Published:Updated:

`கடவுளின் தூதுவன், ராஜாவுக்கெல்லாம் ராஜா!' இது மங்கோலிய ஓநாய்களின் கதை பாகம்-1

மங்கோலிய சாம்பல் ஓநாய்கள்!
மங்கோலிய சாம்பல் ஓநாய்கள்!

மங்கோலியர்கள் தங்களுடைய போர் வியூகங்களை, போர் முறைகளை ஓநாய்களிடமிருந்தே கற்றுக்கொண்டனர் என்று கூறுகிறது `மங்கோலியர்களின் ரகசிய வரலாறு' நூல்.

மங்கோலியர்கள் ஓநாய்களைக் கடவுளுக்கு நிகராக மதிப்பவர்கள். அதை, தங்கள் தேசிய அடையாளமாகக் கருதுகிறார்கள். மங்கோலிய நாடோடிச் சமூகங்களின் ஆன்மிக நம்பிக்கைகளின்படி, அங்கு வாழ்கின்ற சாம்பல் ஓநாய்கள் அவர்களுடைய கடவுளான டெஞ்சரின் தூதுவனாகச் சித்திரிக்கப்படுகின்றன.

`மங்கோலியர்களின் ரகசிய வரலாறு' நூலில் அவர்களை ஓநாய்களின் வழித்தோன்றல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மங்கோலிய ஓநாய்!
மங்கோலிய ஓநாய்!

இன்றைய நவீன உலகில் நாம் அதை நிச்சயமாக நம்பப் போவதில்லை. ஆனால், இந்தக் கருத்தை ஒவ்வொரு மங்கோலியரும் தன் இதயத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஓநாய்களுக்கும் இருக்கின்ற பிணைப்பை இலக்கியரீதியாகக் குறிக்கும் அடையாளமாக இந்தக் கருத்து இருப்பதால், அவர்கள் அதைக் கைவிட விரும்பவில்லை. ஆம், ஓநாய்களுக்கும் மங்கோலிய நிலப்பரப்புக்கும் அங்கு வாழும் நாடோடி மேய்ச்சல் சமூகங்களுக்கும் இடையே உடைக்க முடியாத உறவு இருக்கின்றது. அந்த உறவைத் துண்டிக்கும் விதமாகக் கடந்த நூற்றாண்டில் நடந்த நவீன கால மாற்றங்கள் அவர்களை இன்றுவரை சிதைத்துக்கொண்டிருக்கிறது.

அந்த உறவைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் முதலில் அந்த ஓநாய்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நிலத்தின் ராஜா கரடியாக இருக்கலாம். ரோ, மூஸ் என்று எந்த மானாக இருந்தாலும், அதனால் வேட்டையாட முடியும். ஆனால், அந்தக் கரடியைக்கூட வேட்டையாட ஓநாய்கள் இருக்கின்றன. அவை, குழுவாக, ஒற்றுமையாகச் செயல்படக் கூடியவை. ஓநாய்தான் இந்த நிலப்பகுதியில் ராஜாவுக்கெல்லாம் ராஜா
ஜூக்டெர்னாம்ஜில், மங்கோலிய வேட்டைக்காரர்.
மங்கோலியா
மங்கோலியா

மத்திய ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சாம்பல் ஓநாய்கள் திபெத் முதல் மங்கோலியா வரை, சீனாவிலிருந்து மேற்கு இமய மலை வரை வாழ்கின்றன. தங்கமென மின்னும் அந்தக் கண்களை நேருக்கு நேரே பார்த்தீர்களானால், அது உங்களை ஊடுருவி உங்கள் உள்ளத்தைப் பார்ப்பதை உணருவீர்கள்.

திறமையாகத் திட்டமிட்டு, வியூகம் அமைத்து இரைகளை வேட்டையாடுவதில் அவற்றுக்கு நிகர் அவையே. முயல் முதல் குதிரை வரை எதுவுமே அவற்றின் திட்டமிட்ட வேட்டையிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பிவிடமுடியாது. குதிரைக் கூட்டம் எவ்வளவு திறமையாகச் செயல்பட்டாலும்கூட, அந்தக் கூட்டத்தின் பலவீனத்தைக் கண்டுபிடித்து சாதுர்யமாக வேட்டையாடிவிடும். வழிநடத்திச் செல்லும் தலைமை ஓநாயின் கட்டளைக்குக் குழுவிலுள்ள மற்றவை அப்படியே கட்டுப்படும். ஒற்றுமை, திறமையான திட்டமிடல், கட்டளையை மீறாத கட்டுக்கோப்பு போன்ற போர்க்குணங்களை இயற்கையாகவே அவை கொண்டிருக்கின்றன. மங்கோலியர்கள் தங்களுடைய போர் வியூகங்களை, போர் முறைகளை ஓநாய்களிடமிருந்தே கற்றுக்கொண்டனர் என்று கூறுகிறது `மங்கோலியர்களின் ரகசிய வரலாறு' நூல்.

