Published:Updated:

யானைகள் செம ஜாலியாக இருக்கு.. சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த வனத்துறை அதிகாரிகள்!

காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான மூன்று யானைகள், திருச்சி யானைகள் மறுவாழ்வு காப்பகத்தில் கொடுமைப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் வன சரகர்கள் பத்திரிகையாளர்களிடம் யானைகளைக் காண்பித்தார்கள்.

திருச்சி காப்பகத்தில் யானைகள்
திருச்சி காப்பகத்தில் யானைகள்

காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான சந்தியா, ஜெயந்தி,, இந்துமதி என்கிற மூன்று யானைகளைப் பராமரித்து வந்த பாகன், கடந்த சிலவருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். அதனால் யானையைப் பராமரிக்க முடியாத நிலையில் அந்த யானைகளை விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குரும்பரம் எனும் கிராமத்தில் இயங்கிவரும் டிரீ பவுண்டேசன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பராமரித்து வந்தது.

இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர், டிரீ பவுண்டேசன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் வனத்துறை அனுமதியின்றி யானைகள் காப்பகத்தை நடத்தி வருவதாகவும், யானைகளை காண்பித்து நன்கொடைகள் வசூலிப்பதாகக் குற்றஞ்சாட்டி எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

விழுப்புரம் முகாமிருந்து வாகனத்தில் ஏற்றப்படும் யானைகள்
விழுப்புரம் முகாமிருந்து வாகனத்தில் ஏற்றப்படும் யானைகள்

அதனையடுத்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேசாயி அடங்கிய அமர்வு, 3 பெண் யானைகளையும் மீட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்திருக்க உத்தரவிட்டனர்.

தொடர்ந்து அவர்கள், திருச்சி யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை விளக்கமாக அறிக்கை தாக்கல் செய்யம் உத்தரவிட்டார்கள்.

ஏற்கனவே, திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தமான் மல்லாச்சி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 27-ம்தேதி, நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவன பராமரிப்பில் இருந்த காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி என்கிற மூன்று யானைகள், திருச்சி யானைகள் காப்பகத்துக்கு வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டது.

திருச்சி  யானைகள் முகாமில்  முதல் சில தினங்கள் சங்கிலியால் கட்டப்பட்ட யானைகளுடன் பாகன்கள்
திருச்சி யானைகள் முகாமில் முதல் சில தினங்கள் சங்கிலியால் கட்டப்பட்ட யானைகளுடன் பாகன்கள்
யானைகள் வாக்கிங்
யானைகள் வாக்கிங்

முன்னதாக யானையை ஏற்றும்போது, வனக்காவலர்கள், யானைகளைக் கடுமையான ஆயுதங்களால் குத்தி, அடித்து சித்ரவதை செய்து யானையைக் கடுமையாக அடித்து லாரியில் ஏற்றுகிறார்கள். இதில் யானைகளின் காலில் ரத்தம் வடிந்ததாகவும் சொல்லப்பட்டது. குறிப்பாக ஜெயந்தி என்னும் யானையை 7 மணி நேரம் போராடி, ஜே.சி.பி இயந்திர உதவியுடன் லாரியில் ஏற்றினர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யானை பாதுகாப்புக் குழு உறுப்பினர் குந்தவிதேவி உள்ளிட்டோர், திருச்சி காப்பகத்தில் யானைகளைக் கால்களில் சங்கிலி போட்டு வைத்துள்ளார்கள். மிகச் சந்தோஷமாக இருந்த யானைகளை அடித்து சித்ரவதை செய்கிறார்கள். மேலும் வசதிகள் குறைவான திருச்சி யானைகள் காப்பகத்தில் யானைகளைத் தனியார் பாகன்களை கொண்டுவந்து, யானைகளுக்கு சங்கிலி போட்டு கொடுமை படுத்துவதாக ” தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். தொடர்ந்து மேலும் இதற்காக #justiceforkanchielephants எனும் ஹேஷ்டேக்கை வன உயிரின ஆர்வலர்கள் டிரெண்டிங் செய்தார்கள்.

இப்படியாக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், திருச்சி யானைகள் காப்பகத்தில் யானைகள் எப்படி இருக்கிறது என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் சூழலில், வனத்துறை உள்ளது. இந்நிலையில் திருச்சி மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, மற்றும் மாவட்ட வன அதிகாரி சுஜாதா ஆகியோர் சகிதமாக பத்திரிகையாளர்களை யானைகள் காப்பகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

திருச்சி மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு
திருச்சி மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு

பத்திரிகையாளர்கள் முன்னிலையில், யானைகள் வாக்கிங் வந்தது. மேலும் உற்சாகமாகத் தண்ணீர் தொட்டியில் தும்பிக்கை மூலம் தண்ணீரை உறிஞ்சி உடலில் தெளித்தன. இதேபோல், குழாய் தெளிப்பான் மூலம் ஜாலியாக குளித்தன. சில இடங்களில், பாகன்கள் கையில் வைத்திருந்த பிரம்பால் யானைகளைக் குத்தி வழிக்கு கொண்டுவந்ததைப் பார்க்க முடிந்தது. மேலும் மலாய்ச்சி யானையுடன் ஒட்டாமல், சந்தியா, ஜெயந்தி மற்றும் இந்துமதி யானைகள் இருப்பதும் தெளிவானது. சில நாட்கள் யானைகளைச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தது உண்மைதான். இப்போது பழகிவிட்டது என்றும், மூன்று யானைகள் வந்த பிறகு திருச்சி யானைகள் காப்பகத்தில் சில மாற்றங்கள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பாகன்கள் கூறினார்கள்.

தொடர்ந்து பேசிய திருச்சி மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, “19.8ஹெக்டேர் பரப்பளவில் இந்த யானைகள் மறுவாழ்வு மையம், மேலும் 2.50கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும் 6பாகன்கள் உள்ளிட்ட 8உதவியாளர்கள் மையத்தில் உள்ளனர். இந்நிலையில் சந்தியா, ஜெயந்தி மற்றும் இந்துமதி ஆகிய 3யானைகள் மீட்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இங்கு வைத்துப் பராமரிக்கப்படுகிறது.

மேலும் யானைகளுக்குத் தேவையான மருத்துவவசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. யானைகளுக்கு 260கிலோவீதம் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், யானைகள் நடைப்பயிற்சி மற்றும் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், யானைகளின் காயங்கள் குணமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

யானைகள் கொடுமைப்படுத்தாமல், சந்தோசமாக இருந்தால் சரி.