Published:Updated:

`ஊருக்குத்தான் அது யானை... எங்களுக்குக் குழந்தை!' -வேதநாயகி மரணத்தால் கலங்கிய ஈரோடு

ஒரு குழந்தையைப் பறிகொடுத்ததுபோல பாகனும் அவருடைய குடும்பத்தாரும் வேதநாயகிக்காகக் கண்ணீர்விட்டது பார்ப்போரைக் கலங்க வைத்தது.

உயிரிழந்த வேதநாயகி யானை
உயிரிழந்த வேதநாயகி யானை

ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்திபெற்ற சங்கமேஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்குப் பக்தர் ஒருவர் 1979-ம் ஆண்டு 3 வயதுப் பெண் யானை ஒன்றைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார். அந்த யானைக்கு `வேதநாயகி’ எனப் பெயர் சூட்டி, ஒரு குழந்தையைப்போல கோயிலுக்குள் உலவ விட்டிருக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாஞ்சையுடன் ஆசி வழங்கி, செல்லமாகக் கொஞ்சி விளையாடுவது என ஒரு குழந்தையைப் போலவே வேதநாயகி இருந்து வந்திருக்கிறது.

தினமும் காலை கோயிலில் இருந்து குமாரபாளையம் வரை பாகனுடன் 10 கி.மீ வாங்கிங் சென்று வரும். அப்போது தனக்குப் பிடித்த வீட்டினருகே நின்று சிக்னல் கொடுக்கும்விதமாக சின்னதாக ஒரு பிளிறலைப் போட்டு, தலையாட்டிக் கொண்டு நிற்கும். வாழைப்பழம், பன் என எதையாவது சாப்பிட்டுவிட்டு, வேதநாயகி ஹாயாக வாக்கிங் செல்வதை மக்களும் ரசித்துப் பார்த்து வந்துள்ளனர்.

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வேதநாயகி யானை
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வேதநாயகி யானை

இதற்கிடையே, 2010-ல் இருந்து சிறுநீரகக் கோளாறு மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றால் வேதநாயகிக்கு சிக்கல் ஆரம்பித்திருக்கிறது. காலில் ஏற்பட்ட புண்களால், நிற்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக புத்துணர்ச்சி முகாமுக்குக்கூட செல்ல முடியாத அளவுக்கு, நோயின் தாக்கம் கடுமையாக இருந்திருக்கிறது. கோயில் நிர்வாகத்தினர் தொடர்ந்து வேதநாயகிக்கு சிகிச்சை அளித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 5.10 மணியளவில் வேதநாயகி யானையைப் பாகன் எழுப்பச் சென்றபோது இறந்துபோன நிலையில் இருந்திருக்கிறது.

சின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது? #DoubtOfCommonman

இந்தச் செய்தியைக்கேட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கோயிலில் குவியத் தொடங்கினர். கோயிலைச் சுற்றி வேதநாயகி யானைக்கு இரங்கல் பேனர் வைத்திருந்தனர். ஒரு குழந்தையைப் பறிகொடுத்ததுபோல பாகனும் அவருடைய குடும்பத்தாரும் வேதநாயகிக்காகக் கண்ணீர்விட்டது பார்ப்போரைக் கலங்கவைத்தது. யானையின் உடலுக்கு பக்தர்களும் பொதுமக்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சாமிர்தம், தேன் என 11 திரவியங்களில் வேதநாயகிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்தனர். அதன்பின்னர், லாரி ஒன்றில் யானையின் உடலை ஏற்றி, கோவிலைச் சுற்றியுள்ள நகர்ப்பகுதியில் ஊர்வலமாகச் சென்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் மாலை சுமார் 6 மணியளவில், கோயிலுக்குப் பின்புறம், குழிவெட்டி யானை வேதநாயகியை அடக்கம் செய்தனர்.

அடக்கம் செய்யப்படும் வேதநாயகி யானை
அடக்கம் செய்யப்படும் வேதநாயகி யானை

இறுதிச்சடங்கின்போது பாகன் குடும்பத்தார், யானை வேதநாயகிக்கு வாய்க்கரிசி போட்டு, உடலில் சேலைத் துணியைப் போர்த்தியது பார்ப்போரைக் கலங்க வைத்தது. நம்மிடம் பேசிய கோயில் குருக்கள் சிலர், `கோயிலின் இரண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் வேதநாயகி கம்பீரமாக உலா வந்தது. விஷேச நாள்களில் ஜோடனையாகக் கோயிலில் உலா வரும்.

கோயில் பூஜை முடிஞ்சதும் பிரசாதம் கேட்கும். மூணு கவளம் புளியோதரையைக் கொடுத்தாலே சாந்தமாயிடும். வேதநாயகிக்கு 43 வயசு ஆச்சு. பல்வேறு நோய்களால் அவதிப்பட்டாலும், ஒருபோதும் யாரையும் தாக்கியதில்லை. உடல்நிலை நல்லாயிருந்திருந்தா, இன்னும் கொஞ்ச நாள் வேதநாயகி உயிரோட இருந்திருப்பாள்’ என்கின்றனர் கலங்கி கண்களுடன்.

போய் வா வேதநாயகி!