``கால் ஒரு கருவிதான்... முக்கிய ஆயுதம் வேற இருக்கு!" - இது சிலந்தியின் சர்வைவல் கதை

``சக்தி வாய்ந்த மனிதர்கள் சக்தி வாய்ந்த இடங்களிலிருந்து வருவார்கள்" என்பார்கள். அதற்கு உதாரணம் சிலந்தி.
என்னுடைய உடல்தான் எனக்கு மூலதனம். அதை வைத்தே நான் பிழைத்துக்கொள்வேன் என்கிற விதி எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தாது. மிகப் பெரிய உடலமைப்பைக் கொண்ட யானையின் பலம் வேறு. சிங்கத்தின் பலம் வேறு. பிழைத்திருப்பதில் உடல் ஒரு கருவி மட்டும்தான். அந்தக் கருவியை மூளை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதில்தான் ஓர் உயிரினத்தின் சர்வைவல் இருக்கிறது.

எட்டுக் கால்கள் இருப்பது மட்டும்தான் சிலந்தி குறித்து உலகத்துக்குத் தெரிந்த விஷயம். ஆனால், சிலந்தி ஓர் ஆயுதக் கிடங்கு. ஆயுதக் கிடங்கைச் சுமந்து திரியும் கருவிதான் அதன் கால்கள். சிலந்திகள் இரையைப் பிடிப்பதில் பல உத்திகளை கையாளுகின்றன. வலைப் பின்னுவது என்பது சிலந்திக்கு இயல்பான குணம். அப்படிப் பின்னுகிற வலையை வைத்து அவை என்னவெல்லாம் செய்கின்றன என்பதில்தான் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது.
GOLDEN ORB WEAVING SPIDER என்றொரு சிலந்தி வகை இருக்கிறது. தமிழில் இதற்குப் பீமன் சிலந்தி என்று பெயர். இதன் வலை தங்க நிறத்தில் இருக்கும். இந்த சிலந்தியின் வலை மற்ற சிலந்தி வலைகளைக் காட்டிலும் வலிமையானது. சிலந்தியின் உடலுக்குள் பட்டிலைகளை உற்பத்தி செய்யும் சுமார் 100 குழாய்கள் உள்ளன. அவற்றிலிருந்து வெளிவரும் திட பட்டிலைகள் சிலந்தியின் சக்தியால் வேகமாக வெளியே தள்ளும்பொழுது கடினமான திடப் பட்டிலைகளாக வெளிப்படுகின்றன. இடியாப்பம் உற்பத்தி செய்கிற முறைதான். ஆனால், சிலந்தியின் அழுத்தம் பல மடங்காக இருக்கும்.

அப்படி உற்பத்தியாகிற பட்டிலைகளைக் கொண்டே வலையைப் பின்னுகின்றன. பின்னிய வலையில் எங்கு அதிர்வுகள் தெரிந்தாலும் உடனடியாக பீமன் சிலந்திகள் கண்டுபிடித்து விடுகின்றன. வலையில் சிக்கிய பூச்சிகளை இவை உடனடியாக உண்பதில்லை. சிக்கிய இரையை புதிய வலையொன்றைப் பின்னி அதற்குள் வைத்து மொத்த வலையின் மையப்பகுதிக்குக் கொண்டுவந்து வைத்துவிடுகின்றன. அந்தப் பகுதி ‘வலைக்குள் இருக்கிற பிணவறையாக’ பயன்படுத்திக்கொள்ளும். எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் எடுத்து உணவாக்கிக்கொள்ளும். பறவைகள், வவ்வால்கள் கூட இந்த சிலந்தியின் வலையில் சில சமயங்களில் சிக்கிக்கொள்ளும் அளவுக்கு வலிமையானது.
JUMBING SPIDER ஜம்பிங் சிலந்தி என்கிற ஒரு வகை சிலந்தி இருக்கிறது. இது மற்ற சிலந்திகளைப் போல வலை பின்னி இரைக்காகக் காத்திருப்பதில்லை. இரையைக் கண்டறிந்துவிட்டால் நேரடி தாக்குதலைத் தொடுத்துவிடும். இந்தச் சிலந்தி 8 கண்களைக் கொண்டது. 360 டிகிரி பார்வை கொண்டது. உண்மையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற பன்ச் இந்த சிலந்திக்குத்தான் பொருந்தும். தன்னுடைய உடலின் மொத்த நீளத்தைவிட முப்பது மடங்கு அதிக நீளத்தைத் தாண்டும் அளவுக்குத் திறமை கொண்டது. அப்படித் தாண்டும்பொழுது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக வலையைக் கயிறாகப் பயன்படுத்திக்கொள்ளும்.

fishing spider என ஒரு வகை இருக்கிறது. தண்ணீரில் நடக்கக் கூடியது. தண்ணீருக்கு அடியில் இருக்கிற உயிரினங்களை மிகத் துல்லியமாக அறியக் கூடிய சிலந்தி. இவ்வகை சிலந்தி கடலுக்கு அடியிலும் சுவாசிக்கக் கூடியது. இதன் முக்கிய உணவு சிறிய வகை மீன்கள். மீனைப் பிடித்ததும் அதற்குள் தன்னுடைய விஷத்தைச் செலுத்திவிடுகிறது. சிலந்தியின் விஷம் இறையின் நரம்பு மண்டலத்தை முடக்கக்கூடியது. சுருங்கச் சொன்னால் மீனுக்குப் பக்கவாதத்தை உருவாக்கும். அதன் பிறகே மீனை உணவாக எடுத்துக்கொள்ளும்.
king baboon spider பபூன் சிலந்தி. சக்திவாய்ந்த மனிதர்கள் சக்திவாய்ந்த இடங்களிலிருந்து வருவார்கள் என்பார்கள். அதற்குப் பொருந்திப் போகிற ஒரு சிலந்தி. இதன் உருவத்தைப் பார்த்தால் மனிதர்கள் பயந்துதான் வாழ வேண்டும் என்கிற அளவுக்கு விநோதமான சிலந்தி. ஆனால், அதற்குத் தன்னை வெளி உலகத்துக்குக் காட்டிக்கொள்வதில் தயக்கம்கொண்டது. மண்ணுக்கு அடியில் வாழ்கிற சிலந்தி. தங்கியிருக்கிற குழியின் நுழைவு வாயிலில் தன்னுடைய வலையைப் பின்னி வைத்திருக்கும். அதில் அதிர்வுகள் தென்பட்டால் உடனடியாக வாசலுக்கு வந்து இரையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் உள்ளே சென்றுவிடும்.

இதனுடைய இன்னொரு பலம் அதனுடைய கண்கள். ஆறு கண்களும் தலைக்கு மேலாக இருப்பதால் 360 டிகிரியில் இவற்றால் பார்க்கமுடியும். நீர்மூழ்கிக் கப்பல்களில் இருக்கும் பெரிஸ்கோப் கருவி போன்றது. கடலுக்குள் இருந்துகொண்டே கடலின் மட்டத்தை வேவு பார்க்கும் அதே தொழில்நுட்பம்தான். இப்படிப் பல விசித்திரங்களைக் கொண்ட பல சிலந்திகள் உலகத்தில் இருக்கின்றன. நம் ஊரில் இருப்பதெல்லாம் சிலந்தி வகைகளின் தொடக்க வகைகள்தான். வில்லன்கள் எல்லாம் வேறு பல நாடுகளிலும் இருக்கிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் வரை சுமார் 48,200 வகையான சிலந்தி வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 205 வகை சிலந்திகள் விஷம் கொண்டவை. சிலந்தி வலை என்பது சிலந்தி வயிற்றுப்பகுதியில் நூற்கும் உறுப்பிலுள்ள பல நுண்ணிய துளைகள் வழியே வெளிப்படும் பொருள். அப்படி வரும் பட்டிழைகள் திரவ நிலையில்தான் சிலந்தியின் உடலிலிருந்து வெளிவருகிறது. பின்பு காற்றில் வினைபுரிந்து அவ்விழைகள் திட நிலையை அடைந்துவிடுகின்றன. இது உணவைப் பிடிப்பதற்கும் தான் வசிப்பதற்கும் பயன்படுத்துகிறது. ஆனால், அனைத்து வகை சிலந்திகளும் தங்கள் வலைகளை இரையைப் பிடிக்க பயன்படுத்துவதில்லை. வலை பின்னாத சில வகை சிலந்திகள் கூட உள்ளன.

எல்லா சிலந்திகள் உடலமைப்பும் ஒன்று போலவே இருக்கும். தலையோடு இருக்கும் நெஞ்சுப் பகுதியையும், வயிற்றுப்பகுதியும் மெல்லிய உருளை வடிவான இணைப்புத் தண்டு இணைக்கின்றது. இந்த இணைப்புத்தண்டை பெடிசெல் (pedicel) என்பர். விவசாயத்துக்குப் பயன்படும் டிராக்டர் வாகனத்தையும், அதற்குப் பின்னால் பொருத்தப்பட்டிருக்கிற டிரெய்லரையும் நினைத்துக்கொள்ளுங்கள். இதன் குடல் மிகச் சிறியது என்பதால் சிலந்திகள் பெரிய கெட்டியான பொருளை உண்ண இயலாது. சவைக்கும் வாய்ப்பகுதியும் கிடையாது. எனவே, சிலந்திகள் தான் உண்ணும் இரையின் உடலினுள் தன்னுடலில் சுரக்கும் நொதி என்னும் செரிக்கும் திரவத்தைச் செலுத்துகிறது. இரையின் தசைப் பகுதி அனைத்தும் அந்நீர்மத்தில் கரைந்து நன்கு திரவமாகிவிடுகிறது. திரவப் பகுதியைச் சிலந்திகள் உறிஞ்சி உண்ணுகின்றன.
உலகிலுள்ள 205 விஷச் சிலந்தி வகைகளில் 40 சதவிகித சிலந்திகளின் விஷம் மருத்துவ உலகில் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக பிளாக் விடோ என்கிற சிலந்தியின் விஷம் மருத்துவப் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த விஷத்தில் லட்ரோடாக்சின் (latrotoxin) உள்ளது, இது ஒரு புரதம். சிலந்தியின் நச்சிலுள்ள புரதமானது நியூரான்களில் செல் இறப்பைத் தடுக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. எலிகளை வைத்து இந்தச் சோதனை செய்திருக்கிறார்கள். சோதனை வெற்றியடைந்தால் மனிதனுக்குச் செலுத்தப்படும்.

100-க்கும் மேற்பட்ட சிலந்திகளின் நஞ்சுகளைச் சோதனை செய்த யேல் (Yale) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் `பெருவியன் பசுமை வெல்வெட் டரன்டுலாஸ்' என்கிற சிலந்தியின் விஷத்தில் ஒரு வகை புரோட்டீன் இருப்பதை அடையாளம் கண்டனர். இந்த புரோட்டின் வலியைக் கடத்தும் நியூரான்களில் சேர்ந்து பயணிக்கும்போது, அந்த நியூரான்களின் செயல்திறன் குறைந்ததைக் கண்டறிந்தனர். எதிர்கால மருத்துவ உலகில் டரன்டுலாஸ் சிலந்தியின் விஷம் முக்கியமான வலி நிவாரணியாக இருக்கும் என அவர்கள் கணித்திருக்கிறார்கள். உலகத்துக்குள் பிரசவிக்கிற ஒவ்வோர் உயிருக்கும் அதனுடைய உடல்தான் மூலதனம். சர்வைவல் விஷயத்தில் மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களின் மூளை 100 சதவிகிதம் வேலை செய்தால் உடலும் 100 சதவிகிதம் வேலை செய்தாக வேண்டும் அப்போதுதான் பிழைக்க முடியும். சர்வைவல் விஷயத்தில் சிலந்தி அதைத்தான் செய்கிறது.