ஓநாய்கள் உயிர்வாழ்வதற்கான பல்வேறு விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளன. இதனாலேயே, ஒரு மங்கோலியன் ஓநாயைத் தெய்வமாக வணங்குகிறான். இருப்பினும், அந்தளவுக்குப் பெரிய மரியாதையை அவை பெறுவதற்கு இது மட்டுமே காரணமில்லை. அந்த நிலப்பகுதிக்கு அவை செய்யும் சூழலியல் சேவை, மங்கோலிய நாடோடிகள் மத்தியில் அவற்றுக்கு மரியாதை ஈட்டித்தர இன்னொரு முக்கியக் காரணமாக இருக்கின்றது.

மங்கோலியா முழுக்க முழுக்கப் புல்வெளிகளைக் கொண்ட நிலப்பகுதி. அங்குள்ள நாடோடி மேய்ப்பர்கள் தங்கள் கால்நடைகளின் உணவுக்கு அதையே பெரிதும் சார்ந்துள்ளனர். அந்தப் புல்வெளிகளில் மேய்ந்து நன்கு வளரும் கால்நடைகளே அவர்களுடைய வாழ்வாதாரம். அதுவே அவர்களுடைய பிரதானத் தொழில். ஆனால், அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. புல்வெளி நிலத்தைத் தீவிரமாக மேய்ந்து கால்நடைகளும் மான் போன்ற மேய்ச்சல் உயிரினங்களும் முற்றிலுமாகத் தீர்த்துவிட்டால், அந்த நிலம் தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கான கருவே இல்லாமல் சிதைந்துவிடும். அப்படி நிகழாமல் ஓநாய்கள்தான் பாதுகாக்கின்றன. கால்நடைகளும் மேய்ச்சல் உயிரினங்களும் புற்களை மேயும், அவற்றை ஓநாய்கள் வேட்டையாடும். ஓநாய்கள் இல்லாமல் போனால், மேய்ச்சல் விலங்குகள் அதிகமாகும். அவற்றின் பசிக்கு, மங்கோலியாவின் மொத்தப் புல்வெளியையும் படையலாக வைத்தாலும் போதாது.

மங்கோலிய மக்கள்!
மங்கோலிய மக்கள்!

அந்த நிலத்தின் தன்மைக்கு, புற்கள்தான் அதன் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்கின்றன. வெயில் காலங்களில் புற்கள் பெரிதாக வளராது. அந்த நேரத்தில் நிலத்தில் பொந்து அமைத்து வாழ்கின்ற மர்மோட்டு எனப்படும் கொறி உயிரினம் அப்பகுதியை ஆக்கிரமித்துவிடும். குளிர்காலம் முழுவதையும் தூக்கத்திலேயே கழிக்கின்ற இவை, கோடைக்காலத்தின்போது இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. ஒருமுறைக்கு 6 முதல் 7 குட்டிகளை அவை ஈனுகின்றன. 1940-ம் ஆண்டின் கணக்குப்படி, மங்கோலியாவில் 4 கோடி மர்மோட்டுகள் இருந்தன. அந்த 4 கோடி மர்மோட்டுகளும் ஓராண்டுக்கு இனப்பெருக்கம் செய்திருந்தால், அடுத்த ஆண்டில் அங்கு 24 கோடி மர்மோட்டுகள் இருந்திருக்கும். அவையனைத்துமே அப்படியான பொந்துகளை அமைத்திருந்தால், புல்வெளி நிலத்தில் பாதிக்கும் மேல் பயனற்றதாகியிருக்கும். ஆனால், கோடைக்காலத்தில் மர்மோட்டுகளை வேட்டையாடுவதன் மூலம் அப்படி நடக்காமல் ஓநாய்கள் தடுக்கின்றன.

உருவத்தையும் உடல் பலத்தையும் வைத்து எடை போடாமல், மங்கோலிய நிலத்தில் உயிர்களின் இருப்புக்கு உள்ள அவசியத்தை வைத்துக் கணக்கிடுவோம். புல்வெளிகள் இருந்தால்தான், மேய்ச்சல் விலங்குகள் இருக்கும். அவை இருந்தால்தான் ஓநாய்கள் உயிர்வாழ முடியும். அதேநேரம், புல்வெளி இருந்தால்தான் அங்கு வாழும் மேய்ப்பர்களுக்கு வாழ்வாதாரம் இருக்கும். மேய்ச்சல் விலங்கு அதிகமானால் புல்வெளி இருக்காது. அது இல்லையென்றால், மனிதர்கள், கால்நடைகள், ஓநாய்கள் என்று யாருமே உயிர்வாழ முடியாது. புல்வெளி நிலத்தில் வாழும் தாவர உண்ணிகள், மனிதர்கள், அவர்களுடைய கால்நடைகள், ஓநாய்கள் என்று அனைவருமே ஏதோவொரு வகையில் மறைமுகமாகவோ நேரடியாகவோ புற்களைச் சார்ந்தே இருக்கின்றனர். ஆக, இங்கு புற்களே அனைத்தையும்விட மேலானது என்று மங்கோலியர்கள் குறித்த வரலாற்றுப் புனைவான `ஓநாய் குலச் சின்ன'த்தில் அதன் ஆசிரியர் ஜியோங் ரோங் குறிப்பிட்டுள்ளார். அனைவரின் இருப்புக்கும் அவசியமான அத்தகைய புற்களை, மறைமுகமாக மங்கோலியாவின் இந்தச் சாம்பல் ஓநாய்கள் பாதுகாக்கின்றன.

இந்த மிக முக்கியமான பணியைச் செய்ய, கடவுள் டெஞ்சரால் புல்வெளி நிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாதுகாவலர்களாக மங்கோலிய நாடோடிச் சமூகங்கள் சாம்பல் ஓநாய்களைக் கருதுகின்றனர். அதனாலேயே, அவற்றைத் தங்கள் நிலத்தின் கௌரவமாக மதிக்கின்றனர்.

டெஞ்சருடன் ஓநாய்!
டெஞ்சருடன் ஓநாய்!

அவை புரியும் இந்தச் சேவைக்கு நிகரான மரியாதையை மங்கோலியர்கள் அவற்றுக்குக் கொடுத்தாலும்கூட, ஒருவகையில் அவற்றின் மீது அவர்களுக்குக் கோபமும் இருக்கவே செய்கின்றது. அவர்களின் கால்நடைகளை அவை வேட்டையாடி அபகரித்துச் செல்கின்றன. அதனால், அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது. அந்த நஷ்டத்தைச் சரிக்கட்ட அவர்கள் மேலும் தீவிரமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அந்த இழப்புகளால் அவர்களுக்கு வருகின்ற நியாயமான கோபம்தான் அது. அந்தக் கோபத்தினால், ஓநாய்களை அவர்கள் அவ்வப்போது கொல்லவும் செய்கின்றனர்.

ஓநாய்கள் வேட்டையாட வந்தால், அவற்றுக்கு எதிராகத் தங்கள் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்திக் கால்நடைகளைப் பாதுகாக்கின்றனர். அதையும் மீறி, அவை தூக்கிச் செல்வதைக் கடவுளுக்குப் படைக்கப்பட்டதாக நினைத்துக்கொள்கின்றனர். குளிர்காலங்களில் கடுமையான பனிப்பொழிவு, கோடைக்காலங்களில் கொளுத்தும் வெப்பம் என்று மிகக் கடுமையான நிலவியலைக் கொண்டது மங்கோலியா. அங்கு வாழ உடல் மற்றும் மன உறுதி அதிகம் தேவை. எப்போதும் வாழ்வுக்காக ஓநாய்களோடு போட்டியிட்டுக் கொண்டேயிருப்பதன் மூலம், தங்களுடைய இயற்கையான உள்ளுணர்வுகளையும் திறன்களையும் இழக்காமல் இருப்பதாக அந்த மக்கள் கருதுகின்றனர்.

மங்கோலிய சாம்பல் ஓநாய்
மங்கோலிய சாம்பல் ஓநாய்

மரியாதை மற்றும் கோபம், இந்த இரண்டையும் இந்த மக்கள் தராசில் வைத்ததுபோல் சமமாகப் பாவித்துப் பராமரித்துக் கொண்டிருந்தனர். ஒருபுறம் அதன்மீதான அவர்களுடைய மரியாதை. இன்னொருபுறம், பொருளாதார ரீதியாக அவை ஏற்படுத்தும் சேதங்களால் ஏற்படும் கோபம். அந்த மரியாதையின் நிமித்தமாக அவற்றை வணங்கினாலும்கூட, அவற்றை வேட்டையாட வேண்டிய தேவை வந்தால், அதற்கும் அந்த மக்கள் தயங்குவதில்லை. வலியன பிழைக்கும் என்ற இயற்கை விதிக்கு ஏற்ப வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த நாடோடிப் பழங்குடிகளுக்கு, அந்தப் புல்வெளி நிலம் அற்புதமான வாழ்க்கையைப் பரிசளித்துக் கொண்டிருந்தது. அனைத்தும், 1960-களில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சி நுழையும் வரைதான்...

இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சீன அரசியல் மாற்றத்துக்குப் பிறகு, 1966-ல் ஏற்பட்ட கலாசாரப் புரட்சி, அவர்களுடைய வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ஓநாய்களையும் மதிக்காமல், அவற்றை மங்கோலியர்கள் மரியாதையுடன் வணங்குவதன் காரணத்தையும் புரிந்துகொள்ளாமல் செய்த செயல்கள், எப்படி ஓர் அழகான புல்வெளிப் பிரதேசத்தை மணற்புயல் ஏற்படுகின்ற பாலைவனமாக மாற்றியது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு