Published:Updated:

விஷம் வைத்து கொல்லப்பட்டனவா 2 புலிகள்? - ஆனைமலை அதிர்ச்சி

புலிகள் இறப்பு
புலிகள் இறப்பு

பொள்ளாச்சி அருகே ஒரே நாளில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் 968 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியாகும். பொள்ளாச்சி, உலாந்தி மானாம்பள்ளி, அமராவதி, வால்பாறை, டாப்சிலிப் என்று ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை கரடி, புலி, சிறுத்தை புள்ளிமான் உட்பட எண்ணற்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.

புலி
புலி

ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு முன்பாகவே, அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி வனசரகத்துக்குட்பட்ட தம்மம்பதி அருகில் உள்ள புங்கன் ஓடை மற்றும் போத்தமடை வன பகுதிகளில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு 10 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் புலி மற்றும் ஒரு பெண் புலி இறந்து கிடந்தன. இதையடுத்து, ஓய்வு பெற்ற வனக்கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு உயிரிழந்த புலிகளுக்கு உடற்கூறாய்வு செய்தனர்.

புலி
புலி

பிறகு, இரண்டு புலிகளின் உடலில் இருந்த பாகங்கள் எடுக்கப்பட்டு, சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநதி என்.ஜி.ஓ-க்கள் முன்பு உயிரிழந்த புலிகளின் உடல்கள் எரியூட்டப்பட்டன.

இதுகுறித்து அந்தப் பகுதியில் விசாரித்தபோது, ``இந்தப் புலிகளை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் யாராவது விஷம் வைத்திருக்கலாம். மேலும், இந்தப் பகுதியில் ஒரு புலி கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. அதைப்பிடிக்கச் சொல்லி இந்த மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். வனத்துறையும் அதற்கான பணியில் ஈடுபட்டனர். ஆனால், புலியைப் பிடிக்கவில்லை. எனவே, அந்தப் புலியைக் கொல்வதற்குக்கூட யாராவது விஷம் வைத்திருக்கலாம்” என்றனர்.

வேட்டையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் புலி
வேட்டையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் புலி

வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``முதல் கட்ட ஆய்வில், இரண்டு புலிகளும் விஷம் வைத்து இறந்துகிடந்த காட்டுப்பன்றியின் மாமிசத்தை உண்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு