Published:Updated:

`அரியவகை உயிரினங்கள் எப்படி போனால் எனக்கென்ன?' அமெரிக்காவில் சட்டமாற்றம் கொண்டுவந்த ட்ரம்ப்!

சி.சந்தியா

இந்தச் சட்டமாற்றம் அழிந்துவரும் விலங்குகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்குக் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைத் தருகின்றது.

அமெரிக்காவில் சட்டமாற்றம் கொண்டுவந்த ட்ரம்ப்!
அமெரிக்காவில் சட்டமாற்றம் கொண்டுவந்த ட்ரம்ப்!

பருவநிலை மாற்றம் என்பது உலகையே அதிரவைத்துக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்னை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் கூட்டம் மட்டுமல்ல, விலங்கு மற்றும் பிற உயிரினங்களும்தான். பல உலக நாடுகளில், அழிந்து வரும் இனங்களைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் நிறுவப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று 1973-ம் ஆண்டு முன்னாள் அதிபர் ரிசர்ட் நிசான் அமெரிக்காவில் நிறுவிய சட்டம். `டைம்’ பத்திரிகையின் அறிக்கைகூட இந்தச் சட்டம் பல விலங்குகளை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாத்திருக்கிறது என்று தெரிவிக்கிறது.

க்ரிஸ்லி பியர்
க்ரிஸ்லி பியர்

ஆனால், ஆகஸ்ட் 13-ம் நாள் ட்ரம்ப் அரசு இந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. இந்த மாற்றத்தின் மூலம் பல அழிந்துவரும் இனங்கள் மேலும் அழிவை நோக்கித் தள்ளப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்தச் சட்டத்தின்கீழ், அழிந்துவரும் ஒரு உயிரினத்தைத் தொடர்ந்து பாதுகாப்பதற்காகச் சிறப்பு நிதி ஒதுக்கப்படும். இந்த முயற்சிகளால் பல இனங்கள் பாதுகாக்கப்படவேண்டிய பட்டியலிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், புதிய விதிகள் விலங்குகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் அரசாங்கத்திற்குக் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைத் தருகின்றது. இதில் தீவிர வெப்பம், வறட்சி, உயரும் கடல்மட்டம் மற்றும் இப்போதிலிருந்து பல தசாப்தங்களாக ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தின் பிற விளைவுகளைப் புறக்கணிக்கிறது.

இது போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் நிச்சயம் உயிரினங்களைப் பாதிக்கும், அது இன்றே இல்லை என்றாலும் என்றாவது நிகழ வாய்ப்புள்ளது. இதை ஏற்க மறுக்கிறது அமெரிக்க அரசு. மேலும், இச்சட்டம் அரிய உயிரினங்கள் வசிக்கும் இடத்திலும்கூட சுரங்கம் அமைக்க அனுமதி வழங்குகிறது. எந்தச் செயல்களிலிருந்து உயிரினங்களைக் காப்பாற்றவேண்டுமோ அந்தச் செயலுக்கு வழி வகுக்கிறது புதிய சட்டம். இது இந்தச் சட்டத்தின் முந்தைய சிறப்பை சீர்குலைக்கிறது. இதுவரை மனிதர்களின் நடவடிக்கையால் மட்டும் நூறு லட்சம் இனங்கள் அழிந்துள்ளன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்தப் பட்டியலில் சேரவிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டிய இந்தச் சூழலில் இந்தப் புதிய சட்டம் என்பது வரவேற்கத்தக்கதல்ல என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

Vikatan

இந்தப் புதிய மாற்றங்கள், நடக்கும் தொழில்மயமாக்களுக்கு சாதகமாக இருக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்குக் கொடுக்கப்படும் விலை, பல வகை உயிரினங்களின் அழிவு. உலகத்தில் நாம் வாழும் சூழ் மண்டலத்தில் சமநிலை வேண்டும் என்றால் அனைத்து உயிரினங்களும் இருக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில், உலகரங்கில் முக்கிய நாடாகத் திகழும் அமெரிக்கா இதுபோன்ற சட்ட மாற்றங்கள் கொண்டுவந்திருப்பது பலருக்கும் ஏமாற்றத்தையும் வருங்காலம் குறித்த கவலையையும் அளித்திருக்கிறது.