Published:Updated:

நீலகிரி: மூன்று நாளில் இரண்டு பேர்‌ பலி... கூடலூரில் அதிகரிக்கும் யானை‌ - மனித எதிர்கொள்ளல்!


யானை தாக்கி உயிரிழந்த  பாலுசாமி
யானை தாக்கி உயிரிழந்த பாலுசாமி

கூடலூர் கோக்கால் பகுதியைச் சேர்ந்த கமலாசி என்ற பெண் ஒருவர், யானை தாக்கி உயிரிழந்த நிலையில், கூடலூர் அருகிலுள்ள ஓவேலி தனியார் தேயிலை தோட்டத்தில் வசித்துவரும் பாலுசாமி என்பவரும் யானை தாக்கியதில் உயிரிழந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டிலேயே யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நடக்கும் பகுதியாக கூடலூர் இருந்துவந்தது. வனத்துறை மற்றும் காட்டுயிர் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக தொடர் கள ஆய்வுகள் மேற்கொண்டதில், தற்போது எதிர்கொள்ளல்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள‌ நிலையில், மூன்று நாளில் இரண்டு பேர்‌ யானை தாக்கியதில் உயிரிழந்த நிகழ்வு மீண்டும் அச்சத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

யானை தாக்கி சேதமடைந்த வீடு
யானை தாக்கி சேதமடைந்த வீடு

கடந்த 1-ம் தேதி காலை நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள கோக்கால் பகுதி சாலையில் நடந்து சென்ற கமலாசி என்ற 58 வயது பெண்ணை, காட்டு யானை ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவரின் உயிர் பிரிந்தது.

யானை தாக்கி உயிரிழந்த கமலாசி
யானை தாக்கி உயிரிழந்த கமலாசி

இந்தநிலையில், கூடலூர் ஓவேலி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி என்பவர், அந்தப் பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்ட‌ குடியிருப்பில் வசித்துவந்திருக்கிறார். கூடலூர் நகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிவந்த இவர், கொரோனா காரணமாக பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், நாள்தோறும் 15 கிலோமீட்டர் தொலைவை லிஃப்ட் கேட்டும், ஜீப்பிலும் பயணித்து வந்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 2-ம் தேதி இரவு கூடலூரில் பணி முடித்துவிட்டு, ஓவேலியிலுள்ள தனது வீட்டுக்குச் செல்ல நடந்திருக்கிறார்ர். ஆனால் இரவு நெடு நேரம் ஆகியும் பாலுசாமி தன்‌ வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரைப்‌ பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாலை ஓரத்தில் பாலுசாமி யானையால் தாக்கப்பட்டு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

யானை தாக்கி சேதமடைந்த வீடு
யானை தாக்கி சேதமடைந்த வீடு

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அவரது உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஓவேலிப் பகுதி மக்கள் பேசினார்கள். ``கொரோனா மற்றும் சாலை சீரமைப்பின்மை போன்ற காரணங்களைச் சொல்லி இந்தப் பகுதியில் இயக்கப்பட்டுவந்த அரசுப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். பேருந்து வசதி இல்லாததாலேயே இந்தத் தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்தார். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சாலையைச் சீரமைத்து அரசுப் பேருந்தை இயக்க வேண்டும்" என அந்த மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.


யானை தாக்கி உயிரிழந்த  பாலுசாமி
யானை தாக்கி உயிரிழந்த பாலுசாமி

யானை - மனித எதிர்கொள்ளல்கள் குறித்துச் சூழலியல் ஆர்வலர்கள், "இரவு நேரங்களில் மட்டுமே யானைகள் நடமாட்டம் தற்போது அதிகமாக இருக்கிறது. எதிர்கொள்ளல்களும் இந்தச் சமயத்தில்தான் நடக்கின்றன. மக்களிடம் மேலும் விழிப்புணர்வை அதிகரித்து, மாலை 7 முதல் காலை 7 மணிவரை வனத்தை ஒட்டிய பகுதிகளில் மக்கள் நடமாடுவதைத் தவிர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு