Published:Updated:

பொன்னி அரிசி தையல், கம்பீரமான கழுத்து மணி... சிங்கம்புணரியின் சிறப்பு!

சிங்கம்புணரி
பிரீமியம் ஸ்டோரி
சிங்கம்புணரி

ஜல்லிக்கட்டு

பொன்னி அரிசி தையல், கம்பீரமான கழுத்து மணி... சிங்கம்புணரியின் சிறப்பு!

ஜல்லிக்கட்டு

Published:Updated:
சிங்கம்புணரி
பிரீமியம் ஸ்டோரி
சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் தென்னை மரங்கள் அதிகம். அதனால் தென்னை சார்ந்த உபதொழில்கள் அதிகளவு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கயிறு தயாரிக்கும் தொழில் இந்தப் பகுதியில் பாரம்பர்யமாகச் செய்யப்பட்டு வருகிறது. பிரசித்திபெற்ற கோயில்களின் தேர்த் திருவிழா வுக்கும் சிங்கம்புணரி கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

பெல்ட் தயாரிக்கும் பணி
பெல்ட் தயாரிக்கும் பணி

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு வண்ண வண்ண கயிறுகள், கழுத்துச் சலங்கைகள் (பெல்ட்) பாரம்பர்யமாக இங்கு தயாராகின்றன. பொங்கல் விழாவுக்காகத் தென் மாவட்ட விவசாயிகள் பலர், சிங்கம்புணரிக்கு வந்து தங்களது காளைகளுக்குக் கழுத்து மணி, கயிறுகளை வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கயிறு வியாபாரம் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்வதற்காக நாமும் சிங்கம்புணரி பகுதியில் வலம் வந்தோம்.

இங்கு தயாராகும் ஜல்லிக் கட்டுக் காளைகளுக்கான கயிறு குறித்துச் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் சிலரிடம் பேசினோம். “எங்க ஊர் பக்கம் கோயில்களுக்கு மாடுகள நேந்துவிடுற பழக்கம் அதிகம். குறிப்பா, சிங்கம்புணரி சேவுக (காளைகள்) மூர்த்தி அய்யனாருக்கு அதிகளவுல நேந்துவிடுவாங்க. அதனால கோயில் மாடுகளுக்குக் கழுத்து மணி, கயிறுகட்டுற வேலைக்காக வெளியே இருந்து ஆளுங்க வந்தாக. அப்படி வந்த வம்சா வழிகள்தான் இப்ப தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிற அளவுக்குக் கழுத்து மணி கட்டுறதுல கை தேர்ந்திருக்காங்க. ஜல்லிக்கட்டு காளைக்கு முதல் அலங்காரமே கழுத்துமணிதான். அது இல்லாம அலங்காரம் முழுமை ஆகாது. கழுத்து மணி சத்தம்தான் மாட்டுக்கு வேகத்தையும் வெறியையும் கொடுக்கும். வீட்ல பூனை மாதிரி வளர்ற காளைங்க புலியா மாறுறதுக்கு இந்தச் சத்தமும் ஒரு காரணம். மனுஷனுக்குக் கொட்டடிச்சா அருள் பிடிக்குற மாதிரி மாட்டுக்கு மணிதான் கிளர்ச்சியைக் கொடுக்கும். கழுத்துல கட்டுற மணிதான் அடையாளம். அதைக் கழுத்துல மாட்டிட்டா, ‘நாம ஜல்லிக்கட்டுக்குப் புறப்புட்டாச்சு’னு மாடும் மனசளவுல தயாராயிரும்” என்றனர் உற்சாகமாக.

பெயர் பொறிச்ச பெல்ட்
பெயர் பொறிச்ச பெல்ட்
கழுத்து மணி
கழுத்து மணி

கழுத்து மணி, கயிறு தயாரிப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் பாபுவிடம் பேசினோம். “எங்க பாட்டன், பூட்டன் காலத்தில இருந்து இதுதேன் எங்களுக்குத் தொழிலு. பொங்க சீஸன் நேரத்துல கயிறு கட்டிக் கொடுக்க முடியாது. அந்தளவுக்குக் கூட்டம் இருக்கும். மித்த நேரத்துல ஒண்ணு ரெண்டு ஆளுக வருவாக. எங்க அப்பாவுக்கு அப்புறம் நானு, என் தம்பிக ரெண்டு பேரும் இந்தத் தொழிலப் பாக்குறோம். ஆறேழு பேரு எங்ககிட்ட வேலை செய்றாக. சிங்கம்புணரி பகுதில மாட்டுக் கயிறு பின்றது எங்க அங்காலி, பங்காளி, மாமன் மச்சினங்கதான். அவுக அவுக தொழிலா பிரிஞ்சு பார்க்குறாக. ஆரம்பத்தில இருந்து கழுத்து மணியும் கயிறும் நல்லபடியா செஞ்சு குடுக்குறதால சிங்கம்புணரியத் தேடி வாராக.

நாங்க செஞ்சு கொடுக்குற கழுத்து மணியெல்லாம் காலத்துக்கும் கெடக்கும். கழுத்து மணியில இருக்கக் குஞ்சம்கூட விழுகாம, அமைப்பா இருக்கும். மாடு செத்துட்டாலும் அதோட கழுத்து மணிய வெச்சு சாமி கும்புடுறவுங்க நிறைய பேரு இருக்காக. கழுத்து மணி பெல்ட்டு மேல ஒவ்வொரு தையலும் உறுதியா இருக்கும். அப்படியே பொன்னி அரிசி கணக்கா அமைச்சு விட்ருவோம். கையில வெச்சு தையல பார்த்தாலே மாட்டுக்காரங்க ரசிக்கணும். அந்தளவுக்குச் சிறப்பா தையல் போடுவோம்’’ என்றவர், ஒரு பெல்ட்டை நம்மிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். நல்ல வேலைப்பாடுடன் இருந்தது.

பாபு
பாபு

‘‘கழுத்து மணிக்கு பெல்ட்டு, திண்டுக்கல்லதான் வாங்கிட்டு வருவோம். கழுத்து மணியைக் காரைக்குடி பக்கத்துல இருக்க அரியக்குடியிலயும், சாதா மணியைத் திண்டுக்கல் பக்கத்துலயும், ஆக்க மணியைக் கும்பகோணம் பக்கத்துலயும் வாங்குவோம். இதுல அரியக்குடி மணிச் சத்தம் ஒரு தினுசா இருக்கும். மணிச் சத்தம் ஆளுகள அரட்டிப்புடும். இந்தத் தெருவுல மாடு வந்தா அடுத்த தெருவுக்கு மணிச் சத்தம் கேக்கும். மணிகள்லயே பல ஐயிட்டம் இருக்கு. நாலு பல்லு, ஆறு பல்லு, எட்டு பல்லு இப்படி ஏகப்பட்ட தினுசு இருக்கு. ஒவ்வொரு மணிக்கும் இடையில கட்டுற குஞ்சம்தான் அழகக் கொடுக்கும். மாட்டுக்காரங்க கேக்குற டிசைன்ல குஞ்சம் கட்டிக்குடுப்போம். சிலர் வார், மணி, குஞ்ச நூல் எல்லாம் தனியா வாங்கிக் கொடுப்பாங்க. அவுகளுக்கும் இல்லேன்னு சொல்லாம அளவு பார்த்து வார் நறுக்கி செஞ்சு குடுப்போம்” என்றார்.

