Published:Updated:

`மனிதர்கள் பொருட்டல்ல; தனியாகவே நடமாட்டம்!' - ஊட்டி வனத்துறை அதிகாரிகளைக் குழப்பும் புலிக்குட்டி

``தாயைப் பிரிந்து தனியாவே இருக்கு. அது ஆணா, பெண்ணா என்று தெரியல. அதால தனியா வேட்டையாடி சாப்பிட முடியுமானு தெரியல. மனிதர்களைக் கண்டு பயப்படுவதுமில்லை. எப்படி உயிர் வாழுதுன்னே புரியல"

புலிக்குட்டி
புலிக்குட்டி

தாயைப் பிரிந்த நிலையில் குட்டிப் புலி, ஒன்று தேயிலைத் தோட்டங்களில் இரண்டு மாதங்களாக உலவிவருவது வனத்துறையினரைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

புலிக்குட்டி
புலிக்குட்டி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள சுண்டட்டி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் புலிக்குட்டி ஒன்று எட்டிப்பார்க்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. வனத்துறையினரும் அந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், எதுவும் தென்படவில்லை.

இந்த நிலையில் இதே சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தேயிலைத் தோட்டங்கள், தங்கும் விடுதிகள், சாலை எனப் பகல் நேரத்திலேயே வளர்ப்பு பிராணியைப் போல புலிக் குட்டி ஒன்று உலவி வருகிறது. அதே சமயம் மனிதர்களையும் ஒரு பொருட்டாகவே கருதாமல், எந்தவித அச்சமும் இல்லாமல் உலவும் புலிக்குட்டி குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

புலிக்குட்டி
புலிக்குட்டி

வனத்துறையினர் வந்து பார்த்தபோது மீண்டும் அந்தப் பகுதியில் புலியைக் காணவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அருகிலிருந்த தங்கும் விடுதி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் குட்டிப்புலி நடமாடுவதை உறுதி செய்தனர். மேலும், சிலர் தங்களது செல்போன்களிலும் புலிக்குட்டியைப் புகைப்படமாகப் பதிவு செய்துள்ளனர். இதனால், வனத்துறையினர் தொடந்து புலிக்குட்டியைக் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை ஊழியர் ஒருவரிடம் பேசினோம். ``இந்தப் புலிக்குட்டிக்கு ஒருவயது கூட நிறைவு பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. தாயைப் பிரிந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தனியாகவே உலவி வருகிறது. ஆணா, பெண்ணா என்பது கூட தெரியவில்லை. அதனால் தனியாக வேட்டையாடி உண்ண முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆனாலும், நல்ல ஆரோக்கியமான நிலையில்தான் உள்ளது. வழக்கமாக புலிகள் மனிதர்களைக் கண்டால் தவிர்த்துச் சென்றுவிடும். ஆனால், இந்தப் புலிக்குட்டி வளர்ப்புப் பிராணியைப் போல நடந்து கொள்கிறது'' என்றார்.

புலிக்குட்டி
புலிக்குட்டி

புலிக்குட்டி குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சுண்டட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 ஆடுகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இருப்பினும் அந்தப் புலிக்குட்டி மனிதர்கள் யாரையும் எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. பாதுகாப்பு கருதி அதன் நடமாட்டம் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.