Published:Updated:

`தினமும் 40 கிலோ அரிசி.. தர்பூசணி பழங்கள்!’ -தஞ்சையில் நாய், குரங்கிற்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

உணவளிக்கும் தன்னார்வலர்
உணவளிக்கும் தன்னார்வலர் ( ம.அரவிந்த் )

இதை அறிந்த நாள்கள் தினமும் 40 கிலோ அரிசி, 10 கிலோ கோழிக்கறி கொண்டு சாப்பாடு சமைத்து இரண்டு வாகனங்களில் எடுத்துச் செல்வோம். அதை தஞ்சாவூர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 65 இடங்களில் உள்ள தெரு நாய்களுக்கு சாப்பிடக் கொடுப்போம்.

தஞ்சாவூரில் ஊரடங்கால் உணவின்றி தவித்த 1,000 தெரு நாய்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு தன்னார்வ அமைப்பு ஒன்று தினமும் உணவு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்களுக்கு உணவு கொடுக்கும் பணியில்
நாய்களுக்கு உணவு கொடுக்கும் பணியில்

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மனிதர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வேலையிழந்ததால் வருமானம் ஏதுமின்றி பல குடும்பங்கள் தவித்து வருகின்றன. இந்த நிலையில், தெருவில் சுற்றித் திரிந்த வாயில்லா ஜீவன்களான நாய், குரங்கு போன்றவற்றின் நிலை சொல்ல வேண்டியதே இல்லை.

நகர்ப்புறங்களில் ஹோட்டல்கள் இல்லை, வெளியே பொதுமக்கள் நடமாட்டமும் இல்லை, இதனால் தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பது தடைபட்டது. மேலும், உணவுக்காக அங்கும் இங்கும் நாய்கள் அலையத் தொடங்கியன. இதேபோன்று குரங்குகளும் உணவு இல்லாமல் பசியால் தினமும் வாடின.

பழம் சாப்பிடும் குரங்கு
பழம் சாப்பிடும் குரங்கு

இதையறிந்த தஞ்சாவூர் அருகானுயிர் காப்பு என்ற அமைப்பினர் தெரு நாய்களுக்கும் குரங்குகளுக்கும் உணவு கொடுக்க நினைத்தனர். இதற்காக சுற்றுச்சூழல் அறக்கட்டளையினர், மாவட்ட மிருகவதை தடுப்புச் சங்கத்தின் உதவியோடு உணவு கொடுக்கும் பணியைத் தொடங்கி ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் நகரில் உள்ள சுமார் 700 தெரு நாய்களுக்கும் மாரியம்மன்கோவில், பள்ளியக்ரஹாரம், தமிழ்ப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குரங்களுக்கும் தினமும் உணவு கொடுத்து வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கி வருகின்றனர்.

இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ்குமாரிடம் பேசினோம், ``ஊரடங்கின் தொடக்கத்திலேயே தெருநாய்கள் உணவு கிடைக்காமல் பசியோடு தவித்தன. அங்கும் இங்கும் அலையத் தொடங்கின. இதை அறிந்த நாங்கள் தினமும் 40 கிலோ அரிசி, 10 கிலோ கோழிக்கறி கொண்டு சாப்பாடு சமைத்து இரண்டு வாகனங்களில் எடுத்துச் செல்வோம். அதை தஞ்சாவூர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 65 இடங்களில் உள்ள தெரு நாய்களுக்குச் சாப்பிடக் கொடுப்போம். அதேபோல் குரங்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று தர்பூசணிப் பழங்கள் கொடுத்து வருகிறோம். இதற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.5,000 செலவாகிறது. இதை எங்கள் அறக்கட்டளையில் உள்ளவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்கிறோம்.

காத்திருக்கும் நாய்கள்
காத்திருக்கும் நாய்கள்

சுமார் 40 நாள்களாக தொடர்ந்து உணவை வழங்கி வருகிறோம். நாங்க எப்போது வருவோம் என எங்களுக்காக நாய்கள் தினமும் காத்திருக்கும். எங்கள் வாகனம் வந்தவுடனையே நாய்கள் மற்றும் குரங்குகள் ஆவலுடன் வட்டமடிக்கத் தொடங்கும். அவற்றுக்கு உணவை வைத்து சாப்பிட வைத்த பிறகு அந்த இடத்திலிருந்து கிளம்புவோம். வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுப்பதால் அவற்றுக்கு வயிறு நிறைகிறது; எங்களுக்கு மனசு நிறைகிறது. தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அது முடியும் வரை தினமும் உணவு கொடுப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு