Published:Updated:

``600 நாய்களைப் பாதுகாத்த கீதாராணி இன்று இல்லை... நினைவுகளைப் பகிரும் தோழமைகள்!”

25 நாய்களோடு தொடங்கிய கீதாராணி அம்மாவின் இந்த லட்சியப் பயணம், 600 நாய்களோடு முடிந்திருக்கிறது.

கீதா ராணி
கீதா ராணி

“டேய் பாலன், நான் திடீர்’னு செத்துப்போய்ட்டா என் கொழந்தைங்களையெல்லாம் நீ, பத்திரமா பாத்துப்பியாடா? நீதான்டா பாத்துக்கணும்’ன்னு ஆஸ்பத்திரியில வெச்சு அழுதுகிட்டே அம்மா என்கிட்ட சொன்னதும், நாங்க ரெஸ்க்யூ வேனை எடுத்துக்கிட்டு போய், ஒவ்வொரு நாயா காப்பாற்றினதும் ஒவ்வொண்ணா நினைவுக்கு வந்து தினமும் என் மனசைப் போட்டுப் புழிஞ்சு எடுக்குது சார்...” என்று கலங்குகிறார் பாலன்.

“ ப்ச்... அந்த அம்மாவைப் போலவெல்லாம் இன்னொருத்தர் பொறந்து வரவே முடியாதுங்க. எங்க அம்மா, நாய்களின் அன்னை தெரசா’ங்க... அவங்களைப் பொறுத்தவரையும் இதெல்லாம் அவங்க கொழந்தைங்க... என்ன அப்படி பாக்குறீங்க? ஆமாம்! இங்கிருக்கிற ஒவ்வொரு நாயும் அவங்களுக்கு கொழந்ததான்... அம்மா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா இதுங்களை நாய்’னு சொல்லிர முடியாது தெரியுமா? ஆங்... ”ஆதங்கமும் ஆற்றாமையுமாய்ச் சொல்கிறார் நாகராஜ்.

ஸ்நேகாலயா
ஸ்நேகாலயா

“அது, மனுஷப் பிறவியே இல்ல கண்ணு... தெய்வப் பிறவி... மனுஷங்கள்ல அப்படி ஒரு ஆத்மாவை நினைச்சுக்கூட பாக்க முடியாது. போயிருச்சு... போயிருச்சு... எங்களை அனாதையா தவிக்கவிட்டுட்டுப் போயிருச்சு” என்று புலம்புகிறார், 85 வயதான சாந்தி பாட்டி.

“அம்மா இருந்திருந்தா, இந்த நாய்களையும் அதுங்களோட சேர்த்து எங்களையும் தங்கமாட்டம் தாங்குவாங்க” சரளமாக வராத வார்த்தைகளை மெள்ளக் கோத்து, தாங்க முடியாத தன் இழப்பைப் பகிர்கிறார் தேவி.

பாலன், நாகராஜ், சாந்தி, தேவி... இவர்கள் நான்குபேரும் கோவை ஸ்நேகாலயா பிராணிகள் காப்பகத்தின் ஊழியர்கள். சமீபத்தில் இறந்துபோன சிநேகாலயாவின் நிறுவனர் கீதா ராணியைப் பற்றி கேட்டதும், அவர்கள் இப்படித்தான் தாங்க இயலாமல் துயருற்றார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த கணத்தில், இந்தப் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அன்பும் கீதா ராணியின் இதயத்தில்தான் இருந்திருக்குமோ என்று தோன்றியது. கூடவே இன்னொரு கேள்வியும்... நாய்கள்மீது கீதா ராணி கொண்டிருந்த அன்பையும் பரிவையும் பாசத்தையும் இவர்கள் நினைவுகூரும்போதே நமக்கு நெஞ்சு கனக்கிறதே, கீதா ராணி அரவணைத்து அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கும் 600 தெரு நாய்களுக்கும் பேச முடிந்தால், என்னவெல்லாம் அழுது தீர்க்கும்; எப்படியெல்லாம் இதயம் திறக்கும்?

கீதாராணி, பாலன்
கீதாராணி, பாலன்

தெருநாய்களின் அன்னை, நாய்களின் தோழி, நாய்க்காரம்மா... இப்படி கீதாராணிக்கு பல அன்புப் பெயர்கள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்நேகாலயா பிராணிகள் காப்பகம் என்கிற பெயரில் ஆதரவற்ற தெரு நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்துவந்த கீதாராணி, உடல்நலக் குறைவால் சமீபத்தில் இறந்துபோனார். அவருக்குப் பிறகு, ஸ்நேகாலயா எப்படி இருக்கிறது, அவர் வளர்த்துக்கொண்டிருந்த 600 நாய்களின் நிலை என்ன என்பதை அறிய, கோயம்புத்தூர் பெரியநாயக்கன் பாளைத்தை அடுத்துள்ள சாந்திமேடு பிரிவுக்குள் இருக்கும் ஸ்நேகாலயாவிற்குச் சென்றோம். அது, மலை அடிவாரம். வீடுகள் அதிகமில்லாத ஒதுக்குப்புறமான இடம். சாதாரண மனிதர்களால் ஒரு நாய் குரைக்கும் சத்தத்தையே பொறுத்துக்கொள்ள முடியாத சூழலில், 600 நாய்கள் குரைக்கும் சத்தங்களை சங்கீதமாக வரித்துக்கொண்டிருக்கும் பேரன்புப் பிரதேசம்!

நாய்களுக்கென்று செய்யப்பட்டிருக்கும் நீளமான தட்டில் கூழ்போல கரைக்கப்பட்டிருந்த சோற்றைப் பரிமாறிக்கொண்டே பேசத் தொடங்கினார் பாலன், “இதை வெறும் சோறு’ன்னு நினைச்சுறாதீங்க... சிக்கன் சோறு! சிக்கனை நல்லா வேகவெச்சு சாதத்தில் மிக்ஸ் பண்ணிருவோம். தனித்தனி பீஸா போட்டா எல்லாத்துக்கும் பத்தாதில்ல அதனால்தான், 'எல்லாம் கீதாராணி அம்மாவோட ஐடியா' என்று கீதா ராணியின் நினைவுக்குள் மூழ்கினார்...

பெத்தவங்களுக்கே ஒருவாய் சோறுபோட யோசிக்கிற இந்த பொல்லாத காலத்துல, வயிற்றை நிறைக்க வழியத்து தெருவுல சுத்திக்கிட்டு இருந்த இந்த நாய்ங்களெல்லாம் இனிமேல் வாய்க்கு ருசியா சாப்பிடணும்’ னு காலையிலேயே கிளம்பி உக்கடம் மார்க்கெட்டுக்குப்போய், கோழிக்கறியும் மீனும் வாங்கிக்கிட்டு தூக்க முடியால் தூக்கிட்டு வரும் கீதா ராணி அம்மாவை ஊரே வியந்துபார்க்கும். நானும் அப்படித்தான் ஊருசனத்தோட சனமா தூரத்துல இருந்து அந்த அம்மாவை வியந்து பார்த்துட்டு இருந்தேன். நான் ஒரு டிரைவர், அவங்க ரெஸ்க்யூ வேனுக்கு டிரைவர் இல்லைன்னா, எப்பவாச்சும் ஆக்டிங் டிரைவரா என்னைக் கூப்பிடுவாங்க. காலையில 11 மணிக்கு வண்டியை எடுத்தா, தெருத்தெருவா சுத்துவோம். எங்கெல்லாம் தெரு நாய்ங்க அடிபட்டுக் கிடந்தாலும் அதை உடனே மீட்டு, டாக்டர்கிட்ட கொண்டுபோய் ட்ரீட்மென்ட் கொடுத்து குணமாக்கி, இங்கே கொண்டுவந்திருவோம். அடிபட்டு உயிருக்குப் போராடுற நாய்ங்களைப் பார்த்துட்டா போதும், அதைக் காப்பாத்துற வரைக்கும் அந்த அம்மாவுக்கு உசுரு இருக்காது. எங்க வீட்ல ஆடு வளர்த்ததால ஆடுங்களுக்கு பாதுகாப்பா பத்து நாய்ங்களை வளர்த்தோம்.

