Published:Updated:

முதுமலை: 15 கேமராக்கள்... 4 குழுக்கள்! - பழங்குடிப் பெண்ணைக் கொன்ற புலியைத் தேடும் வனத்துறை

புலியைத் தேடும் பணியில்...
புலியைத் தேடும் பணியில்...

வனத்துக்குள் மாடு மேய்த்துக்கொண்டிருந்த பழங்குடிப் பெண்‌ ஒருவரை புலி தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். அடுத்த தாக்குதல் நடக்காமலிருக்க ட்ரோன்‌ கேமரா உதவியுடன் புலியை‌க் கண்காணித்துவருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனச்சரகத்துக்குட்பட்ட கல்ஹல்லா காப்பு காட்டுக்குள் கால்நடைகளை மேய்க்கவும், விறகு சேகரிக்கவும் குரும்பர்பாடியைச் சேர்ந்த பழங்குடிகள் செல்வது வழக்கம்.

புலி தேடும் பணி
புலி தேடும் பணி

அப்படிச் சென்றவர்களில் ஒருவரான கெளரி என்ற‌ ஐம்பது வயது பழங்குடிப் பெண்ணை நேற்று முன்தினம் (31.09.2020) புலி தாக்கியதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் கண்ணெதிரே நடைபெற்ற‌ இந்தத் துயரம் முதுமலை சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், அந்தப் புலி ஏன் மனிதரைத் தாக்கியது என்பதற்கான காரணத்தை அறியவும், அடுத்த தாக்குதல் நடக்காமலிருக்கவும் குறிப்பிட்ட புலியைக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

புலி தேடும் பணி
புலி தேடும் பணி

கண்காணிப்பு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``இந்தச் சம்பவம் எங்களுக்கு ரொம்ப வருத்தம் தரும் ஒண்ணா இருக்கு. மொதல்ல அந்தப் புலி எதுன்னு கண்டு பிடிக்கணும், அப்புறம் அந்தப் புலிக்கு உடம்புல ஏதாவது பிரச்னை இருக்கா... இல்லை அதுக்கு வயசு ஜாஸ்தியாடுச்சா... இந்த மாதிரி சில விஷயங்களைத் தேடிக்கிட்டு இருக்கோம்.

இதுக்காக 15 இடத்துல கேமரா டிராப்பிங்வெச்சிருக்கோம். அப்புறம் ட்ரோன் மூலமாவும் தேடுறோம். கொஞ்ச நாளைக்கு காட்டுக்குள்ள பழங்குடிகள் யாரையும் போக வேண்டாம்னு சொல்லியிருக்கோம். அடுத்த அட்டாக் நடக்காம தடுக்கும் வேலையில் கவனமா இருக்கோம்” என்றார்.

ட்ரோன் மூலம் புலி தேடும் பணி
ட்ரோன் மூலம் புலி தேடும் பணி

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``விசாரணையில் இது ஆட்கொல்லிப் புலியாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இருப்பினும் புலியைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். மக்கள் அச்சமடையத் தேவையில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு