Published:Updated:

ஒரு ஜோடி ரூ.3,00,000... அசத்தும் ஹல்லிக்கர் இன நாட்டு மாடுகள்!

கால்நடைக்கான அழகுப் போட்டிக்குத் தயார்
பிரீமியம் ஸ்டோரி
News
கால்நடைக்கான அழகுப் போட்டிக்குத் தயார்

கால்நடை

றட்சியைத் தாங்கி வளரக்கூடியவை, நோய் எதிர்ப்பு சக்திகொண்டவை, கிடைக்கும் தீவனத்தை உண்டு தங்களைத் தற்காத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை என தென்னிந்திய நாட்டு மாடுகளுக்குப் பல சிறப்புகள் உண்டு. அந்த வகையில் தமிழகத்துக்கு காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் போன்ற இனங்களும் ஆந்திராவுக்கு ஓங்கோல், புங்கனூர்குட்டை போன்ற இனங்களும் இருப்பதுபோல கர்நாடகாவின் அடையாளமாக இருப்பது ஹல்லிக்கர் இன நாட்டு மாடுகள். இந்த மாடுகளைப் பற்றி அறிய அந்தப் பகுதியில் வலம்வந்தோம்.

ஒரு ஜோடி ரூ.3,00,000... அசத்தும் ஹல்லிக்கர் இன நாட்டு மாடுகள்!

ஹல்லிக்கர் இன மாடுகள் சங்கத்தின் உறுப்பினரும், ஹல்லிக்கர் நாட்டின மாடுகளை வளர்த்து வருபவருமான ஜெயபிரகாஷ் பக்கவள்ளியைச் சந்தித்தோம். “ ‘விவசாயத்தின் ஆன்மா கால்நடைகள்’ என்று எங்கள் மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள். தென்னிந்தியாவின் பழைமையான மாட்டினங்களில் ஹல்லிக்கரும் ஒன்று. இந்த மாடுகளைப் பரவலாக்கியது கொல்லா சமூகத்தின் உட்பிரிவான ஹல்லிக்கர் சமூகம். இவை, மைசூரை ஆண்ட சிக்கதேவராஜ் உடையார் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1572-1600) விஜயநகரத்திலிருந்து (மத்திய கர்நாடகா) மைசூருக்கு அருகேயுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அரண்மனையின் பால் மற்றும் வெண்ணெய் தேவைக்காகவும், இந்த இனத்தைப் பெருக்குவதற்காகவும் கொண்டு வரப்பட்டன. குதிரையை ஒத்த உயரமான கால்களும், சிறிய காதுகளும், மிரட்டும் கொம்புகளும், சதை தொங்காத சிறிய கழுத்தும், திமிரான திமிலும், ‘வி’ வடிவ அழகான முகமும் இந்த மாட்டின் சிறப்பம்சங்கள். ஹல்லிக்கர் இன மாடுகளிலிருந்துதான் அம்ரித் மஹால், கிளார் போன்ற கர்நாடகாவின் பிற நாட்டு மாட்டினங்கள் உருவாகின. நாட்டு மாட்டினங்களைப் பரவலாக்குவதற்காகவே ஒரு துறையை உருவாக்கியிருந்தார் தேவராஜ் உடையார். ஹல்லிக்கர் மட்டுமல்லாமல், இன்று மைசூரின் அடையாளமாக இருக்கும் அம்ரித் மஹால் மற்றும் மாதேஸ்வரா பெட்டா மாட்டினங்களுக்கும் சிறப்புப் பண்ணைகளை உருவாக்கி அந்த இனங்களைப் பரவலாக்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவருக்குப் பிறகு ஹைதர் அலி காலத்தில் ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கும், வீரர்களுக்கான உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் குதிரைகளுக்கு மாற்றாக இந்த மாடுகள் பயன்படுத்தப்பட்டன. ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் உழவு ஓட்ட, வண்டி இழுக்க, இனப்பெருக்கத் தேவைக்கு, போர் வேலைகளுக்கு எனக் காளைகளைத் தனித்தனியே பராமரிக்க உத்தரவிட்டார். அப்போது 60,000 மாட்டு வண்டிகள் மைசூர் அரசாங்கத்தில் இருந்தன என்று குறிப்புகள் சொல்கின்றன. மைசூர் அரசாங்கத்திலிருந்து அன்றைய மதராஸ் மாகாணம், திருவண்ணாமலை தீப கால்நடைச் சந்தை, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் ஆகியவற்றுக்கு இங்கிருந்து மாடுகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