பாலன்
பாலன்

அந்த அனுபவத்துல எனக்கு நாய்ங்க மேல இஷ்டம் இருந்தாலும் இப்படி சேத்துலயும் சகதிலேயும் குப்பையிலயும் சுத்துர தெருநாய்கள் மேல ஆரம்பத்தில் பெருசா ஈர்ப்பு இல்லை. ஆனா, கீதா ராணி அம்மா இந்த நாய்களுக்காகப் படுற கஷ்டத்தையும், அவங்க இதுங்க மேல காட்டுற பாசத்தையும் பார்த்து இதுதாண்டா கோயில், இதுதாண்டா சொர்க்கம்’னு தோணுச்சு. அதன்பிறகு, அம்மா என்னை ஆக்டிங் டிரைவரா கூப்பிடும்போதெல்லாம் ரொம்ப ஆர்வமா ஓடுவேன். நாய் எவ்வளவு மோசமா இருந்தாலும், முரடா இருந்தாலும் நானே தொட்டுத் தூக்கிக் குளிப்பாட்டி வண்டியில ஏத்துவேன். என்னோட ஈடுபாட்டைப் பார்த்துட்டு, 'நீ இங்கேயே வேலைக்குச் சேர்ந்துடுறியா பாலன்’னு அம்மா கேட்டாங்க. ஒரு நிமிஷம்கூட நான் யோசிக்கலை 'சரிம்மா’ன்னு சொல்லிட்டேன். இதோ, பத்து வருஷம் ஓடினதே தெரியலை. இப்போ இதுதான் என் உலகம்னு ஆகிருச்சு. போட்டியும் பொறாமையும் கொண்ட மனுஷங்க மத்தியில் வாழ்றதைவிட, இவற்றுடன் இருக்கிறது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..." என்று கேட்டவர், "அதெல்லாம் அனுபவிச்சாதான் சார் புரியும். அதுக்கு ஒரு தனி மைண்டு செட் வேணும் எல்லோராலயும் இதைப் பண்ணிர முடியாது" என்றார் அவரிடம். கீதாராணிக்கு எப்படி நாய்கள் மேல இவ்ளோ பாசம்? எனக் கேட்டோம்.

நீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா...? -  உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்!

"நான் வேலைக்கு வந்த புதுசுல, நானும் இதே கேள்வியை அந்த அம்மாவப் பாத்து கேட்டேன். அவங்க சொன்ன பதில்ல நான் ஆடிப்போயிட்டேன், சொல்றேன் கேளுங்க... கீதாராணியின் அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ். அவங்களுக்குள்ள அடிக்கடி வர்ற சண்டையால, ராணி அம்மாவை அடிக்கடி கேரளாவுல உள்ள அவங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பிவெச்சிருக்காங்க. அவங்க பாட்டி, கேரளாவில் மிகப்பெரிய பணக்காரங்க. தங்களோட புள்ள தங்களை மீறி காதல் திருமணம் பண்ணிக்கிட்ட கோவம் அவங்களுக்கு இருந்துட்டே இருந்ததால, ராணி அம்மாவை அந்த வீட்ல யாருமே பெருசா கண்டுக்க மாட்டாங்களாம். அந்த வீட்ல பத்துப் பதினைஞ்சு நாய்களுக்குமேல இருந்திருக்கு. அந்த நாய்களோட விளையாடுறதுதான் அங்கே அவங்களை தனிமையிலிருந்து மீட்டிருக்கு. மனுஷங்கக்கிட்டே இருந்து கிடைக்காத அன்பை நாய்கள் கொடுத்ததால, அப்பவே அந்த அம்மாவுக்கு நாய்கள் மேல பிரியம். கேரளாவிலிருந்து இங்கே வந்தாலும் அப்பா-அம்மாவுக்குத் தெரியாம ரோட்டுல திரியுற நாய்க்குட்டியெல்லாம் தூக்கிட்டு வந்து ஒளிச்சு வெச்சு வளர்த்திருக்காங்க. அது, அவங்க அப்பா-அம்மாவுக்குத் தெரிஞ்சு, 'இப்படியெல்லாம் செய்யக்கூடாது'ன்னு அடிச்சிருக்காங்க. அதுக்குப் பிறகு, படிப்பு, வேலை, திருமணம், ஆண் ஒண்ணு பெண் ஒண்ணு’ன்னு ரெண்டு குழந்தைங்க’. சராசரி வாழ்க்கை வாந்துட்டு இருந்திருக்காங்க. இடையில குடும்பத்தில் நிறைய பிரச்னைகள். எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்த ராணி அம்மாவுக்கு, சின்ன வயசுபோலவே தன்னுடைய கடைசி காலமும் நாய்களோடையே கழியணும்னு ஆசைப்பட்ருக்காங்க. சின்ன வயசுல தனக்கு ஆதரவா இருந்தது நாய்கள்தான். 'மிச்சமிருக்கிற என் வாழ்நாளை ஆதரவற்ற நாய்களுக்காக செலவிடுறதுதான் என் ஆசை'ன்னு ஸ்நேகாலயாவை ஆரம்பிச்சிருக்காங்க’ என்று நெகிழ்ந்த குரலில் ஸ்நேகாலயாவின் வரலாறு சொல்லி முடித்தபோது ஒரு சினிமா கதையைக் கேட்டதுபோல இருந்தது.

தொடர்ந்த பாலன், “இது ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு மேல் ஆகிருச்சு. 25 நாய்களோடு தொடங்கிய கீதாராணி அம்மாவின் இந்த லட்சியப் பயணம், 600 நாய்களோடு முடிஞ்சுருக்கு. இதற்கிடைப்பட்ட அவருடைய வாழ்க்கையை வெறும் வார்த்தையால சொல்லிர முடியுமா? இந்த பக்கம் ஏதோ சூட்டிங்கிற்காக வந்த ஒரு டைரக்டர், எங்ககிட்ட படத்தில் நடிக்க வைக்கிறதுக்காக ஒரு நாய்க்குட்டி கேட்டு வந்தார். அப்போ, கீதாராணி அம்மாவுடைய கதையைக் கேட்டுட்டு, வந்த வேலையை விட்டுட்டு எங்க அம்மாவையும் நாய்களையும் வெச்சு ‘ஞமலி’ன்னு ஒரு குறும்படம் எடுத்தார்’ன்னா பாத்துக்கோங்களேன். தெருவில் திரியும் பல நாய்களிடம் கிட்டவே நெருங்க முடியாது. அவ்வளவு நாற்றமடிக்கும். சில நாய்களுக்கு புண் வந்து உடம்பெல்லாம் சொரி சொரியா பார்க்கவே அருவெறுப்பா இருக்கும். ஆனா, கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அந்த நாயைக் குளிப்பாட்டி கொஞ்சிக்கொண்டு இருப்பாங்க கீதா ராணி அம்மா... அதெல்லாம் லேசுபட்ட காரியம் இல்ல சார்... என்ற பாலனின் குரல் சட்டென்று உடைகிறது; கண்கள் கலங்குகிறது.

`அதுதான் எங்களால தாங்க முடியல!’- உரிமையாளருக்காக உயிரைவிட்ட நாய்

அப்பேர்ப்பட்ட மனுஷிக்கு புற்றுநோய் வரும்னு நாங்க கனவுலகூட நினைச்சுப் பார்க்கலை. ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு, மார்புல புற்று நோய் வந்துருச்சுன்னு தெரிஞ்சதும் அம்மா எனக்குத்தான் போன் பண்ணி என்ன சொன்னாங்க தெரியுமா? ' டேய் பாலன் எனக்கு கேன்சராம்டா... நான் திடீர்னு செத்துப்போய்ட்டா, என் குழந்தைங்களையெல்லாம் நீ பத்திரமா பாத்திப்பியாடா’ன்னு அழுதாங்க' எனக்கு மனசே நொறுங்கிருச்சு சார். அவங்க குழந்தைங்கன்னு சொன்னது, இந்த நாய்களைத்தான். அவங்க மகன் மஞ்சள் காமாலை வந்து முன்னாடியே செத்துட்டார். ஸ்வப்னான்னு ஒரு பொண்ணு இருக்காங்க. அவங்கதான் இப்போ ஸ்நேகாலயாவை நிர்வாகம் பண்றாங்க. நாங்க இங்கேயே இருந்து நாய்களைப் பராமரிக்கிறோம். என் குழந்தைங்களைப் பத்திரமா பாத்துப்பியாடா பாலன்னு அம்மா கேட்டது இன்னமும் என் காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு சார். நாய்களைப் பராமரிக்கிற நான், செத்துப்போய்ட்டா யார் பராமரிப்பான்னு ஒரு பயம் வந்துருச்சு... நான் போய்ட்டா நீ பாத்துப்பியாடான்’னு என் மகன்கிட்ட கேட்டேன். நான் பாத்துக்குறேம்ப்பா’ன்னு சொல்லிட்டான்” இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ராணி அம்மா ஆத்மா சாந்தியடைய எங்க உயிருள்ளவரை இந்த நாய்களை எங்க குழந்தையாட்டம் பாத்துக்குவோம்” என்கிறார் நிறைவாக.

சாந்தி பாட்டி
சாந்தி பாட்டி

அடுத்ததாகப் பேசிய சாந்திபாட்டி, “ எனக்கு ஒரே பொண்ணு கண்ணு. ஆசை ஆசையா வளர்த்து கட்டிக்கொடுத்தேன். வயசாகி வேலைக்குப் போக முடியாம வீட்டில முடங்கினேனா, வீட்டில ஏன் தண்டத்துக்கு உட்கார்ந்துருக்குறன்னு கேட்ருச்சு. பெத்த பொண்ணு இப்படிச் சொல்றத எந்தத் தாயாலதான் பொறுக்க முடியும். இதைக் கேள்விப்பட்டு 10 வருஷத்துக்கு முன்னாடி, நீ என் கூட வந்திரும்மா... நான்தான் உன் பொண்ணு’ன்னு கீதாராணி என்னை இங்கே கூட்டிட்டு வந்துருச்சு. அது சாதாரண மனுஷி இல்ல கண்ணு, தெய்வம். பத்து வருஷமா நான் அதுகூட இருந்து பார்த்துட்டேன். இந்த நாய்களையெல்லாம் தன்னோட குழந்தையா நினைச்சிருந்துச்சு ராணியம்மா... ராணியை, நான் என்னுடைய குழந்தையா நினைச்சிருந்தேன் தம்பி. அதுவும் இந்த வாயில்லா ஜீவன்களும்தான் என்னுடைய உலகமா இருந்துச்சு. நாங்க ஆனந்தமா இருந்தோம். இப்போ எல்லாம் போச்சு... எம் பொண்ணு ராணியம்மா இல்லாத ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு தம்பி. எனக்கே இப்படி இருக்குன்னா இந்த நாய்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்... அந்த அம்மா செத்ததிலிருந்து அஞ்சு நாள் வரை ஒருநாய்கூட எதுவும் சாப்பிடலை தெரியுமா? ஜெம்மின்னு ஒரு நாய் இருக்கு அதுதான் ராணியம்மாவோடயே சுத்தும். அவங்க பெட்லயேதான் படுத்திருக்கும். இப்போ அது அனாதையாட்டம் சுத்துது அதைப் பார்க்கவே முடியலை. பரிதாபமா இருக்கு” மனசு தாங்கல கண்ணு. எங்களைப் பொருத்தவரைக்கும் ராணியம்மா சாகல. வாயில்லா இந்த 600 ஜீவனுக்குள்ளயும் ராணியம்மா வாழ்ந்துகிட்டு இருக்கு” என்று முடிக்கும்போது, குழுமிருந்த ஒவ்வொரு நாயின் கண்களிலும் கீதாராணி தெரிவதைப்போல ஓர் உணர்வு எட்டிப்பார்க்கிறது.