப்படுகிறது. *காலையும் மாலையும் பொதுமக்கள் நேரடியாகப் பால் வாங்கிக்கொள்ளலாம். ஒரு லிட்டர் 40 ரூபாய்.

மிழர்களின் பாரம்பர்ய விளையாட்டு ஜல்லிக்கட்டு. பொங்கல் விழாக் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். வாடிவாசலில் சீறும் காளைகள், அவற்றை அடக்கும் வீரர்கள் எனப் பொங்கல் பண்டிகையை உலகமே உற்று நோக்க வைத்ததில் ஜல்லிக்கட்டுக்குப் பெரும் பங்குண்டு. வாடிவாசலில் புழுதியைக் கிளப்பியபடி, புலிப்பாய்ச்சல் பாய்ந்து வரும் காளைகளில் முக்கிய இடத்தில் இருப்பவை புலிக்குளம் காளைகள். ஜல்லிக்கட்டுக்காகவே இந்த இனத்தைப் பெரும்பாலும் வளர்க்கிறார்கள். ஆஜானுபாகுவான உருவத்தில், கொம்பு முளைத்த சிங்கமாகக் களத்தில் நின்று ஆடும் புலிக்குளம் காளைகள் பார்வையாளர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்பவை.

புலிக்குளம் காளைகளின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த புலிக்குளம் கிராமம். இந்தரகக் காளைகளின் வீரத்துக்கு ஒரு வரலாறு சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள். “புலிக்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் குடிக்க வந்த புலியை தனது கூரிய கொம்புகளால் குத்தி கொன்றது இந்த இன காளை ஒன்று. புலிகளையே குத்திக்கொள்ளும் திறன் கொண்டிருந்ததால், இந்த இனத்துக்கே புலிக்குளம் என்கிற பெயர் நிலைத்துவிட்டது” என்பதுதான் அந்த வரலாறு.

புலிக்குளம் காளையைப் பற்றிப் பேசும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ‘‘கூர்மையான கொம்பு, நடுத்தர உயரம், வலிமையான உடல், திடமான திமில் கொண்டவை புலிக்குளம் காளைகள். இவை பெரும்பாலும் சாம்பல் நிறம் மற்றும் அடர் சாம்பல் நிறங்களில் இருக்கும். எல்லாப் பருவநிலையையும் தாங்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. மிகவும் ஆக்ரோஷமான, கோபக்கார காளையாகப் பார்க்கப்படும் புலிக்குளம் காளை, பாசத்தையும் கொண்டவை. சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றது. கிடை மாடாகவும் புலிக்குளம் மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பாளர்கள் புலிக்குளத்தை நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். ஜல்லிக்கட்டில் பெயர் எடுத்துக் கொடுக்கும் காளைகள் 5 லட்சத்துக்கும் அதிகமாக விலை போகும்’’ எனச் சிலாகிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகளவு வளர்க்கப்படுகிறது. இத்தனை சிறப்புகள் இருந்தாலும், அழியும் நிலையிலிருந்தது இந்த இனம். நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு காரணமாக, தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் இதற்கென ஆராய்ச்சி நிலையம் அமைக்க உத்தரவிட்டு, அது நடைமுறைக்கு வந்துள்ளது.

புலிக்குளம் கன்றுகள்
புலிக்குளம் கன்றுகள்

புலிக்குளம் மாடுகளை வளர்க்கும் சிலரிடம் பேசினோம். சிங்கம்புணரி மேலப்பட்டி கிராமத்தில் புலிக்குளம் ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கும் பிரகாஷ், ‘‘நாங்க பாரம்பர்ய விவசாயக் குடும்பம். அதனால கால்நடைகள் எப்பவும் எங்க வீட்டுல இருக்கும். இடைப்பட்ட காலத்தில மாடுக இல்லாம இருந்துச்சு. நல்ல நாட்டு மாடு வாங்க முடிவு செஞ்சு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புலிக்குளம் ரகத்துல பல்லு போடாத கன்று ஒண்ணு வாங்குனேன். இப்ப அதுக்கு 6 பல்லு முளைச்சுருச்சு. திருப்பூர், மணப்பாறைனு பல ஊரு வாடி (வாடிவாசல்) பார்த்துருச்சு. பல இடத்துல பரிசுகளையும் தட்டியிருக்கு.

