Published:Updated:

முதலில் கொரோனா, இப்போது கெனைன் டிஸ்டம்பர் வைரஸ்; வண்டலூர் சிங்கங்களின் தற்போதைய நிலை என்ன?

சிங்கம்/ Vandalur Zoo

கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் சிங்கங்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது. ஆனால், அதற்கான தடுப்பூசியை ஒவ்வோர் ஆண்டும் சரியாகப் போட்டிருந்தால் அந்தப் பாதிப்பு ஏற்படாது.

முதலில் கொரோனா, இப்போது கெனைன் டிஸ்டம்பர் வைரஸ்; வண்டலூர் சிங்கங்களின் தற்போதைய நிலை என்ன?

கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் சிங்கங்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது. ஆனால், அதற்கான தடுப்பூசியை ஒவ்வோர் ஆண்டும் சரியாகப் போட்டிருந்தால் அந்தப் பாதிப்பு ஏற்படாது.

Published:Updated:
சிங்கம்/ Vandalur Zoo

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இந்த மாதத் தொடக்கத்தில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 9 வயதான நீலா என்றழைக்கப்படும் ஒரு சிங்கம் உயிரிழக்கவும் நேர்ந்தது.

இதுகுறித்து அப்போது வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``உயிரியல் பூங்காவிலுள்ள 11 சிங்கங்களிடம் மூக்கு மற்றும் மலவாயிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் ரத்த மாதிரிகளை, போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்து பார்த்ததில், 9 சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது.

தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

கொரோனா உறுதியான சிங்கங்களைத் தனிமைப்படுத்தி, நுண்ணிய கண்காணிப்பில் வைத்து சிகிச்சையளித்து வருகிறோம். கால்நடை மருத்துவர்களும் களப்பணியாளர்களும் அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சமீபத்தில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (Central Zoo Authority, CZA) வண்டலூர் உயிரியல் பூங்காவை, அந்த வளாகத்தில் உலவும் பூனைகளை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகின. உயிரியல் பூங்காவில் சுற்றித் திரியும் பூனைகள் மூலமாக, பெரும்பூனைகளுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அதன் காரணமாக அவற்றை பூங்கா வளாகத்திலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள பூங்கா நிர்வாக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள், ``பூனைகளை பூங்கா வளாகத்திற்குள் எங்கும் பார்க்க முடியாது. இங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடியிருப்புகளில் பூனைகள் இருக்கின்றன. ஆனால், அந்தக் குடியிருப்புகளில் இருந்து பூங்காவுக்குள் அந்தப் பூனைகள் செல்வதில்லை. மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், இதுபோன்ற நிறைய பொதுவான அறிவுரைகளை வழங்குகிறார்கள். அவை அனைத்துமே பொதுவானவை. அவற்றில் எது இந்தப் பூங்காவுக்குப் பொருந்தி வருகிறதோ அதை அமல்படுத்துவோம்" என்றனர்.

ஆசிய சிங்கம் / Representational Image
ஆசிய சிங்கம் / Representational Image
Pixabay

மேலும் அவர்களிடம், கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிங்கங்களில் கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுவது குறித்து கேட்டபோது, ``கொரோனா பாதிப்பு இருப்பதோடு, இரண்டு சிங்கங்களிடம் குறைந்த அளவில், கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் பாதிப்பும் இருப்பது பரேலியிலுள்ள ஆய்வகத்தில், சிங்கங்களின் மாதிரியைப் பரிசோதித்த போது உறுதி செய்யப்பட்டது. கோவிட் பாதிக்கப்பட்டிருக்கும்போது, நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் குறைந்து போயிருப்பதால், இரண்டாம் கட்ட நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் கோவிட் போக, வேறு ஏதேனும் நோய்த் தாக்குதல் நடந்துள்ளனவா என்று ஆய்வு செய்தபோது, கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. தற்போது, இந்த சிங்கங்களுக்கு சிகிச்சையளித்து, எப்படியாவது குணப்படுத்த வேண்டுமென்று முழுக் கவனத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்" என்று கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) முன்னாள் இயக்குநர் முனைவர் பி.ஐ.கணேசன், ``பூனைகளிடம் இருந்து சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கான ஆய்வுகள் நிறைய வெளிநாடுகளில் நடந்துள்ளன. இந்தியாவில் இதுபோன்ற ஆய்வுகள் இதுவரை நடந்ததில்லை. பொதுவாக, பூனைகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் அவற்றிடம் முதலில் கொரோனா பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். இதுபற்றிய ஆய்வுகளை நடத்த வேண்டிய தேவை உள்ளது. அதற்காக வலியுறுத்தி வருகிறோம். பல்கலைக்கழக நிர்வாகமும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆசிய சிங்கம் / Representational Image
ஆசிய சிங்கம் / Representational Image
Pixabay

இதுவொரு விலங்கு-வழி நோய் என்பதால், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் இது பரவக்கூடும். ஆகையால், இதை வழக்கமான பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு செய்யமுடியாது. உயர்பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஆய்வுக் கூடங்களில்தான் ஆய்வு செய்ய முடியும். 2015-16 காலகட்டத்தில், நான் இயக்குநராக இருக்கையில் அப்போதைய தமிழ்நாடு திட்டக் குழுவில் நிதி பெற்று, 250 சதுர அடியில் அத்தகைய ஆய்வுக்கூடத்தை அமைத்தோம். இதுபோன்ற ஆய்வுகளை அங்கு நடத்துவதற்காகவே அந்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அந்த ஆய்வுக்கூடம் தற்போது எந்தளவுக்குப் பயன்பாட்டில் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று கூறினார்.

மேலும், கோவிட் தொற்றுக்கு ஆளான சிங்கங்களிடையே நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் குறைவதால், கெனைன் டிஸ்டம்பர் போன்ற நோய்த் தாக்குதல்களும் நிகழ்வதாகச் சொல்லப்பட்ட தகவல் குறித்துக் கேட்டபோது, ``மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், உயிரியல் பூங்காவிலுள்ள இதுபோல் என்னென்ன நோய்கள், என்னென்ன உயிரினங்களில் வரும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பன குறித்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் விஷயத்திலும், அனைத்து சிங்கங்களுக்கும் அதற்கான தடுப்பூசியைப் போட்டிருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால், டிஸ்டம்பர் வைரஸ் தாக்கியிருக்காது.

ஒருவேளை, இரண்டு நோய்த்தாக்குதல்களும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், கோவிட் தாக்குதல் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துபோனதால்தான், கெனைன் டிஸ்டம்பர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
Rasnaboy

இது வெறும் அனுமானம் மட்டுமே, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை கிடையாது. அதோடு, டிஸ்டம்பர் வைரஸ் சிங்கங்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது. ஆனால், அதற்கான தடுப்பூசியை ஒவ்வோர் ஆண்டும் சரியாகப் போட்டிருந்தால் அந்தப் பாதிப்பு ஏற்படாது" என்று கூறினார்.

இதுகுறித்துப் பேசிய சிங்க ஆராய்ச்சியாளர் முனைவர் ரவி செல்வம், ``தடுப்பு மருந்து வேலை செய்வதற்கென ஒரு குறிப்பிட்ட கால அளவு உள்ளது. ஒருமுறை தடுப்பூசி போட்டுவிட்டால், ஆயுள் முழுக்க அந்த நோய்க்கான எதிர்ப்பாற்றலை வழங்காது. உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து தடுப்பூசி போடவேண்டும். அதற்குத் தடுப்பூசி போடுவதற்கு முன்னால், அது வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சீரான இடைவெளியில் கொடுக்கவேண்டிய தடுப்பூசியை தாமதப்படுத்தினால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism