Published:Updated:

`கணபதி ஹோமம்; ஷவர் குளியல்; எதிர்ப்பு'- தேக்கம்பட்டியில் தொடங்கிய கோயில் யானைகள் முகாம்!

ஐந்து ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1.4 கோடி ஒதுக்கப்பட்டாலும், கடைசி நேர அறிவிப்பால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை என்று பாகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யானை
யானை

தமிழகத்தில் கோயில் யானைகள் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு முதல், கோவை தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான முகாம் தேக்கம்பட்டியில் இன்று தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பணீந்தர் ரெட்டி தொடங்கி வைத்தார்.

`கணபதி ஹோமம்; ஷவர் குளியல்; எதிர்ப்பு'- தேக்கம்பட்டியில் தொடங்கிய கோயில் யானைகள் முகாம்!

உள்ளாட்சி தேர்தல் காரணமாக, இந்தாண்டுக்கான முகாம் நடத்தும் அரசாணை நேற்று முன்தினம்தான் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை முதல் யானைகள் ஆங்காங்கே புறப்பட்டு தேக்கம்பட்டி வந்தடைந்தன. இந்தாண்டு மொத்தம் 28 யானைகள் முகாமில் கலந்து கொள்ளவுள்ளன. ஆனால், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மற்றும் திருநள்ளாறு தர்பாண்யேஸ்வரர் கோயில் யானை பிருக்ருதி ஆகிய யானைகள் லாரியில் வந்து கொண்டிருப்பதால் முகாம் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

காலை கணபதி ஹோமம் செய்து, யானைகள் ஷவரில் குளிப்பாட்டப்பட்டன. ஆனால், திருவண்ணாமலை யோக ராமசந்திரசுவாமி கோயில் யானை லட்சுமி, குளிப்பாட்ட வரும்போது மிரண்டு விட்டது. குளியல் இடத்துக்கு வேகவேகமாக வந்த லட்சுமி, அதே வேகத்தில் வந்தவழியிலேயே சென்றுவிட்டது. பிறகு அதை மரத்தில் கட்டி சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தினர். இதனால், தொடக்க நிகழ்வில் லட்சுமி யானையும் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்காக, ஐந்து ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1.4 கோடி ஒதுக்கப்பட்டாலும், கடைசி நேர அறிவிப்பால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை என்று பாகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முக்கியமாக, முகாம் நடக்கும் பகுதியில் காட்டு யானைகள் வரும் என்பதால், ஒவ்வோர் ஆண்டுமே தேக்கம்பட்டி பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தாண்டும் உள்ளூர் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில்தான் முகாம் நடக்கிறது. முகாம் நடக்கும் இடத்தைச் சுற்றி தகர ஷீட் மற்றும் மின்வேலி அமைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. இதனால், அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பாகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் புத்துணர்வு முகாமில் நுழைந்த யானைகள் ஒவ்வொன்றும், சக யானைகளைப் பார்த்து உற்சாகமாக விளையாடி வருகின்றன.