 கால்நடைக்கான அழகுப் போட்டிக்குத் தயாராகி நிற்கும் ஹல்லிக்கர் காளை மாடுகள்
கால்நடைக்கான அழகுப் போட்டிக்குத் தயாராகி நிற்கும் ஹல்லிக்கர் காளை மாடுகள்

மகாராஷ்டிராவில் குதிரைக்கும் ஹல்லிக்கர் மாட்டுக்கும் இடையே ஓட்டப்பந்தயமே நடத்தப்படுகிறது. தென் கர்நாடக மாவட்டங்களான மண்டியா, ராம் நகர், சாம்ராஜ் நகர், கோலார், பெங்களூரு, மைசூரு ஆகிய பகுதிகளில் இந்த மாடுகள் அதிகம் காணப்படுகின்றன. கர்நாடக எல்லையை ஒட்டிய தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மாவட்டங்களிலும் அதிகம் வளர்க்கப்பட்டுவருகின்றன” என்றார்.

மகாராஷ்டிராவில் குதிரைக்கும் ஹல்லிக்கர் மாட்டுக்கும் இடையே ஓட்டப்பந்தயமே நடத்தப்படுகிறது.

தொடர்ந்து, மண்டியாவிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள பி.ஹோசள்ளி கிராமத்தில் இயற்கை விவசாயத்துக்காக ஹல்லிக்கர் மாட்டைப் பயன்படுத்திவரும் ஹேமந்த் என்பவரைச் சந்தித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எனக்கு நான்கு ஏக்கர் நிலம் இருக்கிறது. நெல்தான் முக்கியப் பயிர். நான் மூன்று ஹல்லிக்கர் மாடுகளை வளர்த்துவருகிறேன். இயற்கை விவசாயத்துக்கான சாணம், கோமியம் ஆகியவற்றை இதிலிருந்துதான் எடுத்துக்கொள்கிறேன். ஆண்டுக்கு 15 டன் எரு கொடுக்கிறது. இதன் மூலமாக 30,000 ரூபாய் மிச்சமாகிறது. வீட்டுத்தேவைக்கான பால், தயிர், நெய் கிடைக்கிறது. உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது. ஹல்லிக்கர் மாடு வேகமாக வளரும் தன்மைகொண்டது. எவ்வளவு வேலை கொடுத்தாலும் சளைக்காமல் செய்யும். மண்டியாவைப் பொறுத்தவரை வெயில் காலங்களில் அதிக வெயிலும், குளிர்காலத்தில் அதிக குளிரும் இருக்கும். இந்த இரண்டுவிதமான காலநிலைகளையும் அவை தாங்கி வளரும். மேயவிட்டால் செடி கொடிகளில் நுழைந்து காட்டு மாடுகளைப் போன்று நன்றாகவே நுழைந்து மேயும். இந்தப் பகுதியில் நெல் மற்றும் கரும்பு விவசாயம் அதிகம்.

 ஹல்லிக்கர் பசுக்கள் -   நிரஞ்சன் தன்னுடைய காளை மாடுகளுடன்
ஹல்லிக்கர் பசுக்கள் - நிரஞ்சன் தன்னுடைய காளை மாடுகளுடன்

அறுவடையான நெல்லை வயல்களிலேயே அடித்து நெல்லாக்கி விடுவோம். இதை ரைஸ்மில்களுக்கு மாட்டு வண்டி மூலம்தான் கொண்டு செல்கிறோம். இந்த மாடுகள் சர்வசாதாரணமாக ஐந்து டன் எடையுள்ள நெல் மூட்டைகளை இழுக்கும். கரும்பைக் கொண்டு செல்வதற்குப் பிற வாகனங்கள் வந்துவிட்டாலும், இந்த மாட்டுவண்டித் தொழிலை நம்பி இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றார்.

அவரைத் தொடர்ந்து, சிக்க மண்டியாவில் விற்பனைக்காகவே நாட்டு மாடுகளை வளர்த்துவரும் தேவ் என்ற இளைஞரைச் சந்தித்தோம். “சங்கராந்தியின்போது மாடுகளை நெருப்புத் தாண்ட வைப்பதைக் காலங்காலமாகப் பின்பற்றிவருகிறோம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் உழவு, அறுவடை என நிறைய வேலைகள் மாடுகளுக்கு இருக்கும். தொடர்ந்து சேற்றில் கால் வைப்பதால் மாட்டின் கால்கள் ஒருவித ஈரத்துடன் இருக்கும். சேற்றிலேயே நடமாடுவதால் அதன் கால்களில் சேற்றுப்புழுக்கள், பாக்டீரியா, வைரஸ்கள் தங்கிவிடுவதும் உண்டு. இதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக, வைக்கோல் போட்டு நெருப்பு பற்ற வைத்துத் தாண்டவிடுகிறோம். இதனால் மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் குறைவதோடு, உடம்பு சூடேற்றப்பட்டு, குளிர்கால நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை மாடுகள் பெறுகின்றன. பொதுவாக ஹல்லிக்கர் மாடுகள் வெப்பத்தை விரும்பும் மாடுகள். அதனால் இது போன்ற நெருப்பு தாண்டும் நிகழ்வு மாடுகளுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது” என்றவர் மேற்கொண்டு மாடுகள் விற்பனை குறித்து விளக்கினார்.

 நிரஞ்சன் குடும்பத்தினர்
நிரஞ்சன் குடும்பத்தினர்
ஹல்லிக்கர் மாடு வேகமாக வளரும் தன்மைகொண்டது. எவ்வளவு வேலை கொடுத்தாலும் சளைக்காமல் செய்யும்.

“என்னிடம் இரண்டு ஹல்லிக்கர் காளை மாடுகள் இருக்கின்றன. இரண்டும் எட்டு மாதங்கள் வயதுடையவை. ஐந்து மாத வயதில் வாங்கினேன். மூன்று மாதங்களில் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. காரணம் ஊட்டம்தான். தினமும் மாலையில் இரண்டு லிட்டர் பால், ஒரு நாட்டுக்கோழி முட்டை, காலையில் மக்காச்சோளம், கொள்ளு, காராமணியை ஒன்றாகச் சேர்த்து ஊறவைத்து, வேகவைத்து, நன்றாகக் கிண்டி உருண்டை பிடித்துச் சாப்பிட வைப்போம். இதோடு வைக்கோலும் பசுந்தீவனமும் கொடுப்போம். செரிமானத்துக்குச் சீரகமும் வெல்லமும் கலந்த வெந்நீரைக் கொடுப்போம். 6-8 மாதங்களில் கன்றுகளாக இருக்கும்போதே கொம்பைச் சுட்டு, அவற்றை நேராக வளரவிட வேண்டும். கொம்புகள் வளைந்திருந்தால் மாட்டின் அழகு குறைந்துவிடும். அதற்காக மாடுகளின் கொம்புகளை நேராக இருக்கும்படி வளரவிடுவோம். இந்த இரண்டு மாடுகளில் ஒன்றை 95,000 ரூபாய்க்கும், இன்னொன்றை 70,000 ரூபாய்க்கும் வாங்கினேன். இப்போதே 2,40,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள். 3,50,000-க்குக் கேட்டால் விற்பனை செய்துவிடலாம் என்றிருக்கிறேன்.

எப்படியும் 12 மாதங்களில் விற்பனை செய்துவிடுவேன். மாட்டின் கண்களைச் சுற்றி வெள்ளைத் தழும்புகள் இருந்தால், அந்த மாடுகளுக்குச் சந்தையில் நல்ல கிராக்கி இருக்கும். இரண்டிலிருந்து நான்கு பல் இருக்கும்போதே விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும்” என்று ஆலோசனையும் வழங்கினார் தேவ்.

‘‘இரண்டு மாடுகளில் ஒன்றை 95,000 ரூபாய்க்கும், இன்னொன்றை 70,000 ரூபாய்க்கும் வாங்கினேன். இப்போதே 2,40,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள். 3,50,000-க்குக் கேட்டால் விற்பனை செய்துவிடலாம் என்றிருக்கிறேன்.’’
 வளர்ப்பு காளை மாடுகளுடன் தேவ் -  ஹேமந்த் தன்னுடைய ஹல்லிக்கர் பசுக்களுடன்
வளர்ப்பு காளை மாடுகளுடன் தேவ் - ஹேமந்த் தன்னுடைய ஹல்லிக்கர் பசுக்களுடன்
 சளைக்காமல் வண்டியோட்டும் ஹல்லிக்கர்
சளைக்காமல் வண்டியோட்டும் ஹல்லிக்கர்

ஹொன்னநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாயியான வழக்கறிஞர் நிரஞ்சன், ஹல்லிக்கர் மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டுவருகிறார். ‘‘10 ஏக்கரில் தென்னை, எலுமிச்சை, சப்போட்டா, அத்தி ஆகியவற்றைச் சாகுபடி செய்துவருகிறேன். என்னிடம் 20 ஹல்லிக்கர் மாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பாலுக்காகவும் இயற்கை உரங்களுக்காகவும் பயன்படுத்துகிறேன். இதோடு ஹல்லிக்கர் காளைகளை வளர்த்து ரேக்ளா பந்தயத்துக்கும், கால்நடை கண்காட்சிகளுக்கும் அனுப்புகிறேன். அந்த வகையில் ஒரு ஜோடி காளை மாடுகளை 3,00,000 முதல் 5,00,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். ஒரு மாடு, ஒரு நாளைக்கு மூன்று முதல் ஆறு லிட்டர் வரை பால் கொடுக்கும். இந்த மாடுகளுக்குப் பெரிய பராமரிப்பு தேவைப்படாது. காய்ந்த வைக்கோல் புல்லும், கோதுமைத் தவிடு, அரிசித் தவிடு தண்ணீரும் போதுமானவை. முழுக்க மேய்ச்சல் முறையில் வளர்த்தால் தீவனமே தேவைப்படாது. காதுகளைத் தூக்கிக்கொண்டு மிரட்சியாகவே இருக்கும். பாயும் தன்மை மிகவும் குறைவு. மிக வேகமாக ஓடும். ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டி, உழவு, ஜல்லிக்கட்டு என அனைத்துக்கும் பயன்படுத்தலாம்” என்றார்.

ஹல்லிக்கர் நாட்டு மாடுகளை வளர்த்து விருதுகள், தங்க நாணயங்கள் குவித்த அபிநந்தனை மண்டியாவிலிருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள ஹொலலு என்ற ஊரில் சந்தித்தோம். “ஹல்லிக்கர் மாடுகள் சாம்பல், வெள்ளை, கறுப்பு, சிவப்பு (அமராவதி) ஆகிய நிறங்களில் இருக்கின்றன. அதிகமாக அடர் மற்றும் வெளிர் சாம்பல் நிறத்தில்தான் இந்த மாடுகள் இருக்கும். பொதுவாக வெள்ளை நிற மாடுகளை விரும்புவது மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. அதற்கான சந்தை மதிப்பும் அதிகம். அதற்காக வெள்ளை நிற மாடுகளாகப் பார்த்து வாங்கி வளர்த்து வருகிறேன்” என்றவர் தொடர்ந்து பேசினார்.

 கன்றுக்குட்டியுடன் ஜெயபிரகாஷ்
கன்றுக்குட்டியுடன் ஜெயபிரகாஷ்
‘‘மண்டியாவைப் பொறுத்தவரை வெயில் காலங்களில் அதிக வெயிலும், குளிர்காலத்தில் அதிக குளிரும் இருக்கும். இந்த இரண்டுவிதமான காலநிலைகளையும் அவை தாங்கி வளரும்.’’
 நெருப்புத் தாண்டும் நிகழ்வில்...
நெருப்புத் தாண்டும் நிகழ்வில்...

“கர்நாடகாவில் நாட்டு மாடுகளை வைத்திருப்பது பெருமையாகப் பேசப்படுகிறது. நான் மாடுகளைக் கால்நடைக் கண்காட்சியில் கலந்துகொள்ளச் செய்வதற்காக வளர்த்து வருகிறேன். என்னிடமிருக்கும் மாடுகள் இரண்டரை ஆண்டுகள் வயதுள்ளவை. நான் நாலரை லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது 7,50,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள். கொம்புகள் நேராக இருப்பதற்காக அவற்றைச் சீவி, தட்டிக்கொண்டு செம்மண் வைத்துக் கட்டியிருக்கிறோம். எங்கள் காளைகள் எந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டாலும் பரிசுகளைத் தட்டிக்கொண்டு வந்துவிடும். பரிசுப் பொருள்களைவிட நாட்டுமாடுகளுக்கு மக்கள் மத்தியில் ஓர் அங்கீகாரம் கிடைப்பதுதான் பெருமையாக உள்ளது” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

ஜெயபிரகாஷ், செல்போன்: 97414 79779

நிரஞ்சன், செல்போன்: 80734 84942

தேவ், செல்போன்: 99640 09966

அபிநந்தன், செல்போன்: 97439 93399

இந்த மாடுகள் எங்கு கிடைக்கும்?

ர்நாடக மாநிலத்தில் பொங்கலுக்குப் பிறகு மண்டியா, ராம் நகர், மைசூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் காட்டி, முடுக்குத்துறை, மாகுடி, சுன்சுன்கெட் ஆகிய இடங்களில் கால்நடைக் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்தக் கண்காட்சியில், போட்டிக்கான மாடுகளை வாங்கலாம்.

பெங்களூரைச் சுற்றியுள்ள கனகபுரா, ராம் நகர், சாம்ராஜ் நகர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. அங்கே உழவு, வண்டி இழுக்கும் மாடுகள் அதிகம் விற்பனைக்கு வரும். கால்நடைச் சந்தையில் ஒரு மாடு 30,000 முதல் 40,000 ரூபாய் விலைக்குக் கிடைக்கும். கண்காட்சியில் 80,000 முதல் 3,00,000 ரூபாய் வரை ஒரு மாடு விலை போகிறது. தும்கூர் மாவட்டம், குனிகெனஅள்ளியில் கர்நாடக அரசின் ஹல்லிக்கர் கால்நடை இனவிருத்தி மையம் இருக்கிறது. அங்கேயும் இதன் உறை விந்தணுக்குச்சிகள் மற்றும் மாடுகள் கிடைக்கும்.

கை கொடுக்கும் கன்று விற்பனை!

கை கொடுக்கும் கன்று விற்பனை!
கை கொடுக்கும் கன்று விற்பனை!

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னசந்திரம் கிராமத்தில் நாட்டு மாடுகளை வளர்த்துவரும் பாலாஜியிடம் பேசினோம். “எங்ககிட்ட எட்டு நாட்டு மாடுகள் இருக்கு. இது ஹல்லிக்கர் மாடு என்றெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக நாட்டு மாடுகள் என்றழைப்போம். மூணு ஏக்கர் நிலம் இருக்கு. நாங்க எருவுக்காகவும், பால் தேவைக்காகவும், கன்று விற்பனைக்காகவும் மாடுகளை வளர்க்கிறோம். காட்டுல, வயல்கள்லதான் மேய்க்கிறோம். ரொம்ப சாதுவான மாடுகள். நாங்க மாட்டுக்கு எந்தச் செலவும் செய்யறதில்லை. அதுதான் எங்களுக்கு செல்வத்தைக் கொடுத்துட்டு இருக்கு. கடலைக்கொடி, வைக்கோல், கொள்ளுப்பொட்டு, அவரைப்பொட்டுனு காய்ஞ்ச எந்தப் பொருளையும் இயல்பா சாப்பிடும். கலப்பின மாடுகளுக்கு ரொம்பவே மெனக்கெடணும். நாட்டு மாடுகளுக்கு அந்த மெனக்கெடல் இல்லை. இன்றைக்கு கன்று விற்பனை, நாட்டு மாடு வளர்ப்புல நல்ல வருமானம் கொடுக்கக் கூடியதா இருக்கு. ஆறு மாசம் வளர்ந்த கன்றுகூட 25,000 ரூபாய்க்கு விற்பனையாகுது” என்றார் நெகிழ்ச்சியோடு.