Published:Updated:

`ஒத்தக்கொம்பன் நினைப்பாவே இருந்துச்சு... அதான்!' காளைக்கு சிலை வைத்து உருகும் விவசாயி

காளைக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை
காளைக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை

பாசமாக வளர்த்து வந்த காளை உயிரிழந்ததைத் தாங்க முடியாத செல்லமுத்து, 2 லட்சம் ரூபாய் செலவில் அந்தக் காளைக்கு சிலை அமைத்திருக்கிறார்.

சக மனிதர்கள் மீதே அன்பு காட்டாத சமூகத்தில், வாயில்லாத ஜீவன்களுக்காகவும் உருகிக் கரையும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் அருகேயுள்ள பாப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு நாட்டு மாடுகள் மீது தனிக்காதல். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். விவசாயத் தேவைகளுக்காக இவற்றை வளர்த்து வந்தாலும், குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினர்களைப் போல பெயரிட்டு, அன்பு செலுத்தி வந்திருக்கிறார்.

அச்சு அசலாக வடிக்கப்பட்டிருக்கும் காளை சிலை
அச்சு அசலாக வடிக்கப்பட்டிருக்கும் காளை சிலை

அப்படி அவர் பாசமாக வளர்த்து வந்த காங்கேயம் காளை ஒன்று உடல்நலக்குறைவால் 2018-ம் ஆண்டு உயிரிழந்திருக்கிறது. காளையின் உடலை அவரது தோட்டத்திலேயே அடக்கம் செய்தவர், அதன் இழப்பை மறக்க முடியாதவராய் தவித்து வந்திருக்கிறார். இந்நிலையில், உயிரிழந்த காளையின் நினைவாக அது புதைக்கப்பட்ட இடத்திலேயே அந்தக் காளைக்கு முழு உருவ சிலையொன்றை அமைத்திருக்கிறார் செல்லமுத்து. இதுசம்பந்தமாகச் செல்லமுத்துவிடம் பேசினோம்.

“நாட்டு மாடுகளைத் தவிர நான் வேற எந்த ரக மாடுகளையும் வளர்க்கிறதில்லீங்க. என்கிட்ட இப்போதைக்கு 15 நாட்டு பசுக்களும் 5 காளைகளும் இருக்கு. இதுல ஒருசில மாடுகளை நான் காசு கொடுத்து வெளியில இருந்து வாங்கியிருக்கேன். ஆனா, இறந்துபோன அந்தக் காளை எங்க தோட்டத்துல பிறந்து, 8 வருஷமா எங்க கூடவே இருந்துச்சு. பொதுவாக காங்கேயம் காளைகளில் `காராம் காளை’ன்னு ஒரு ரகம் இருக்கு. வரலாற்றில் சிவனுடன் அந்தக் காளை இருந்தாகச் சொல்வார்கள். இறந்துபோன அந்தக்காளை `காராம் காளை’ வகையைச் சேர்ந்தது. பிறந்ததுல இருந்து அதை கடவுள் மாதிரி தான் நெனச்சி வணங்கிட்டு இருந்தோம். அப்ப இருந்த காளை இறந்ததை எப்படிங்க மறக்க முடியும்” என்றார்.

உயிரோடு இருந்தபோது ஒத்தக் கொம்பன்
உயிரோடு இருந்தபோது ஒத்தக் கொம்பன்

தொடர்ந்து பேசியவர், ``ஒருதடவை ஒரு காளையோட சண்டை போட்டு அதோட ஒரு கொம்பு உடைஞ்சு போச்சு. அதுல இருந்து அதை `ஒத்தக் கொம்பன்’னு தான் கூப்புடுவோம். என்ன தான் காளையா இருந்தாலும் முரண்டு பிடிக்காது. குழந்தைங்க பக்கத்துல போனாகூட அமைதியா இருக்கும். அவ்வளவு சாதுவானது அந்தக் காளை. நான் எங்கயாவது வெளிய போய்ட்டு வீட்டுக்கு வந்தேன்னா, சந்தோஷத்துல கத்தும். வேர்வை வாசனையை வச்சே என்னை அடையாளம் கண்டுக்கும். அப்படி என்னைய குழந்தை மாதிரி சுத்தி வந்த காளை, செத்துப்போனது என்னால ஜீரணிக்கவே முடியலை. அது நெனைப்பா ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதனாலதான் `ஒத்தக் கொம்பனுக்கு’ சிலை வச்சேன். கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு மேல அதுக்கு செலவாச்சு. 2 மாசம் என்னோட தோட்டத்துல தங்கியிருந்து இந்தச் சிலையை செஞ்சிக் கொடுத்திருக்காங்க. ஆடு, மாடுகளைப் பத்தி எதுவும் தெரியாதவங்க `எதுக்கு தேவையில்லாத வெட்டிச் செலவு’ன்னு சொல்லுறாங்க. அதுங்க கூட இருந்துபார்த்தா அப்படிப் பேச மாட்டாங்க” என உருகினார்.

மதுரை: பசுமாட்டைப் பிரிந்த சோகம்! -1 கி.மீ ஓடிவந்த பாசக்கார காளை
அடுத்த கட்டுரைக்கு