Published:Updated:

15 கால்நடைகள், 2 மனிதர்களைக் காவு வாங்கிய Man-eater T23 புலி உருவானது எப்படி?

T23 புலி

மொத்தம் 300 களப்பணியாளர்கள் களத்தில் 11வது நாளாகத் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர்.

15 கால்நடைகள், 2 மனிதர்களைக் காவு வாங்கிய Man-eater T23 புலி உருவானது எப்படி?

மொத்தம் 300 களப்பணியாளர்கள் களத்தில் 11வது நாளாகத் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Published:Updated:
T23 புலி
தமிழ்நாட்டின் முதுமலை, கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் இந்த மூன்று வனங்களும் இணைந்த முச்சந்திப்பு பகுதியே உலகில் வங்கப்புலிகள் அதிகம் வாழும் பகுதியாக இருக்கிறது. வேட்டை, காடழிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெரும்பூனைக் குடும்பத்தின் அதிசய உயிரினமான புலிகள் அருகி வரும் சூழலில், 'ப்ராபளமேட்டிக் டைகர்ஸ்' உருவாவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அந்தப் பட்டியலில் தற்போது இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கும் T 23 என எண்ணிடப்பட்டிருக்கும் புலியும் சேர்ந்திருக்கிறது.
T23 - காயம்பட்ட புலி
T23 - காயம்பட்ட புலி

தென்னிந்திய காடுகளின் அரசனாகக் கருதப்படும் புலிகள், பெரும்பாலும் ரகசிய வாழ்வையே விரும்பக்கூடியவை. இரை, நீர்நிலை, இனப்பெருக்கம் ஆகிய தேவைகளுக்காக ஒரு குறிப்பிட்ட எல்லையை வரையறை செய்து அதற்குள் வாழும் இயல்பைக் கொண்டவை அந்த எல்லையை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய எல்லையை கைப்பற்றவும் ஆண் புலிகளுக்கு இடையே நடக்கும் போர்தான் 'டெரிட்டோரியல் ஃபைட்' எனப்படும் எல்லைக்கான போர். 'வலியதே வாழும்' என்ற இயற்கையின் நியதியின் அடிப்படையில் வலிமையான ஆண் புலியே அந்த எல்லைக்கு அரசனாக முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு ஆண் புலிகளுக்கு இடை நடக்கும் போரில் ஒரு புலி உயிரை இழக்கலாம், கடுமையான காயம் ஏற்பட்டு வேட்டைத்திறனை இழக்கலாம். லேசான காயங்களுடன் உயிர் தப்பித்தால் போதும் என ஏரியாவைவிட்டே ஓடலாம். இதில் ஏதாவது ஒன்று நடப்பது உறுதி. முதல் சொன்ன இரண்டு மற்றும் மூன்றாவது வகை புலிகள்தான் 'பிராப்ளமேட்டிக் டைகர்', ' மேன் ஈட்டர்' போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

வனத்தைவிட்டு வெளியேறியோ அல்லது வனத்தின் எல்லையிலோ மனிதர்களை அல்லது கால்நடைகளை ஒரு புலி தாக்குகிறதென்றால் வனத்துறை உற்றுநோக்குவது, அந்தப் புலியின் உடலில் உள்ள வரிகளைத்தான். மனிதனின் கைரேகை ஒவ்வொருவருக்கும் எப்படி தனித்துவமாக இருக்கிறதோ அதேபோலத்தான் ஒவ்வொரு புலிக்கும் தனித்துவமான வரிகள் இருக்கும். அதுவே அந்தப் புலியின் அடையாளமாக இருக்கும்.

டைகர் 23
டைகர் 23

மசினகுடியில் தற்போது தேடப்பட்டு வரும் டி-23 என்ற ஆண் புலிக்கும் அதன் அடிப்படையிலேயே இந்த எண் அடையாளமாக இடப்பட்டுள்ளது. முதுமலை காட்டில் தனக்கான ஒரு எல்லையை வைத்திருந்த இந்த டி 23 என்ற ஆண் புலிக்கு தற்போது சுமார் 13 வயது இருக்கலாம். உடல் வலிமை தளர்ந்து முதுமையை எட்டும் இந்தப் புலி, ஓர் இளம் புலியுடன் நடந்த போரில் எல்லையை இழந்து கடுமையான காயங்களுடன் வெளியே வந்து வேறு வழியில்லாமல் கூடலூர் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்தது.

காயம் காரணமாக வேட்டைத் திறனை இழந்த இந்த டி 23, உணவுக்காகக் கால்நடைகளைத் தாக்கத் துவங்கியது. கடந்த 2 மாதங்களில் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 15க்கும் அதிகமான கால்நடைகளை தாக்கிய இந்த டி 23, தேவன் எஸ்டேட்டில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்ற நபரை தாக்கி கொன்றது. கொதிப்படைந்த கூடலூர் மக்கள் போராட்டம் நடத்த புலியை பிடிக்கக் களமிறங்கியுள்ளது வனத்துறை. தேயிலைத் தோட்டத்தில் இரண்டு முறை அந்தப் புலி தென்பட்டும் கால்நடை மருத்துவர்களால் மயக்க ஊசி செலுத்த முடியாமல் போனது.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் தேவன் எஸ்டேட்டில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மசினகுடி பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாதன் என்ற நபரை‌ மறுநாளே பட்டப்பகலில் தாக்கிக் கொன்றது டி-23. அவரது உடல் பாகங்களையும் தின்றது. டி23 மனித உடலை ருசி பார்த்தது அதுதான் முதல் முறை.

மக்களையும் வனத்துறையினரையும் இது மேலும் பதற்றமடைச் செய்தது, போராட்டங்கள் மேலும் தீவிரமாக, நெருக்கடியை சமாளிக்க முடியாத வனத்துறை அதிகாரிகள் டி 23யை சுட்டுப் பிடிக்க வாய்மொழி உத்தரவை பிறப்பித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவே வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், 3 கால்நடை மருத்துவர்கள், தமிழக வனத்துறையோடு கைக்கோத்திருக்கும் கேரள வனத்துறையினர் என மொத்தம் 300 களப்பணியாளர்கள் களத்தில் 11வது நாளாகத் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர்.

டைகர் 23 தேடுதல் வேட்டை
டைகர் 23 தேடுதல் வேட்டை

'ப்ராப்ளமேட்டிக் டைகர்ஸ்' நீலகிரிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2014 முதல் இந்த டி 23க்கு முன்பு வரை ஆட்கொல்லி என்ற பெயரில் ஊட்டியில் ஒன்று, கூடலூரில் இரண்டு என மொத்தம் 3 ஆண் புலிகளைத் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையாக்கியிருக்கிறார்கள்.

'ப்ராப்ளமேட்டிக் டைகர்'களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை இந்த இரண்டில் ஒன்றை கொடுத்தே ஆக வேண்டும் என்பது மட்டுமே தீர்வாக இருக்கும் இத்தகைய நெருக்கடியான சூழலில்‌ இந்த டி 23க்கு எதை நாம் கொடுக்கப் போகிறோம்?