Published:Updated:

தஞ்சை: `இப்போ நகையும் போச்சு, பணமும் போச்சி!’ - குரங்குகளால் கதறும் கிராம மக்கள்

சாரதாம்பாளின் குடிசை வீடு
சாரதாம்பாளின் குடிசை வீடு

10 ஆண்டுகளா வேதனையை அனுபவிக்குறோம். தென்னந்தோப்புகள்ல ஒரு தேங்காயைக்கூட விட்டு வைக்கிறதில்லை. இதனால் இந்தப் பகுதி மக்கள் தென்னை சாகுபடியையே கை விட்டுட்டோம். வீடுகளுக்குள்ள புகுந்து சாப்பாடு, அரிசி, பருப்பு எதையும் விட்டு வைக்கிறதில்லை. அதகளப்படுத்திடுது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் குரங்குகள் கூட்டம் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இதன் உச்சக்கட்ட பாதிப்பாக, இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மூதாட்டி ஒருவர், தனது சேமிப்பு பணத்தையும் நகையையும் பறிகொடுத்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை, பணத்தை பறிகொடுத்த சாரதாம்பாள்
நகை, பணத்தை பறிகொடுத்த சாரதாம்பாள்

திருவையாற்றிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வீரமாங்குடி. கடந்த பத்தாண்டுகளாக இக்கிராம மக்கள் குரங்குகளின் தொல்லையால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். நிறைய இழப்புகளையும் சந்தித்துள்ளார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய முருகானந்தம், ``குரங்குகளால் இந்த ஊர் மக்கள் படுகிற கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. 10 வருஷமா இந்த வேதனைய அனுபவிச்சிக்கிட்டு வர்றோம். கூட்டம் கூட்டமாக வந்துக்கிட்டே இருக்கு. தென்னந்தோப்புகள்ல ஒரு தேங்காயைக்கூட விட்டு வைக்கிறதில்லை. இதனால் இந்தப் பகுதி மக்கள் தென்னை சாகுபடியையே கை விட்டுட்டோம். மாமரங்களில் உள்ள மாங்காயையும் பறிச்சி தூக்கிக்கிட்டுப் போயிடுது. வீடுகளுக்குள்ள புகுந்து சாப்பாடு, அரிசி, பருப்பு எதையும் விட்டு வைக்கிறதில்லை. அதகளப்படுத்திடுது.

அடிச்சு விரட்டினாலும் போக மாட்டேங்குது. மருத்துவமனை, பள்ளிக்கூடம்னு ஒரு இடம் பாக்கி இல்லாமல் உள்ளே புகுந்துடுது. சமாளிக்க முடியலை” என ஆதங்கப்பட்டார்.

இந்நிலையில்தான் தற்போது சாரதாம்பாள் என்ற ஏழை மூதாட்டியின் குடிசை வீட்டுக்குள் புகுந்து, நகை, பணத்தை குரங்குகள் எடுத்துச் சென்றுள்ளன.

குரங்கு- கோப்பு படம்
குரங்கு- கோப்பு படம்

சாரதாம்பாளிடம் பேசினோம். மிகுந்த கண்ணீரோடு, ``அரிசி வைச்சிருந்த பாத்திரத்துல, அரை பவுன் தோடு, அரை பவுன் மோதிரம், 25,000 ரூபாய் பணத்தையும் மூட்டையாகக் கட்டி வச்சிருந்தேன். வீட்டு கொல்லைப் பக்கத்துல நான் பாத்திரம் விளக்கிக்கிட்டு இருந்தேன், குரங்குகள் கூரையைப் பொத்துக்கிட்டு, உள்ளார புகுந்து, பாத்திரத்தைக் கீழே தள்ளிவிட்டு, நகை, பணம் இருந்த மூட்டையை எடுத்துக்கிட்டு போயிடுச்சு. எவ்வளவோ காட்டு கத்தலா கத்திப் பார்த்தேன். ஆனாலும் மூட்டையைக் கீழே போடவில்லை.

மனசு ஒடிஞ்சு கிடக்குறேன் சாப்பாடு, தண்ணி இறங்க மாட்டேங்குது. இது எனக்கு மிகப் பெரிய இழப்பு’’ எனக் கதறினார். இவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண தஞ்சை வனச்சரகரான ஜோதிக்குமாரிடம் பேசினோம். `உடனடியாக எங்களோட டீமை அனுப்பி, குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குறேன்’ எனத் தெரிவித்தார். அடுத்த சில மணிநேரங்களில், வனத்துறையைச் சேர்ந்த சிவசுப்ரமணியன், ரஞ்சிதா, திருஞானம், பன்னீர்ச்செல்வம் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் வீராமங்குடி சென்றனர். குரங்குகளைத் தேடி பிடிப்பதற்கான முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு