Published:Updated:

`கூடு நாங்க தர்றோம்... குருவிகளை நீங்க காப்பாத்துங்க!' சிட்டுகளுக்காகக் குரல்கொடுக்கும் `விழுதுகள்'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிட்டுக்குருவிகளுக்கான கூடு
சிட்டுக்குருவிகளுக்கான கூடு ( பா.பிரசன்ன வெங்கடேஷ் )

சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கவும் வீடுகளில் வளர்க்கவும், நாகை மாவட்ட மக்களுக்கு உதவிவருகிறது, 'விழுதுகள்' அமைப்பு.

வீட்டின் கூரையில் சுதந்திரமாகக் கூடுகட்டி வாழ்ந்து, தானியங்களைக் கொத்தித்தின்ற சிட்டுக்குருவி, காலையில் கவிபாடி எழுப்பும் அழகே அழகுதான். ஆனால் இன்று, பாடப் புத்தகத்திலும் படங்களிலும் மட்டுமே சிட்டுக்குருவியைப் பார்க்கும் நிலை வந்துவிட்டது. இந்நிலையை மாற்ற, சீர்காழி மக்களுக்கு இலவசமாக மரக்கூடுகள் கொடுத்து சிட்டுக்குருவியை வீட்டுக்கு அழைக்கச் சொல்லி புதிய முயற்சியில் இறங்கியுள்ளது, விழுதுகள் இயக்கம்.

சிட்டுக்குருவிகளுக்கான கூடு
சிட்டுக்குருவிகளுக்கான கூடு

வீட்டில் சாப்பிட உணவு இல்லை. ஆனால், வீட்டுவாசலில் வந்து 'குக்கூ'வெனப் பாடிய குருவிக்கு அரிசி தூவி வயிற்றை நிறைத்தவன் முண்டாசுக் கவிஞன் பாரதி. பறவைகளில் அதிர்ஷ்டத்தை அளிக்கும் பறவையினமாகச் சொல்லப்படும் சிட்டுக்குருவி, வீடுகளில் கூடுகட்டினால் தெய்வீக அருள் அதிகரிக்கும், நல்ல சகுனம் என்பது மக்களிடையே நிலவும் பொதுவான நம்பிக்கை. ஆனால், இன்று நகரங்களில் இவற்றைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

நகரமயமாக்கலின் தாக்கத்தால், குருவிகள் நகரங்களை விட்டு தாண்டிப் போய்விட்டன. நகரங்களில் மரங்கள் இல்லை, கான்கிரீட் வீடுகளில் ஜன்னல்கள் திறப்பதில்லை, வெளிக்காற்றோ சிறியபூச்சிகளோகூட வீட்டுக்குள் வராத அளவுக்கு மனிதர்கள் பாதுகாப்பாக வீடுகளைக் கட்டுவதால், குருவிகள் வீடுகளுக்குள் வந்து கூடுகட்ட முடிவதில்லை, உணவுப்பொருள்கள் பிளாஸ்டிக் பைகளில் வருவதால் சிதறுவதில்லை, தானியங்களை வெயிலில் காயவைப்பதில்லை... இப்படிப் பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகளுக்கு உணவும் கிடைப்பதில்லை.

சிட்டுக்குருவிகளுக்கான கூடு
சிட்டுக்குருவிகளுக்கான கூடு

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அழிந்துவருவதாகச் சொல்லப்படும் சிட்டுக்குருவி இனத்தைக் காக்க விழுதுகள் இயக்கம் எடுத்திருக்கும் முயற்சி, சீர்காழி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில், மரக்கூடுகள் தயாரித்து, அதை மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து, இதில் தானியமும் தண்ணீரும் வையுங்கள்... அழைக்காமலேயே சிட்டுக்குருவிகள் வரும் என்கிறார், இந்த விழுதுகள் இயக்கத்தின் தலைவர் எ.கே.ஷரவணன்.

விழுதுகள் அமைப்பு தரும் கூடு
விழுதுகள் அமைப்பு தரும் கூடு

"வேலை, தொழில்னு அளவான வருமானம், அன்பான குடும்பம் என்று இருந்தாலும் வாழ்க்கையில் ஏதோ ஒன்னு குறையிற மாதிரி இருந்துச்சு. ஆனா, இன்னிக்கு அந்தக் குறை இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு, சீர்காழியில் விழுதுகள் இயக்கத்தை ஆரம்பிச்சு, இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கோம். நட்டதோடு நிறுத்திடாம இன்னிக்கு வரைக்கும் பராமரிச்சுட்டும் வர்றோம்.

மூன்று வருடங்களில், போதுமான மரக்கன்றுகளையி நட்டோம். மரங்கள் பசுமையாய் இருந்தாலும் பறவைகள், கூடுகள் இல்லாத மரங்கள் பட்டுப்போன மாதிரிதான் கண்ணுக்குத் தெரிஞ்சுது. அதனாலதான் இந்த முயற்சி. வீட்டுலயே ஆசாரி வச்சு இந்த மரக்கூடுகளைத் தயாரிக்கிறோம். இந்த மரக்கூடுகளை சீர்காழியைச் சுற்றியுள்ள மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து, இதில் தானியங்களையும் கொஞ்சம் தண்ணீரும் வையுங்க, சிட்டுக்குருவி தானா தேடிவரும் என்று சொல்லிக்கொண்டு வருகிறோம். அந்தக் காலத்துல வீட்டுக்கு வந்த அழையா விருந்தாளி சிட்டுக்குருவி. உணவு தண்ணீர்லாம் வச்சு கூப்பிட்டா வராமலா போயிரும்.

எ.கே.ஷரவணன்
எ.கே.ஷரவணன்

கூடுகளை வீட்டில் வைத்து, நான்கு நாள்கள் ஆனபிறகு சிட்டுக்குருவி வருவதைப் பார்த்த சிலர், தானாக முன்வந்து மரக்கூடுகளைக் கேட்டு வாங்கிச்சென்று, சிட்டுக்குருவியைக் காப்பாற்றும் முயற்சியில இறங்கிட்டிருக்காங்க. ஒரு பெட்டி செய்ய 250 ரூபாய் செலவாகுது. அதனால தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வந்து உதவினா, எல்லா இடங்களிலும் கூடுகளைக் கொடுத்து சிட்டுக்குருவிகள் வளர்ச்சிக்கு உதவலாம்" என்கிறார், எ.கே.ஷரவணன்.

எங்கிருந்தோ பொருள்களைத் தேடி எடுத்துவந்து, நம் வீட்டைத் தேர்வுசெய்து கூடுகட்டும் குருவிகளை அதிர்ஷ்டம் என்கிறோம். அதை நாமே வரவழைத்தால்தான் என்ன? சூழலியலும் மகிழுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு