Published:Updated:

வேட்டையை மறந்து வெறும் பிணந்தின்னியாக மாறும் சிங்கங்கள்... கிர் காட்டின் சோகக்கதை!

கிர் சிங்கம் எங்கள் கௌரவம் அதை மற்ற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோமென்று அடம்பிடிக்கும் குஜராத் அரசு, அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையையும் உணர்ந்து செயல்பட்டால் ஆசிய சிங்கங்களின் வாழ்வில் விடியல் வரும்.

Asiatic Lion
Asiatic Lion ( Suresh Shetty )

உலகிலேயே ஆப்பிரிக்க கண்டத்துக்கு வெளியே சிங்கங்கள் வாழ்வது இந்தியாவின் கிர் காடுகளில் மட்டும்தான். `ஆசிய' சிங்கம் என்ற துணை இனத்தைச் சேர்ந்த இந்த சிங்கங்கள் குஜராத்தில் அதுவும் கிர் காடுகளில் மட்டுமே வாழ்வது அந்த மாநிலத்துக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தாலும் அந்த சிங்கங்களுக்கு அது பெருமையோ பாதுகாப்போ எதையுமே வழங்கவில்லை. அவை ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகையான சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் கடந்த ஆண்டு கெனைன் டிஸ்டெம்பர் வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு அந்தப் பிரச்னையோடு சேர்த்து அவற்றின் இருப்பையே அழிக்கவல்ல மற்றொரு பிரச்னையையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

Gir Lions
Gir Lions
Photo: Nikunj Vasoya / Wikimedia

பல அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஆசிய சிங்கங்கள் ஒரே இடத்தில் இருப்பதால், அவற்றுக்குப் பல வாழ்வியல் சிக்கல்கள் வருவதை நிரூபித்துள்ளார்கள். அதனால், ஆசிய சிங்கங்களை மொத்தமாக ஒரே இடத்தில் வைத்திருக்கக் கூடாதென்றும் அவற்றில் ஒருசிலவற்றை மத்தியப் பிரதேசக் காடுகளுக்கு இடம் மாற்ற வேண்டுமென்றும், பெரும் பூனை ஆய்வாளர்களும் காட்டுயிர் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும்கூடச் சில சிங்கங்களை இடம்மாற்ற வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு குஜராத் மாநில அரசு மறுத்துவிட்டது. கடந்த சில மாதங்களில்கூட மீண்டும் பரவத் தொடங்கிய கெனைன் டிஸ்டம்பர் மற்றும் பேபியோசிஸ் என்ற வைரஸ் கிருமிகளால் சில சிங்கங்கள் உயிரிழந்தன. இதுமாதிரியான சூழல்களில் வைரஸ் கிருமிகள் அங்கிருக்கும் அனைத்தையும் மொத்தமாக அழித்துவிடும். அப்படி நடந்தால் ஆசிய சிங்கம் என்ற இனமே இல்லாமல் போய்விடும். இவ்வளவு ஆபத்துகளையும் சந்தித்துக்கொண்டுதான் கிர் காடுகளில் அவை உயிர்வாழப் போராடிக் கொண்டிருக்கின்றன.

கிர் சரணாலயத்தின் எல்லைக்குள் மட்டும் அவை வாழ்வதில்லை. வெளியேயும் வாழ்கின்றன. அந்தப் பகுதியைச் சுற்றி அதிகமான மனிதத் தலையீடுகள் ஏற்பட்டுவிட்டதால், உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையைச் சிங்கங்கள் நீண்ட நாள்களாகச் சந்தித்துக்கொண்டிருந்தாலும் அதைச் சமாளிக்க அவை நடந்துகொள்ளும் விதம் ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆக்கிரமிப்புகள் அதிகமானதால், மக்களுக்கு அருகிலேயே வாழவேண்டிய நிலை சரணாலயத்துக்கு வெளியே உள்ள சிங்கங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் அவை கால்நடைகளை உணவுக்காக வேட்டையாட வேண்டிய சூழல் உருவானது. சிங்கங்களுக்கு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை இதைத் தொடங்கிவைக்க, தற்போது, இறந்தபின் மக்கள் தூக்கியெறியும் கால்நடைச் சடலங்களைச் சாப்பிட வேண்டிய அவலநிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.

Asiatic Lions
Asiatic Lions
Photo: Sutariya abhishek /Wikimedia

குஜராத்தின் கிர் சரணாலய எல்லைக்குள் வாழும் சிங்கங்களின் உணவுப் பழக்கத்தில் 75 சதவிகிதம் காட்டுக்குள் வேட்டையாடும் விலங்குகள் பங்கு வகிக்கின்றன. மீதம் 25 சதவிகித உணவுக்கு அரிதாக அவை கால்நடைகளை வேட்டையாடுகின்றன. அதுவே, சரணாலய எல்லைக்கு வெளியே வாழ்பனவற்றின் உணவில் 70 சதவிகிதம் கால்நடைகள்தான் பங்கு வகிக்கின்றன. அதிலும் 20 சதவிகிதம்தான் வேட்டையாடுகின்றன. 50 சதவிகிதம் உணவு இறந்த கால்நடைகளை உண்ணுகின்றன. அருகிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இறந்த கால்நடைகளை அப்படியே காட்டின் எல்லைப்புறங்களில் போட்டுவிடுவார்கள். சரணாலயத்துக்கு வெளியே வாழ்பவை இந்தச் சடலங்களையும் இறந்துகொண்டிருக்கும் கால்நடைகளையுமே அதிகம் சாப்பிடுகின்றன. கடந்த ஆண்டு கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் பாதிக்கப்பட்டு 29 சிங்கங்கள் இறந்தன. அதைத் தொடர்ந்து இயற்கையாக வேட்டையாடிச் சாப்பிடவேண்டிய பெரும் பூனை, பிணந்தின்னியாக மாறிக்கொண்டிருக்கிறது.

இது இப்படியே போனால், ஆசிய சிங்கங்களின் தகவமைப்பே இயற்கைக்கு விரோதமாக மாறிவிடும். உதாரணமாக 50 சதவிகித உணவுக்கு இறக்கும் கால்நடைகளைச் சார்ந்திருக்கும் தாய் சிங்கங்கள் தங்கள் குட்டிகளுக்கும் அதையே கொடுக்கும். பொதுவாக, குட்டிகளைப் பார்க்க வைத்து வேட்டையாடுவதன் மூலம் அவற்றுக்கு வேட்டையின் நுணுக்கங்களைத் தாய் சிங்கம் கற்றுக்கொடுக்கும். அதற்கான சூழலே உருவாகாமல் சடலங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இப்படி ஏற்படுவதால் எதிர்காலத்தில் ஆசிய சிங்கங்களின் வேட்டையாடும் திறனே முழுமையாக மறைந்துபோகலாம். அது மட்டுமின்றிக் கால்நடைகளின் இறந்த சடலங்களிலிருந்து பல நோய்த்தொற்றுகள் அவற்றுக்கு ஏற்படலாம். கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் மீண்டும் பரவும் அபாயமும் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
Vikatan

2015-ம் ஆண்டு 523 ஆக இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை, தற்போது 700 ஆக உயர்ந்திருந்தாலும் அவற்றுக்கான பாதுகாப்பும் இயல்பு வாழ்க்கையும் கிர் காட்டில் கிடைக்கிறதா என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த 700 சிங்கங்களில் 50 சதவிகிதச் சிங்கங்கள் பாவ்நகர், போர்பந்தர், அம்ரேலி, கிர் சோம்நாத் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சுற்றி அமைந்துள்ள பாதுகாக்கப்படாத காட்டுப்பகுதியில்தான் வாழ்கின்றன. இந்த நிலையில், சரணாலய எல்லைக்கு வெளியே பாதுகாக்கப்படாத வனப்பகுதியில் வாழும் சிங்கங்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகக் குறைவே. அதோடு கால்நடைகளை வேட்டையாட அவை முயலும்போது மனித-சிங்க எதிர்கொள்ளல் ஏற்பட்டுப் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. கிர் காட்டின் பரப்பளவு மொத்தத்தையும் ஆசிய சிங்கங்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனவோ அந்தப் பகுதி முழுவதையும் கண்காணிப்புக்குள் கொண்டுவந்து முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அவற்றுக்கான இரை விலங்குகளின் எண்ணிக்கை அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்க முயல வேண்டும்.

முதல்கட்ட நடவடிக்கையாக இதைச் செய்தாலும், நீண்டகாலம் இவற்றைப் பாதுகாக்கக் கண்டிப்பாக இவை இடம்பெயர்ந்தே ஆக வேண்டும். ஆய்வாளர்கள் பரிந்துரைத்த மாதிரியே இவை வாழத் தகுதியுடையதாக இருக்கும் மத்தியப் பிரதேசக் காடுகளுக்கு ஒரு சிலவற்றை இடம் மாற்ற வேண்டும். இல்லையேல், வாழிடச் சிக்கல் மற்றும் பற்றாக்குறையால் மேன்மேலும் பிரச்னைகள் வந்துகொண்டேதானிருக்கும்.

Lions
Lions
Photo: Ankitleo Shukla / Wikimedia

சிங்கம்... உச்சரிக்கும்போதே எத்தனை கம்பீரமான தொனி தெரிகிறது. அந்தக் கம்பீரம் எதிர்காலத்தில் வெறும் உச்சரிப்பில் மட்டுமாக மழுங்கிப் போய்விடும் அபாயத்தை ஆசிய சிங்கங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இயல்பை மீட்டெடுக்க வேண்டியது குஜராத் மாநில அரசின் கடமை. கிர் சிங்கம் எங்கள் கௌரவம். அதை மற்ற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோமென்று அடம்பிடிக்கும் அந்த அரசு, அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையையும் உணர்ந்து செயல்பட்டால் ஆசிய சிங்கங்களின் வாழ்வில் விடியல் வரும்.