Published:Updated:

திருவள்ளூர்: `பட்டம் நூலில் சிக்கிய காகம், தப்பிப் பிழைத்த கதை!’ - நெகிழ வைத்த மீட்புப் போராட்டம்

காகம் மீட்புப் பணி
காகம் மீட்புப் பணி

திருமுல்லைவாயலில், பட்டம் நூலில் சிக்கி உயிருக்குப் போராடிய காகத்தை அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் பாய்ந்துவந்து மீட்டனர். இந்த மீட்புப் பணியின்போது மிக சாதுர்யமாகச் செயல்பட்டு காகத்தை மீட்டெடுத்த வீரர்களின் பணி, அப்பகுதி மக்களை நெகிழச்செய்தது!

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயலில் உள்ளது சரஸ்வதி நகர். இங்குள்ள 6-வது தெருவில் உள்ள சீமைக்கருவேல மரம் ஒன்றில், சிக்கியிருந்த பட்டம் நூலில் காகம் ஒன்று எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள காகங்கள் அனைத்தும் சிக்கிக்கொண்ட காகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன. அந்த வழியே சென்ற பொதுமக்களும் காகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிக்கிக்கொண்ட காகம்
சிக்கிக்கொண்ட காகம்

ஆனால், காகத்தின் சிறகுகள் பட்டம் நூலில் நன்றாகச் சிக்கிக்கொண்டதால், பொதுமக்களின் மீட்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. இதையடுத்து அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு நாம் தகவல் கொடுத்தோம். மறுமுனையில், 'காகம் சிக்கியிருக்கும் நிலை' குறித்து தெளிவாகக் கேட்டறிந்துகொண்ட அதிகாரிகள், அடுத்த 20 நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனத்தில் வந்து சேர்ந்தனர்.

மரக்கிளையில் நூலில் சிக்கியபடி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காகத்தின் நிலையை முதலில் நோட்டம் விட்டனர். காகத்தின் கால்களில் சிக்கியிருந்த பட்டத்தின் நூல், அருகிலிருந்த மின் கம்பியோடு இணைந்திருந்ததால், பாதுகாப்பாக எப்படி மீட்பது என்று ஆலோசித்தனர். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, ஆலோசனையை முடித்துக்கொண்டு பரபரவென காகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

சென்னை: மருத்துவமனையில் இரவு பகலாக பணி! - அதிகாலையில் மாடியில் இருந்து குதித்த டாக்டர்

ஆனாலும்கூட சீமைக் கருவேல மரங்களுக்கிடையே மிகவும் சிக்கலான நிலையில், காகம் தொங்கிக் கொண்டிருந்ததால் மீட்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியைத் தழுவின. இதற்கிடையே, தீயணைப்பு வீரர்களின் மீட்பு முயற்சியால் பதற்றத்துக்குள்ளான காகம், பயத்தில் சிறகசைத்துப் பறக்க முயற்சிக்க... நூலின் பிடி இன்னும் இறுகியது.

இதையடுத்து சமயோசிதமாக செயல்பட்ட ஒரு வீரர், காகம் அசையாமல் இருப்பதற்காக ஒரு நீண்ட கம்பி ஒன்றினால் அணைத்த நிலையில் பக்குவமாக காகத்தைப் பிடித்துக்கொள்ள, மற்ற வீரர்கள் அருகிலிருந்த மின் கம்பத்தில், இரும்பு ஏணியை சாய்த்துவைத்துப் பிடித்துக்கொண்டனர். கையில் கத்தரிக்கோலுடன் அந்த இரும்பு ஏணியில் ஏறிய வீரர் ஒருவர், காகம் சிக்கிக்கொண்டிருந்த நூலை லாகவமாகக் கத்தரித்ததோடு, மற்றொரு கையால் காகத்தையும் அணைத்துப் பிடித்தவாறே கீழிறங்கினார்.

மீட்கப்பட்ட காகம்
மீட்கப்பட்ட காகம்

மீட்கப்பட்ட காகம் பயத்தில் ஒடுங்கிப்போயிருந்ததைக் கண்ட பொதுமக்கள், அதன் முகத்தில் தண்ணீர் தெளித்து, உணர்வு நிலைக்குக் கொண்டுவந்தனர். பயம் தெளிந்து ஓரளவு சகஜ நிலைக்குத் திரும்பிய காகத்துக்கு குடிதண்ணீர் கொடுக்கப்பட்டது. இரண்டு மிடறு விழுங்கிய காகம், மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி சிறகசைக்க ஆரம்பித்தது. காகங்கள் கூட்டம் ஆர்ப்பரிப்புடன் அந்த இடத்தை சூழ்ந்துகொண்டன.

இதையடுத்து அந்தக் காகத்தை, அப்படியே பக்கத்திலிருந்த ஒரு சுவரில் பாதுகாப்பாக உட்கார வைத்த தீயணைப்பு வீரர், ''பட்டம் நூலில் சிக்கி, நெடுநேரம் உயிருக்காகப் போராடியிருக்கிறது காகம். அதனால், அதன் சிறகுகள் கொஞ்சம் காயமடைந்திருக்கின்றன. பரவாயில்லை... இனி பிழைத்துவிடும்...'' என்று முகம் மலர்ந்தார். பொதுமக்கள் அனைவரும் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

தன்னைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை சிறிது நேரம் உற்றுப்பார்த்த காகம், மெல்ல மெல்ல சிறகசைத்தபடி அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தது... தீயணைப்பு வீரர்களும் வந்த பணியை வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தியோடு வாகனத்தில் திரும்பிச்செல்ல... கூடியிருந்த மக்கள் கூட்டமும் குழுமியிருந்த காகங்களின் கூட்டமும் கலைந்துசெல்ல... வெறிச்சோடிய அந்தத் தெருவில் மனிதம் மட்டுமே நிறைந்திருந்தது!

அடுத்த கட்டுரைக்கு