Published:Updated:

"மாடு மேய்க்கிறது அவ்வளவு சாதாரண வேலையில்லை!" - பொன்னம்மாளின் அனுபவம் #NoMoreStress

Ponnamma ( தே.தீட்ஷித் )

"மாடு கன்னு மேய்ச்சு, அது தந்த வருமானத்துலதான் பல குடும்பங்கள் முன்னேறி இருக்கு. எவ்வளவு வறட்சி வந்தாலும், ஒரு குடும்பம் பொழைக்க, ஒரு முருங்கை மரமும், ஒரு பசுமாடும் இருந்தா போதும். எந்த வறட்சியும் ஒரு குடும்பம் சடார்னு தாண்டிரும்!"

"மாடு மேய்க்கிறது அவ்வளவு சாதாரண வேலையில்லை!" - பொன்னம்மாளின் அனுபவம் #NoMoreStress

"மாடு கன்னு மேய்ச்சு, அது தந்த வருமானத்துலதான் பல குடும்பங்கள் முன்னேறி இருக்கு. எவ்வளவு வறட்சி வந்தாலும், ஒரு குடும்பம் பொழைக்க, ஒரு முருங்கை மரமும், ஒரு பசுமாடும் இருந்தா போதும். எந்த வறட்சியும் ஒரு குடும்பம் சடார்னு தாண்டிரும்!"

Published:Updated:
Ponnamma ( தே.தீட்ஷித் )

சரியாகப் படிக்காத மாணவனைப் பார்த்து, `நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என்று சில ஆசிரியர்கள் விமர்சனம் செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம். நம்மில் பலருக்கும் அந்த அனுபவங்கள் கிடைத்திருக்கும். இரண்டு பேருக்கு நடுவே சண்டை வந்தால், `மாடு மேய்க்கிறவன் மாதிரி பேசாதே...' என்று கடிந்து பேசுவதைக் கேட்டிருப்போம். மாடு மேய்க்கும் தொழில் அவ்வளவு எளிதானதா? மாடுகளை மேய்ப்பதுடன் அவற்றில் பால் கறந்து விற்று பிழைப்பு நடத்தும் பொன்னம்மாள் என்ற பாட்டியிடம் இதுபற்றி கேட்டோம்.

Ponnamma
Ponnamma
தே.தீட்ஷித்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள செல்லரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். நான்கைந்து மாடுகளை வைத்துப் பராமரிக்கும் இவர், அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது, அவற்றில் பால் கறந்து விற்பது, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்துவது எனச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மாடுகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பழுதில்லாமல் குடும்பத்தை நகர்த்தி வருவதாக பெருமிதமாகச் சொல்கிறார். இரண்டு பெண் பிள்ளைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுக்கவும், ஒரு மகனுக்கு நல்ல முறையில் திருமணம் பண்ணவும் மாடுகள் மூலம் கிடைத்த வருமானமே உதவியதாகச் சொல்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாடுகளுக்குத் தண்ணீர் காட்டுவது, வைக்கோல் அள்ளிப் போடுவது, இரண்டு கைகளிலும் இரண்டு விளக்குமாறுகளைக் கொண்டு மாடுகள் கட்டியிருக்கும் கூடத்தை கூட்டிச் சுத்தப்படுத்துவது என பிஸியாக இருந்த பொன்னம்மாளிடம் பேச்சுக் கொடுத்தோம். "மாடு மேய்க்கிறதை கேவலமா பார்க்கிற நிலைமைதான் இன்னமும் இருக்குதான். ஆனா மாடு கன்னு மேய்ச்சு, அது தந்த வருமானத்துலதான் பல குடும்பங்கள் முன்னேறி இருக்கு. எவ்வளவு வறட்சி வந்தாலும், ஒரு குடும்பம் பொழைக்க, ஒரு முருங்கை மரமும், ஒரு பசுமாடும் இருந்தா போதும். எந்த வறட்சியும் ஒரு குடும்பம் சடார்னு தாண்டிரும்னு நாட்டுப்புறத்துல சொல்வாங்க. அந்த அளவுக்கு மாடு மனுஷப்பிறவிகளுக்கு தேவையா இருக்கு.

Ponnamma
Ponnamma
தே.தீட்ஷித்

நான் இங்க வாக்கப்பட்டு வந்து, 35 வருஷம் ஆகுது. நான் பொறந்த வூட்டுல பதினைஞ்சு, இருபது மாடுகளோடதான் வளர்ந்தேன். அதிகம் படிக்கலை. மாடு மேய்க்கிறதுதான் என்னோட வேலை. கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க வந்த பிறகும் என் கணவர் (கருப்பண்ணன்) வூட்டுலயும் 30 மாடுகள் வரை இருந்துச்சு. அதுகளை மேய்க்கிறதுதான் எனக்கு முழுநேர வேலை. மாடு மேய்க்கிறது சாதாரண வேலை இல்லை. கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டு ஏசி ரூம்ல உட்கார்ந்து வேலைபார்க்குற ஆபீசருங்களை சுளுவா வேலை வாங்கிடலாம். ஆனா, ஒரு மாட்டை மேய்க்கிறது ரொம்ப கஷ்டம். நாலஞ்சு மாடுகளை வெச்சுக்கிட்டு மேய்க்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா, முப்பது மாடுகளை எப்படி மேய்ச்சுருப்பேன்னு நீங்களே கணக்குப் பண்ணி பாருங்க. முப்பது மாடுகளோட வருமானத்தை வெச்சுதான் எங்க குடும்பம் முன்னுக்கு வந்துச்சு.

ரெண்டு பொம்பளை புள்ளைங்களை நல்ல இடங்கள்ல கட்டிக் கொடுத்தோம். இப்போ என் மகனுக்கும் நல்ல இடத்துல சம்பந்தம் பண்ணி இருக்கோம். சைடுல விவசாயமும் பண்றதால முன்னமாதிரி அதிக மாடுகளை வளர்க்க முடியலை. நாலு கறவை மாடு, ரெண்டு கன்னுக்குட்டிதான் இப்போ இருக்கு. தவிர, பட்டிநிறையுற அளவுக்கு ஆடுகள் இருக்கு. வீட்டுக்கு உள்ள நடக்குற வேலைகளை என் மருமகள் பார்த்துக்கும். ஆடுகள் மேய்க்க பண்ணை ஆள் போட்டிருக்கிறோம். எனக்கு காலையில் கோழி கூவ எழுந்து, இரவு படுக்கப்போற வரைக்கும் இந்த மாடுகளைக் கவனிக்கிறதுதான் வேலையே. காலையில எழுந்து மாட்டுச்சாணத்தை அப்புறப்படுத்திட்டு, மாட்டுத்தொழுவத்தைக் கூட்டி சுத்தப்படுத்துறதுக்குள்ள முதுகுவலி வந்திடும். மணியும் பத்தாயிடும்.

Ponnamma
Ponnamma
தே.தீட்ஷித்

கிடைக்குற கஞ்சியைக் குடிச்சுக்கிட்டு, மாடுகளை மேய்க்கிறதுக்காக ஓட்டிக்கிட்டு போவேன். சாயந்தரம் நாலு மணிக்கு மாடுகளை வீட்டுக்கு ஓட்டிட்டு வர்ற வரைக்கும், இடைப்பட்ட நேரத்துல புருஷன், புள்ளை, சொந்தபந்தம், வீட்டு நினைப்புனு சகலத்தையும் மறந்திடணும். நம்ம நினைப்பு, பார்வை முழுக்க மாடுங்கமேல மட்டும்தான் இருக்கணும். கொஞ்சம் அசந்து வேற பக்கம் பார்த்தாக்கூட, ஏதோ ஒரு மாடு அடுத்தவங்க வெள்ளாமைக்காட்டுல புகுந்து, பயிர்களை தின்னுடும். அசதியில 'செத்தநாழி படுப்போம்'னு மரநிழல்ல கட்டையைச் சாய்ச்சோம்னா, நாம கண்ணசந்த நேரத்துல, பாதி வெள்ளாமையை காலி பண்ணிடும். அதுக்கு கைகட்டி நாம பதில் சொல்ற நிலைமை ஆயிடும்.

Ponnamma
Ponnamma
தே.தீட்ஷித்

இது இப்படின்னா, ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு தினுசா இருக்கும். ஒரு மாடு அதிகமா புல் இருக்கிற இடத்தை தேடிப்போய் மேயும். இன்னும் சில மாடுங்க கட்டாந்தரையா இருக்கிற இடத்துல லேசா தரையோடு தரையா முளைச்சுக்கிடக்குற புல்லைப் போய் மேயும். இன்னும் சில மாடுங்க, வேலிகள்ல படர்ந்து கெடக்குற கொடிகளைப் போய் மேயும். சில மாடுங்க நின்னு மேயாம நடந்து தொலைதூரம் மேய்ஞ்சுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கும். இன்னும் சில மாடுங்க தண்ணிகுடிக்கிறதுக்காக குளம், கண்மாயைத் தேடிப்போகும். மாடுங்க ஒவ்வொண்ணையும், அணைச்சு ஒரேஇடத்துல ஒண்ணுசேர்க்க நான் படுறபாடு இருக்கே? அப்பப்பா... அதை சொல்லிமாளாது தம்பி.

மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கிட்டு போனதுக்கு அப்புறமா, அதுக்கு வைக்கோல், சோளத்தட்டை எடுத்துப் போடுறது, தண்ணீர் வைக்கிறது, பால் கறக்குறதுனு வேலை இருந்துகிட்டே இருக்கும். மாடுகளை கவனிக்கவே நேரம் பத்தாதது. இரண்டு கைகள்லயும் ரெண்டு வெளக்கமாறை வெச்சு கூட்டவேண்டி இருக்கும்.

Ponnamma
Ponnamma
தே.தீட்ஷித்

அதோடு இல்லாம, மாட்டுக்கு எந்தெந்த பருவத்துல என்னென்ன நோய் வரும், மாடு சினை பிடிச்சிருக்கா, இல்லையா, சினை பிடிச்ச மாட்டை எப்படி பராமரிக்கணும், எப்போ அந்த மாடு கன்னு போடும், அதுக்கு எப்பிடி பிரசவம் பார்க்கணும்னு எல்லா வேலைகளையும் தெரிஞ்சு வெச்சுக்கணும். மாடுகளோட சுணக்கத்தை வெச்சே, அதோட பிரச்னையை யூகிக்கணும். மாடுகளோட மாடுகளா இருந்து பழகினாதான், இந்த அறிவு நமக்கு பிடிபடும்" என்றார் பொன்னம்மா பாட்டி. பொன்னம்மா பாட்டி சொல்வதைக் கேட்க நமக்கே மலைப்பாக இருந்தது. இனிமே மத்தவங்களைப் பார்த்து `நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என்பீர்களா?