Published:Updated:

4 நாள் போராட்டம்; இடைவிடாத தேடுதல் வேட்டை! - அகப்பட்டது `அரிசி ராஜா' யானை

கோவையில் பொதுமக்களைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் நேற்று நள்ளிரவு மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர்.

`அரிசி ராஜா' யானை
`அரிசி ராஜா' யானை

கோவை மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு காட்டு யானை 4 பேரை மிதித்துக்கொன்றது. வனத்துறையினர் அந்த யானையைப் பிடித்து டாப்ஸ்லிப்பில் கொண்டு போய்விட்டனர். சமீபத்தில் அதே காட்டு யானை பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரி பாளையத்தில் இரண்டு பேரை மிதித்துக்கொன்றது. வனத்திலிருந்து வெளியேறிய யானை, ஊருக்குள் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டும் தின்றுவிட்டுச் சென்றுவிடுவதால் அதற்கு அந்தப் பகுதி மக்கள் அரிசி ராஜா எனப் பெயர் வைத்துள்ளனர்.

அரிசி ராஜா ஆபரேஷன்
அரிசி ராஜா ஆபரேஷன்

இந்த நிலையில், தற்போது காட்டு யானை `அரிசி ராஜா’ தாக்கி அர்த்தநாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி பலியானார். மேலும், அந்த யானை தாக்கி திருமாத்தாள் என்ற பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். எனவே, காட்டு யானையைப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நான்கு நாள்களாகத் தண்ணி காட்டும் `அரிசி ராஜா’!- தொடரும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை

மக்களின் போராட்டம் தீவிரமடையவே யானையைப் பிடிக்க அதற்குப் பிடித்த அரிசி மூட்டைகளுடன் நான்கு நாள்களுக்கு முன் காட்டுக்குள் இறங்கினர் வனத்துறையினர். கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கலீம், பாரி என்ற இரண்டு கும்கிகள் களமிறக்கப்பட்டிருந்தன. முதல் நாளில் அரிசி ராஜா எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் இருந்தது. ஆனால், அடுத்த மூன்று நாள்களில் அதைக் கண்டுபிடித்திருந்தாலும் வனத்துறையின் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி, அரிசி ராஜா மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

அரிசி ராஜா
அரிசி ராஜா

மழை, மக்கள் கூட்டம் போன்ற அனைத்தையும் அறிந்த அரிசி ராஜா இத்தனை நாள்களாக வனத்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து தப்பித்துக்கொண்டே இருந்துள்ளது. இதற்கிடையில், நேற்று இரவு 9:30 மணிளவில் தென்னந்தோப்பில், பாறை ஒன்றின் மறைவிலிருந்த அரிசி ராஜாவை முதலில் வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் நள்ளிரவில் இரண்டாவது மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகளின் உதவியுடன் அரிசி ராஜா வண்டியில் ஏற்றப்பட்டது. பிடிபட்ட யானை, வரகழியாறு வளர்ப்பு முகாமுக்குக் கொண்டு செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.