Published:Updated:

விலங்குகளிடம்தான் உங்கள் வீரமா?

யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை

ஜியோ டாமின்

விலங்குகளிடம்தான் உங்கள் வீரமா?

ஜியோ டாமின்

Published:Updated:
யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை
னித மனம் எப்போதும் சாகசங்கள் செய்வதில் பேரானந்தம் கொள்கிறது. குறிப்பாக, தன்னைவிடப் பெரிய அல்லது வலுவான விலங்குகளை அது ஒரு சாகச மனநிலையிலேயேதான் அணுகுகிறது.

பாம்புகளை அச்சுறுத்தும் விலங்காகக் காணும் மனிதன், நச்சற்ற பாம்பேயாகினும் அதை அடித்துக் கொன்றுவிடுவதில் ஒரு விநோத வெற்றிப் பெருமிதம் கொள்கிறான். இந்த வெற்றுப் பெருமிதத்துக்கு அதிக விலைகொடுத்தவை, நிலத்தின் பெரும் விலங்குகளான யானைகளாகத்தான் இருக்கும்.

யானை
யானை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்போது ஒரு யானை தன் வாழிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு சங்கிலிகளில் பிணைக்கப்படுகிறதோ அப்போதே அது கொல்லப்பட்டுவிடுகிறது. யானைகளின் ரத்தம் மனித வரலாறு முழுவதும் சிந்தப்பட்டிருக்கிறது. கற்காலம் முதலே யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இறைச்சிக்காகவும் தந்தங்களுக்காகவும் மட்டுமன்றி வேட்டை சாகசங்களுக்காகவும் யானைகள் வரைமுறையின்றிக் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றன. யானைகள் வாழும் எந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. கடத்தல் காரர்களிட மிருந்து கைப்பற்றப்பட்ட தந்தங்கள் சில நாடுகளில் மலைபோலக் குவிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்படுவதைப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே பேரரசுகளை விரிவுபடுத்தும் அரசர்களின் ஆசைகளுக்காகப் போர்க்களங்களில் ஆயிரமாயிரமாய் பலியானவை அவை. தமிழிலக்கியங்களில் இதுகுறித்த ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கின்றன. பிடிக்கப்பட்டுப் பயிற்சியளிக் கப்படும் யானைகள் பளு தூக்கவும் அரசர்களைச் சுமந்து செல்லவும் கோயில்களில் பணிவிடைகள் செய்யவும் என... ஆயுள் முழுதும் நடைப்பிணமாய் வாழ்ந்து மடிகின்றன. யானைகளைப் பிடிக்க மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பெரும்பள்ளங்களின் எச்சங்களை இன்னும்கூடக் காணமுடிகிறது. வனத்தின் காவலர்கள் என்று நாம் யாரைக் கொண்டாடுகின்றோமோ அதே பழங்குடி மக்களைக் கொண்டே இந்தக் கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. காட்டு யானைகள் எப்படிப் பயிற்றுவிக்கப்படுகின்றன என்று டாப் ஸ்லிப் யானை முகாமிலிருந்த ஊழியர்களிடம் ஒருமுறை கேட்டபோது, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தனர். அந்த மர்மப் புன்னகைக்குள் புதைந்துகிடக்கிறது கும்கி யானைகளின் வரலாற்றுச் சோகம். கம்பீர நடைபோட்டபடி கானுலா வந்த காட்டின் அரசனை, ‘நில்’ என்றால் நிற்கவும், ‘போ’ என்றால் போகவும் பணியவைப்பது அத்தனை எளிதா என்ன? ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் சிறைபிடிக்கப்பட்ட, உணர்வுகளும் ஆளுமையும் மரத்துப்போன யானைகள், முகாம் ஊழியர் கொண்டு வரும் கவளச்சோற்றுக்காய் வாய்பிளந்தபடி வரிசையாய் நிற்பதைப் பார்க்க சகிக்கவில்லை. இந்த அவலத்தைச் சாத்தியமாக்கிய மனித விலங்கு நிச்சயம் புத்திசாலிதான்.

யானை
யானை

மனிதனின் விநோதக் கொண்டாட்டங்களில் ஒன்று பட்டாசு என்றால் அது மிகையில்லை. நாயின் வாலில் பட்டாசைக் கொளுத்திவிட்டு அதுபடும் பாட்டை ரசிக்கும் மனம் இருக்கிறதே, குரூரத்தின் உச்சம். வெடித்துச் சிதறும் பட்டாசு ஒலியில் தன் சூழலின் மொத்த உயிரினங்களும் உடல் ஒடுங்கி உயிர் நடுங்கிக்கிடக்க, தன் உடலை உருக்குலைக்கும் கந்தக நெடியை ஆழ்ந்து சுவாசித்தபடி தம் குழந்தைகளோடு குதூகலிப்பவர்கள்கூட முந்தைய குரூரத்திற்குச் சிறிதும் சளைத்தவர்களில்லை. இந்த குரூர வேடிக்கையின் தொடர்ச்சியாகவே சமீபத்திய கேரள சம்பவத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது குறித்த ஒரு கவிதையை நான் பகிர்ந்தபோது, என் கேரள நண்பர் ஒருவர் பதறியபடி தொடர்புகொண்டு இந்தச் சம்பவம் ஒரு சாதாரண விபத்துதானென்றும், காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட பட்டாசுப்பொறியில் யானை சிக்கிவிட்டதென்றும் விளக்கம் கொடுத்தார். காட்டுயிரில் மலிவானதென்றும் உயர்வானதென்றும் எதுவும் உண்டா என்ன? நிச்சயமாக யானைகள் காட்டின் ஆதார உயிரினம் (Key species) என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு வளமான காட்டின் அடையாளமே அதன் ஆதார உயிரினங்களின் வளம்தான். எனினும் காட்டின் உணவுச்சங்கிலியில் எவ்விதத்தில் காட்டுப்பன்றி கீழானது?

கேரள சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளாகவே இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு மாட்டுக்கு வெடி வைத்துக் கொடுக்கப்பட்டு, அந்த விலங்கும் கொடும் துயரத்தை அனுபவித்துவருகிறது. கேரளாவை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள், ஒலித்த குரல்கள் எல்லாம் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பவத்தில் முற்றிலும் அடங்கிப்போனது யதேச்சையான விசயம் அல்ல. அது பா.ஜ.க ஆளும் மாநிலம். அதனால் எந்த விலங்கின் பொருட்டுப் பல படுகொலைகள் அரங்கேறியதோ, அந்த விலங்குக்கு நேர்ந்த ஒரு துயரம் இங்கு பேசுபொருளாகக்கூட மாறவில்லை. மாறாக, கேரளாவில் பாலக்காட்டில் நடந்த சம்பவம், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மலப்புரம் பகுதிக்கு சமூக ஊடகப் போராளிகளால் மாற்றப்பட்டது. முறையான விசாரணை தொடங்கும் முன்னர் சில இஸ்லாமியப் பெயர்கள்மீது வன்மமான தீர்ப்பு எழுதப்பட்டது. இவர்கள் எல்லாம் இமாச்சல் துயரத்தில் காணாமல்போனார்கள். ஆனால் மனித-காட்டுயிர்களுக்கு இடையிலான பிரச்னை என்பது இதுபோன்ற அற்ப அரசியல் நோக்கங்களைத் தாண்டியது. அதற்கு இன்னும் பரந்துபட்ட விசாலமான புரிதல் தேவை.

தொடர்ந்து நாம் பார்க்கும் யானைகள், புலிகள் போன்ற ஆதார உயிர்களின் அழிவு நமது ஒட்டுமொத்தக் காடுகள் மற்றும் காட்டுயிர்களும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இருப்பதையே உணர்த்துகின்றது. யானைகளின் வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல் அவைபடும் பாட்டை உணர முடியாது.

யானைகள் குடும்பமாக வாழும் இயல்புடையவை. கூட்டத்தின் தலைமைப்பதவி எப்போதும் பெண் யானைக்குத்தான். எப்போது இளம் ஆண் யானை இணைசேரும் வயதை எட்டுகிறதோ அப்போதே அது கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே உலாவத் தொடங்கிவிடும். இது தன் குடும்பத்துக்குள்ளேயே இனச்சேர்க்கை நடப்பதைத் தவிர்க்க இயற்கையிலேயே இயல்பூக்கத்தினால் (Instinct) நிகழ்கிறது. இந்தத் தனித்த ஆண் யானைகளே பெரும்பாலும் ஆபத்தைச் சந்திக்கின்றன. மதம்பிடித்த யானைகளாக அடையாளம் காணப்படுபவை இந்தத் தனித்த ஆண் யானைகளே. இவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சி, யானைகளின் ஆண் - பெண் விகிதத்தைக் கடுமையாக பாதிக்கிறது. பெண் யானைகளின் இணைசேரும் வாய்ப்புகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

யானைக் கூட்டத்துக்கு அதிக உணவு தேவைப்படுவதால் எப்போதும் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து தங்குவதில்லை. தொடர்ந்து நீருக்காகவும் உணவுக்காகவும் அவை இடப்பெயர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். வறட்சிக்காலங்களில் நீருக்காகவும் உணவுக்காகவும் அவை காலங்காலமாக தாம் வந்து செல்லும் சமவெளிப்பகுதிகளை நோக்கி நகர்கின்றன. எப்போதும் அவை ஒரே பழக்கப்பட்ட பாதையில் பயணிக்கும் பண்புடையவை. அவற்றின் வலசைப்பாதைகள் மனிதனின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி யிருக்கும்போது அவை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றன அல்லது தமக்குப் பழக்கப்படாத பாதைகளினூடாய்ப் பயணித்து நீருக்காகவும் உணவுக்காகவும் விளைநிலங்களை அடைகின்றன. மனித - விலங்குமோதல் இந்தப் புள்ளியில்தான் தொடங்குகிறது.

பசிகொண்ட பரிதாபகரமான இந்தப் பெரு விலங்குகளின் எளிய இலக்காகும் விவசாயிகளின் வாழ்வும் நிச்சயம் பரிதாபக ரமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. விவசாயிகளும் விவசாயமும் ஏற்கெனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், விளைந்து நிற்கும் பயிர்களை உணவாக்கும் யானைகளின் மீது அவர்களுக்கு இருக்கும் கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே. ஒருபுறம் பெரு நிறுவனங்களும் ரிசார்ட்டுகளும் கல்லூரிகளும் ஆசிரமங்களும் யானைகளின் வலசைப் பாதைகளை ஆக்கிரமித்து நிற்க, இன்னொருபுறம் அரசே சாலைகளால் காடுகளைத் துண்டு துண்டாகக் கூறுபோட்டு யானைகளின் வலசைப்பாதைகளைச் சின்னா பின்னப்படுத்தி யிருக்கின்றனர். இந்தப் `பெரிய’ மனிதர்களுக்கும் பேருயிர்களுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றனர் விவசாயிகள்.

ஆனால் அவர்களின் அந்தக் கோபம் விலங்குகளுக்குப் பட்டாசை உண்ணக் கொடுக்கும் குரூரமாக வெளிப்படும் போக்குதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு வாரம் துயரத்தை அனுபவித்து இறந்த கர்ப்பிணி யானையும், வாய் பிளந்த நிலையில் வெளியாகியிருக்கும் மாட்டின் புகைப்படமும் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாதவை. இரண்டுமே மானுடத்தின் மகத்தான தோல்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism