Published:Updated:

`லாரியில் ஏற மறுத்த யானைகள்; காலிலே அடித்த வனத்துறையினர்!’ - விழுப்புரத்தில் நடந்த கொடூரம்

திருச்சி யானைகள் மறுவாழ்வு காப்பகத்துக்கு வனத்துறை அதிகாரிகள், காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான மூன்று யானைகளைக் கொடுமைப்படுத்திக் கொண்டுவந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

வாகனத்தில் ஏற்றப்படும் யானைகள்
வாகனத்தில் ஏற்றப்படும் யானைகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர், `விழுப்புரம் மாவட்டம், குறும்பரம் எனும் கிராமத்தில் இயங்கிவரும் டிரீ பவுண்டேசன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், வனத்துறை அனுமதியின்றி யானைகள் காப்பகத்தை நடத்தி வருவதாகவும், இங்கு காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி என்கிற மூன்று யானைகள் உள்ளதாகவும், அந்த யானைகளை மீட்டு அரசு முகாம்களில் பராமரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், உடனடியாக யானைகளை இடமாற்றவும், அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்படும் தனியார் யானைகள் காப்பகத்தை மூட வேண்டும்’ என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

``வாகனத்தில் திருச்சி காப்பகம் வந்த  யானைகள்
``வாகனத்தில் திருச்சி காப்பகம் வந்த யானைகள்

அந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேசாயி அடங்கிய அமர்வு, 3 பெண் யானைகளையும் மீட்டு திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், இந்த மையத்தில் யானைகளுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் வழங்கப்படுவதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டதுடன் யானைகள் இடமாற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு, மதுரை பகுதியிலிருந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தமான் மல்லாச்சி யானை இதே காப்பகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, மூன்று யானைகளும் திருச்சி சமயபுரம் அடுத்துள்ள எம்.ஆர் பாளையம் யானைகள் காப்பகத்துக்கு வாகனங்கள் மூலம் கொண்டுவந்தனர். முன்னதாக யானையை ஏற்றும்போது வனக்காவலர்கள், யானையைக் கடுமையாக அடித்து லாரியில் ஏற்றும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காப்பகத்தில் யானைகள்
திருச்சி காப்பகத்தில் யானைகள்

வாகனத்தில் ஏறமறுக்கும் யானைகளை நீண்டநேரம் கடுமையான ஆயுதங்களால் குத்தி, அடித்து சித்ரவதை செய்து ஏற்றுகிறார்கள். இதில் யானைகளின் காலில் ரத்தம் வடிந்ததாகவும் சொல்கிறார்கள். குறிப்பாக ஜெயந்தி என்னும் யானையை 7 மணிநேரமாக தாக்கி இறுதியாக ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் லாரியில் ஏற்றியுள்ளனர். அதைத்தொடர்ந்து, மாலை திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் காப்பகத்துக்குக் கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், இன்று மூன்று யானைகளைக் கொண்டுவந்த வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்த தன்னார்வலர்கள், யானையை வனத்துறை அதிகாரிகள் சித்ரவதை செய்து அழைத்துவருவதாகக் குற்றஞ்சாட்டினர்.

யானைகளை துன்புறுத்தும் வனத்துறை அதிகாரிகள்
யானைகளை துன்புறுத்தும் வனத்துறை அதிகாரிகள்

அந்தவகையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யானை பாதுகாப்புக் குழு உறுப்பினர் குந்தவிதேவி, ``மூன்று யானைகளும் மிக சென்டிமென்டாக இருக்கும். பொதுவாக காப்பகத்தில், ஒரு யானைக்கு 200 முதல் 250 கிலோ 125 புல், மற்றும் 25 கிலோ காய் வகைகள், 25 கிலோ சாப்பாடு மற்றும் பருப்பு, சத்தான சாப்பாடு வகைகள், இதுமட்டுமல்லாமல் இலைதழைகள் உள்ளிட்டவை ஒரு நாளைக்கு உணவாகக் கொடுப்போம்.

விழுப்புரம் காப்பகத்தில் யானைகள்.. பழைய புகைப்படம்
விழுப்புரம் காப்பகத்தில் யானைகள்.. பழைய புகைப்படம்

விழுப்புரம் காப்பகத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் போதுமான அளவு தண்ணீர் வசதிகள் இருக்கும். கால்களில் சங்கிலி போடமாட்டோம். சுதந்திரமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் மிக சந்தோஷமாக இருந்த யானைகளை இன்று அடித்து சித்ரவதை செய்து, வாகனத்தில் ஏற்றிவந்தனர்.

இந்த முகாமில் எந்தளவுக்கு வசதிகள் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், யானையை விழுப்புரத்தில் ஏற்றும்போது, யானையைத் திருச்சி கொண்டு விடும்வரை உடன் வரலாம் என்றார்கள். அதை நம்பி இங்கு வந்தால், எங்களை வனத்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுத்திவிட்டார்கள். யானைகளைப் பத்திரமாக பார்த்துக்கொண்டால் போதும்” என்றார்.

குந்தவி தேவி
குந்தவி தேவி

இந்த ,நிலையில் சமூக வலைதளங்களில், எம்.ஆர்.பாளையம் முகாமில் அவ்வளவு வசதிகள் இல்லை என்றும், தனியார் யானைப் பாகன் ஒருவரின் ஆட்கள் கட்டுப்பாட்டில் இந்த யானைகள் பராமரிப்பைக் கொடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியும், வனத்துறையினர், யானையை அடித்து வாகனங்களில் ஏற்றும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. மேலும், #justiceforkanchielephants எனும் ஹேஷ்டேக்கை வன உயிரின ஆர்வலர்கள் டிரெண்டிங் செய்துவருகின்றார்கள்.

இது தொடர்பாக பேசிய திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா, ``யானைகளை லாரிகளில் இடமாற்றம் செய்யும்போது இதுபோன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தப்படுவது இயல்பானதுதான். 3 வருடங்களுக்கு முன்னர் காஞ்சியிலிருந்து விழுப்புரம் அழைத்து வரும்போது இப்படித்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். திருச்சி காப்பகத்தில் வசதிகள் இல்லை என்பது தவறான கருத்து. இங்கு தண்ணீர் வசதி நிறையவே இருக்கிறது. கூடவே யானைகளுக்கான மருத்துவ வசதிகளும் இருக்கிறது. காஞ்சியில் இந்த 3 யானைகளை பராமரித்தவர்களின் குடும்பத்தினர் நேரடியாக திருச்சி வந்து பார்த்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்” என்றார்.