பிரகாஷ்
பிரகாஷ்

கழனி தண்ணியும் பச்சைப்புல்லும் போதும்

பொதுவா மாடுகளுக்குச் சோளத்தட்டை, தீவனப்புல் வகைகள், பருத்தி, கோதுமை தவிடுனு தேவையானதைக் கொடுத்து வளக்குறாங்க. ஆனா புலிக்குளம் காளைகளுக்கு மெனக்கெட்டு உணவு வைக்கணும்னு அவசியம் இல்ல. வீடு, கழனி தண்ணியைக் குடிச்சு, பச்ச புல்லை மேய்ஞ்சு உடம்பைத் தேத்திக்கிடும். அந்த அளவுக்கு ஊக்கமான மாடு. விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்திக்கலாம். கழனியில ஏர் ஓட்டினா கில்லி மாதிரி வேல செய்யும். இதோட திமிலுக்கு நுகத்தடி நல்லா உக்காரும். தொடர்ந்து 5 மணி நேரம் உழவு ஓட்டலாம். ஆனா, டிராக்டர் வருகைக்குப் பிறகு உழவு வேலைகளுக்குப் பயன்படுத்துறது குறைஞ்சிடுச்சு. அதேமாதிரி பசுமாடுகள் பாலும் கறக்கும். அத வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திக்கலாம். நாட்டு மாட்டுப் பால் ஆரோக்கியமானது. உடம்புக்குத் தெம்பூட்டக்கூடியது. மலையில வளர்ந்த புலிக்குளம் மாட்டோட கண்டுதேன் (கன்று) நான் வளக்குற கருப்பன். கண்டா இருக்கும்போதே 40 ஆயிரத்துக்கு வாங்குனேன். இப்ப இதோட மதிப்பு ஒரு லட்சத்துக்கும் மேல. புலிக்குளம் மாடுகள்ல நல்லா பேரு எடுத்த காளைகள் 2 லட்சத்தில இருந்து 4 லட்சம் வரை கூட வெல (விலை) போகும்.

எங்க வீட்டுக் கருப்பனை ஜல்லிக்கட்டுக்கு அனுப்பும்போது ஏ.கே.எஸ். கருப்பன்னுதான் பேரு கொடுப்போம். வீட்டாளுகளப் பார்த்தா சாந்தமாவே இருக்கும். வெளியாளுகள கண்டா வெறிச்சு எடுத்துபுடும். எங்கக்கூட ரெண்டு, மூணு பேரு புதுசா வந்துரக் கூடாது. முறைச்சு, முறைச்சு சீறி எடுத்துப்புடும். ஆனா வீட்டாளுககிட்ட அப்படியெல்லாம் நடந்துக்காது. வெளி ஆளுகளைக் கண்டாத்தே அளப்பறைய கூட்டும். மலை மாடு மாதிரி வளந்ததால என் மாடு, நல்லா மேயும். அதனால தெனமும் எங்க தோப்புல செத்த நேரம் கட்டிப்போடுவோம். ராத்திரிக்குத்தான் கட்டுத்தரை. தோப்புல நீளமான கயிறு போட்டுக் கட்டிப்போட்டிருவோம். அதனால காலார நல்லா நடந்துக்கும். கன்னுக்குட்டியா இருக்கும்போது வெள்ளச்சி மாதிரி தெரிஞ்சுச்சு. வளர வளர நெறம் மாறிக் காரி மாதிரி ஆயிருச்சு. புலிக்குளம் ரகத்தை நம்பி வளக்கலாம்.

புலிக்குளம் பாய்ச்சல்
புலிக்குளம் பாய்ச்சல்

கோபக்காரக் கருப்பன்

என் காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார் பண்ணிட்டா போதும் படுக்கவே படுக்காது. தீவனமும் எடுத்துக்காது. வம்பா குளுக்கோஸ் தண்ணி குடுத்தாக் குடிக்கும். அதையும் பிள்ளைக்குச் சங்குல குடுக்குற மாதிரி ஏச்சு, ஏச்சு கொடுப்போம். என் மாட்டுக்குக் கழுத்துல கட்டுற அடையாளம் மட்டும் 8,000 ரூபா. கழுத்துல அரியக்குடி மணி இருக்கும். வெட்டுக்கயிறும் 7,000 ரூபாய்க்கு மேல. இந்த வெட்டுக்கயிற திருச்சி போய்க் கட்டியாந்தோம். ஜல்லிக்கட்டு முடிச்சுட்டு 10 பேரு வீச்சு கயிறு போடுவோம். அந்த அளவுக்குக் கோவக்காரன். ஜல்லிக்கட்டு முடிஞ்சு மறுவடியும் வீட்டுக்கு வந்தாதான் குணமே மாறும். அதுவரைக்கும் சண்டியர்தேன். எங்க அண்ணே செந்தில் சிங்கம்புணரில பேமஸ் டாக்டர். ஆனா அவருக்கு எங்க மாடுன்னா உசுரு. அவர் மட்டுமில்ல, எங்க வீட்டாளுக எல்லாரும் பாசம் காட்டுவோம்” என்றார் பெருமையாக.

ஆராய்ச்சி மையம்
ஆராய்ச்சி மையம்

காளை, கிடேரி கன்றுகள் கிடைக்கும், அழைக்கும் ஆராய்ச்சி நிலையம்!

மானாமதுரை அருகே மாங்குளம் பகுதியில் சமீபத்தில் அரசால் தொடங்கப்பட்டுள்ள புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி மையத்துக்குச் சென்று பார்வையிட்டோம். சுமார் 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஆராய்ச்சி நிலையத்தில் 40 புலிக்குளம் பசுக்களும், 5 காளைகளும் இருந்தன. ஒரு பகுதியில் கன்றுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. கட்டடங்கள் மற்றும் பசுந்தீவனங்கள் உற்பத்தி செய்யும் வயல்வெளிகளும் இருந்தன. ஒன்றாக அடைக்கப்பட்ட பசுக்கள், நீளமான கொம்புகளைக் கொண்டு மான் கூட்டம்போல் சாதுவாக இருந்தன. அதற்கு நேர்மாறாகக் காளைகள் ஆக்ரோஷமாக இருந்தன. ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சத்தியமூர்த்தியும் மற்றும் உதவிப் பேராசிரியர் சீனிவாசன் இருவரும் புலிக்குளம் மாடுகள் தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்

காளை, கிடேரி கன்றுகள் கிடைக்கும்

சத்தியமூர்த்தி பேசும்போது, “புலிக்குளம் மாடுகள் தமிழகத்தின் பூர்வீக இனம். இந்த இன காளைகள், ஜல்லிக்கட்டுக்குச் சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூர்க்ககுணம் கட்டுப்படுத்த முடியாத அளவு ஆக்ரோஷமாக இருக்கும். சாம்பல் மற்றும் கறுப்பு நிறத்தில் மட்டும் காணப்படும். உயரம் 4 அடிவரை இருக்கும். திமில் வலிமையாகவும், கொம்புகள் கூர்மையாகவும் இருக்கும். 300 முதல் 350 கிலோ வரை எடை இருக்கும். பந்தைய மாடு, ஜல்லிக்கட்டு காளை, கிடைமாடு, விவசாய வேலை எனப் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. உயரம் சற்று குறைவாக இருப்பதால் வண்டிமாட்டுக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை. புலிக்குளம் காளையைப் பழக்கத்துக்குக் கொண்டு வருவது கடினம். ஆனால், பழக்கிவிட்டால் உரிமையாளர்களிடம் பாசமாக இருக்கும். ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து நடத்தும்போதுதான் இந்த இனங்களைக் காப்பாற்ற முடியும்.

சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது. புலிக்குளம் பசுக்கள், குறைந்த அளவுதான் பால் கொடுக்கும். கிடை மாடுகளின் சாணம் கேரளாவில் டீ மற்றும் காபி தோட்டங்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் மூலமாகத் தற்போது பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். மாணவர்கள், விவசாயிகள் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த இன மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள், தரமான காளை மற்றும் கிடேரி கன்றுகளை எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம். இங்கேயே பசுந்தீவனம் உற்பத்தி செய்வதால் விவசாயிகள் குறைந்த விலையில் தீவனமும் விற்பனை செய்கிறோம். சாணத்தின் மூலம் தயார் செய்யப்படும் மண்புழு உரங்கள், இடுபொருள்கள், பால் விற்பனையும் செய்கிறோம். காலையும் மாலையும் பொதுமக்கள் நேரடியாகப் பால் வாங்கிக்கொள்ளலாம். ஒரு லிட்டர் 40 ரூபாய். அரசு 2 கோடி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தியுள்ள இந்த ஆராய்ச்சி நிலையம் புலிக்குளம் காளைகள் பெருக்கத்துக்கான பணிகளைச் செய்து வருகிறது’’ என்றார்.

குழந்தைவேல்
குழந்தைவேல்

ஜல்லிக்கட்டுக்குப் பெயர்பெற்ற மாடு

புலிக்குளம் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் எம்.குழந்தைவேல், ‘‘சிங்கம்புணரியில ஆயில் மில் நடத்திக்கிட்டு இருக்கோம். பூர்வீகமாகவே எங்க வீட்டுல பல்வேறு நாட்டு இனப் பசுக்கள், ஜல்லிக்கட்டுக் காளைகள் நிறைய இருக்கும். அதுல புலிக்குளம் மட்டும் 6 மாடுகள் இருக்கு. அதுல ஒரு மாடு நாலு பல்லுதான் போட்டிருக்கு. இந்த வருஷம்தான் வாடிக்குக் கொண்டு போறோம். என்ன மாதிரியே என் மகனுக்கும், பேரனுக்கும் மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டுல ஆர்வம். அதனால தேடித்தேடி மாடுகள வாங்கி வெச்சுருக்கோம். புலிக்குளம் காளைய பொறுத்தவரைக்கும் தீவனச் செலவு குறைவு. அதனால ராமநாதபுரம், சிவகங்கை ஒட்டுன வறட்சியான பகுதிகள்ல நிறைய வளத்தாங்க. நல்ல கன்றுக கூடுமான விலைக்கு விற்பனையாகும். அதனால கணிசமான லாபம் கிடைக்கும். முன்னாடியெல்லாம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு 90% புலிக்குளம் காளையத்தே விரும்புவாங்க. அதெல்லாம் இடைபட்ட காலத்துல குறைஞ்சுருச்சு.

மச்சம் இருக்க மாடு ஆக்ரோஷமா இருக்கும்

ஜல்லிக்கட்டுப் போராட்ட எழுச்சிக்குப் பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கு. புலிக்குளம் கறுப்பு வெள்ளை கலந்து பாக்க முடியும். சுத்த வெள்ளை ரெம்ப அபூர்வம். வால் முழங்காலுக்கு மேல இருக்கும். நாடி ஒட்டி இருக்கும். புலிக்குளம் காளையில மச்சம் இருக்க மாடுக ரெம்ப ஆக்ரோஷமா இருக்கும். உதைத் திறனும் அதிகமா இருக்கும். பெரிய அளவுப் பயிற்சி இல்லாட்டியும் நல்லா விளையாடும். எங்க மாட்டுக்குக் கண், மீன் மாதிரி இருக்கும். இந்த அமைப்பு நிறைய இருக்காது” என்றார் பெருமையாக.