பாண்டி
பாண்டி
ரோகன்
ரோகன்

தனது மூன்று காளைகளுக்குக் கழுத்து மணி கட்ட வந்திருந்த பாண்டியிடம் பேசினோம். “மதுர உசிலம்பட்டி பக்கத்துல கொடிக்குளம்தே என் ஊரு. எங்க சியான் காலத்துல இருந்து சல்லிகட்டு மாடு வளர்க்குறோம். எத்தன மாடு வந்தாலும் அதுக்கு ‘மாயி’னுதே பேர் வெப்போம். இப்ப என்கிட்ட சுத்த காரி, சுத்த பனங்காரி, சுத்த விளையாட்டு மாடுனு மொத்தம் 3 மாடுக இருக்கு. இந்த மூணு ‘மாயி’யும் சல்லிக்கட்டுல ஆட்டம் ரொங்கிபுடுவாங்க. இதுக மூணையும் என் மக ரஷ்யாதான் பக்குவமா வளக்குது. 14 வயசுதான் என் மகளுக்கு. ஆனா மாடுகனா அம்புட்டு உசுரு. நான் பெரிய சம்சாரி. நிறைய வய வரப்பு, 2 டிராக்டரு இருக்கு. 2 நாட்டு பசுமாடும் வெச்சுருக்கேன். ஒரு டிராக்டர் வருமானத்தை என் மாடுகளுக்குதே செலவு செய்றேன். அதுக்கு ஏத்தாப்ல என் மாடுக பேரும் பரிசும் எடுத்துட்டு வந்துரும். ‘கொடிக்குளம் கொத்தால தேவர் பாண்டிமாடு’னு சல்லிக்கட்டுல பேரு சொன்னாலே பலபேரு அரண்டுருவாங்க. அப்புடிச் சுத்தி விளையாடுங்க. இப்படி இருக்க என் காளைகளுக்கு ஒவ்வொண்ணையும் பார்த்துதேன் செய்வேன். வர்ற பொங்கலுக்குச் சல்லியட்டுக்கு மாடுகள தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன். சியான் வெச்சுருந்த மணிக எல்லாத்தையும் சாமி போட்டோகிட்ட வெச்சு பாதுகாக்குறேன். இப்ப புதுசா மணிவாங்க சிங்கம்புணரி வந்தேன்” என்றார்.

மாடுகளுக்குக் கழுத்து மணி கட்ட வந்திருந்த காரைக்குடியை அடுத்த வேதியங்குடி இளைஞர் ரோகன், “நான் படிச்சுட்டுச் சென்னையில் நல்ல வேலையில் இருக்கேன். எங்க வீட்ல சின்ன வயசுல இருந்து மாடு இருக்கறதால, அதுக மேல ரெம்பப் பிரியம். அதனால மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு நடந்தாலே ஊர்ப்பக்கம் வந்துருவேன். இப்பகூடப் பொங்கலுக்கு ஒருமாச லீவுலதான் வந்துருக்கேன். எனக்கு ஜல்லிக்கட்டு மாடுனா இஷ்டம். ராமநாதபுரம் ரெட்ட கழுத்து மாடு, காங்கேயம் கிராஸ், இருசாதி’னு மூணு ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க்குறேன். அதுகளுக்குக் கயிறு மாத்தவும், கழுத்து மணி கட்டவும் சிங்கம்புணரி வந்தேன். சிங்கம்புணரில நல்லா செஞ்சு குடுப்பாங்க. நாம ஒரு யோசனையில வந்திருப்போம். ஆனா எது நல்லதோ அதைச் சொல்லி நமக்கு மணி கட்டிக் குடுப்பாங்க. அவங்க செய்றது ரெம்ப நுணுக்கமான வேலை. நேர்த்தியா செஞ்சு குடுப்பாங்க. மாட்டுக் கயிறு நுனியில நல்லா நூல் சுத்தி பந்து மாரி குடுப்பாங்க. அது நாம தூரமா இருந்து, கயிறு வீசி மாட்டைப் பிடிக்கும்போது நேக்கா உக்காரும். அந்த அமைப்புக்கு ஏத்தாப்ல செய்வாங்க. என் கழுத்து மணியில என் பேரு, போன் நம்பர் பொறிச்சு தகடு குடுப்பேன். அதையும் கழுத்து மணி பெல்ட்டுல வெச்சுகுடுப்பாங்க’’ என்றார் உற்சாகத்துடன்.