Published:Updated:

`இரவில் புகுந்த 5 அடி நீள நாகப்பாம்பு' - எஜமானி குடும்பத்தைக் காப்பாற்ற உயிரை மாய்த்த பாசக்கார `அப்பு'!

இ.கார்த்திகேயன்

தூத்துக்குடியில் எஜமானியின் குடும்பத்தை பாம்பிடமிருந்து காப்பாற்றுவதற்காக பாம்பைக் கடித்து நாய் உயிரைவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பைக் கடித்துக் கொன்ற நாய்
பாம்பைக் கடித்துக் கொன்ற நாய்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் பொன்செல்வி. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் கணவர் பாபு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள். இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார்கள். பொன்செல்வி, தனது வீட்டில் `டைசன்’ இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்களை வளர்த்துவந்தார். அவற்றில் ஆண் நாய்க்கு `அப்பு’ என்றும், பெண் நாய்க்கு `நிம்மி’ எனவும் பெயர் வைத்து அழைத்துவந்தார். இரண்டு நாய்களையும் குழந்தையைப் போல பாசம்காட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு இரவில், வீட்டின் கார்பார்க்கிங் பகுதியில் சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஊர்ந்து வந்துள்ளது. பாம்பைக் கண்டதும், அங்கு படுத்திருந்த இரண்டு நாய்களும் குரைத்தன. அப்போது, ஆண் நாய் அப்பு, பாம்பைக் கடித்துள்ளது. பாம்பும் பதிலுக்கு நாயைக் கொத்தியுள்ளது.

டைசன் வகை நாய்
டைசன் வகை நாய்

பாம்பை வாயில் கவ்விக்கொண்டு படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்கு எடுத்துச்சென்றுள்ளது. பாம்பும், நாயும் சிறிது நேரத்தில் உயிரிந்துள்ளது. மறுநாள் காலையில் பொன்செல்வி கதவைத் திறந்து பார்த்தபோது, வாசலில் பெண் நாயான `நிம்மி’ மட்டும் நின்றுள்ளது. வீட்டின் பின்புறம் தேடிப்பார்த்தும் நாயைக் காணவில்லை. மாடியில் சென்று பார்த்தபோது பாம்பும், ஆண்நாய் அப்புவும் அருகருகே இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளார். எஜமானியின் குடும்பத்தைப் பாம்பிடமிருந்து காப்பாற்ற பாம்பைக் கொன்று தானும் இறந்துவிட்ட பாசக்கார அப்புவை அப்பகுதியினர் பார்த்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.