Published:Updated:

`டைனோசர்கள் எப்படி அதன் உடல் வெப்பத்தைத் தணித்திருக்கும்?’ - ஆய்வுகள் சொல்லும் ஆச்சர்யம்

சி.சந்தியா

இந்த விலங்கு மாமிசம் உண்ணி என்பதால் இதற்கு, இயற்கையில் அதனுள் இருக்கும் இந்தச் செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

T-Rex
T-Rex

டைனோசர்கள் எப்படி அதன் உடல் வெப்பத்தைத் தனித்திருக்கும் என்பது தொடர்பான கூடுதல் தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு தற்போது தெரியவந்திருக்கிறது. மிஸோரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேஸி ஹாலிடே மற்றும் அவரது குழுவினர் நீர்வாழ் முதலையை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். தெர்மல் இமேஜிங் சாதனங்களால் முதலைகளை ஆராய்ந்தபோது அதன் தலைப்பகுதியில் ரத்தக்குழாய்கள் அடங்கிய துளைகள் இருப்பது தெரியவந்தது. இவை முதலையின் உடல் வெப்பத்தைச் சமநிலையில் வைக்க உதவுகின்றன.

T Rex
T Rex

`முதலை உடலின் வெப்பநிலையைக் கூட்டவோ, குறைக்கவோ முயற்சி செய்யும்போது அதன் தலையிலிருந்த துளைகள் நிறம் மாறுவதை இமேஜிங் சாதனங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது' என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பிறகு டைரனோசாரஸ் ரெக்ஸ் (T Rex) என்ற டைனோசரின் படிமங்கள், 3D படங்களை ஆராயும்போது அவற்றின் தலையிலும் இதே போன்ற துளைகள் இருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

வெகுகாலமாக டைனோசாரஸின் தலையில் இருக்கும் இரண்டு அமைப்புகள் எந்தப் பயனும் இல்லாதவை என்றே கருதப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அவையும் முதலையின் தலையில் இருப்பதைப் போன்ற உடல் வெப்பநிலையை பராமரிக்கும் அமைப்பாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

Alligator
Alligator
(Holliday et al., The Anatomical Record, 2019)

அந்த ரத்தக் குழாய்கள் அடங்கிய பெரிய துளைகள் போன்ற அமைப்புதான் டைரனோசாரஸின் உடல் வெப்பநிலையை காலத்திற்கு ஏற்ப மாற்றியிருக்க வேண்டும். இந்த விலங்கு மாமிசம் உண்ணி என்பதால் இதற்கு, இயற்கையில் அதனுள் இருக்கும் இந்தச் செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது.

Vikatan