Published:Updated:

மீண்டும் உயிர்பெறுகின்றனவா மாமூத்கள்?! காலநிலை மாற்றத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீண்டும் உயிர்பெறுகிறனவா மாமூத்கள்?!
மீண்டும் உயிர்பெறுகிறனவா மாமூத்கள்?! ( Colossal )

வனப்பகுதிகளின் சமநிலையைப் பேணிக்காப்பதில் யானைகளின் பங்கு எவ்வளவு முக்கியமானது எனத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அன்றைய ஆர்டிக் பகுதிகளில் மாமூத்களின் பங்கும் அப்படியானதாகவே இருந்திருக்க வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிறுவயதில் நீங்கள் பார்த்துப் பிரமித்துப் போன ஹாலிவுட் படம் எது?

இந்தக் கேள்வியைப் படித்ததுமே பலருக்கும் 'ஜுராசிக் பார்க்' படம்தான் நினைவுக்கு வந்திருக்கும். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து மறைந்த டைனோசார்கள் இன்றைய மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மீண்டும் உயிர்பெற்றால் என்னவாகும் என்ற கதையை VFX உதவியுடன் திரைக்குக் கொண்டுவந்திருப்பார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். 'என்ன என்ன சொல்றான் பாருங்க' ரக ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் கதைதான். ஆனால், இந்தக் கதை உண்மையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல மரபியலாளர் ஜார்ஜ் சர்ச் 'கொலோஸல்' (Colossal) என்ற மரபியல் ஆராய்ச்சி ஸ்டார்ட்-அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த மாமூத்தை மீண்டும் உலகிற்குக் கொண்டுவருவதுதான் இந்த நிறுவனத்தின் திட்டம். டெக் உலகில் புதிய ஐடியாக்களுக்குத் தொடர்ந்து உயிர்கொடுத்துவரும் தொழிலதிபர் பென் லாமும் ஜார்ஜ் சர்ச்சுடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

பென் லாம் & ஜார்ஜ் சர்ச் | Ben Lamm & George Church
பென் லாம் & ஜார்ஜ் சர்ச் | Ben Lamm & George Church

மீட்கப்பட்ட மாமூத்தின் DNA வடிவம் கொண்டு அழிவின் விளிம்பில் இருக்கும் ஆசிய யானைகளின் மரபணுக்களை மாற்றியமைத்து புதிய ஆசிய யானை-மாமூத் ஹைபிரிட்டை உருவாக்க முற்படுகிறது இந்த நிறுவனம். அதாவது, ஆர்டிக் பகுதிகளில் உயிர்வாழும் திறன் கொண்ட மாமூத் போன்ற ஓர் உயிரினத்தை உருவாக்குவதே இவர்களது திட்டம். கடந்த பிப்ரவரி மாதம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரு மாமூத்களின் தந்தங்களிலிருந்து டி.என்.ஏ மாதிரிகள் கிடைத்தன. இது மாமூத் பற்றிய புதிய புரிதலை ஆராய்ச்சியாளர்களுக்குத் தந்தது. அப்போது சைபீரியாவில் ஒரே நேரத்தில் இரு வகை மாமூத்கள் வாழ்ந்திருக்கின்றன. இந்த இரு இனங்களின் கலப்பு இனம்தான் கடைசியாக வட அமெரிக்காவில் வாழ்ந்த மாமூத்கள். இதனால் கலப்பு என்பது சாத்தியம்தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

சரி இப்படிச் செய்வதன் மூலம் என்ன நடக்கும்?

இப்படி மாமூத்களை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும்போது பாசி மற்றும் உயரமான மரங்கள் மட்டும் இருக்கும் இன்றைய ஆர்டிக் துந்திர பகுதிகளை மீண்டும் அடர்ந்த புல்வெளிகளாக மாற்ற முடியும் என நம்புகிறது கொலோஸல். 11,700 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த ப்ளீஸ்டோசீன் (Pleistocene) யுகத்தில் ஆர்டிக் பகுதிகள் அப்படிதான் இருந்திருக்கின்றன. இதைப் பெரிய அளவில் செய்யும்போது 'Arctic permafrost' எனப்படும் நிலத்தடி உறைபனி உருகாமல் இருக்கும். இதனால் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிறது கொலோஸல். மேலும் இந்த ஆராய்ச்சி வெற்றியடையும்பட்சத்தில் மரபியல் உலகிற்கு மேலும் பல புதிய தொழில்நுட்பங்கள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அழிந்த உயிரினங்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்வது எங்கள் திட்டமில்லை. அழிந்துபோன விலங்குகளின் மரபணுவை மட்டுமே மீட்கப்போகிறோம். எங்களது இலக்கு பனிப்பிரதேசங்களில் வாழக்கூடிய யானைகளை உருவாக்குவதே!
ஜார்ஜ் சர்ச்
Woolly Mammoth
Woolly Mammoth

இது போன்ற De-Extinction முயற்சிகள் உலகிற்குப் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளில் மரபியலில் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம். 2009-ல் அழிந்துபோன ஒரு வகை ஐபெக்ஸ் மானை குளோனிங் மூலம் மீண்டும் உலகிற்குக் கொண்டுவந்தது ஓர் ஆராய்ச்சி குழு. ஆனால், அது சில நிமிடங்களே உயிர்வாழ்ந்தது என்பது சோகம். கடந்த ஏப்ரல் மாதம் கலிபோர்னியாவிலுள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் அழிந்த Black footed ferret என்னும் உயிரினத்தை குளோனிங் மூலம் வெற்றிகரமாக மீட்டெடுத்தது Revive & Restore என்னும் லாபநோக்கற்ற ஆராய்ச்சி அமைப்பு.

பத்தாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மாமூத்களின் DNA கொண்டு மீண்டும் அவற்றை உயிர்த்தெழ வைக்கும் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பல வருடங்களாகப் பேசி வருகிறார் ஜார்ஜ் சர்ச். ஆனால், இப்போதுதான் எல்லாம் கைகூடி வந்திருக்கிறது. "ஏறத்தாழ அறிவியல் சிக்கல்கள் அனைத்திற்குமே விடை கண்டுவிட்டோம். முதலீடு இல்லாமல் இருந்ததே இதுவரை பெரும் தடையாக இருந்தது. இனி அதுவுமில்லை" என்கிறார் கொலோஸல் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பென் லாம். இதுவரை 15 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றிருக்கிறது கொலோஸல். டிக் டாக் பிரபலங்கள் தொடங்கி பெரும் தொழிலதிபர்கள் வரை இந்த ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்காக மிக விரைவில் மீண்டும் மாமூத்களை பார்க்கப்போகிறோம் என ஆர்வம் கொள்ள வேண்டாம். கொலோஸலின் திட்டங்களில் இருக்கும் பல தொழில்நுட்பங்கள் யானைகள் போன்ற பெரிய உயிரினங்களில் சோதனை செய்து பார்க்கப்படாதவை. எல்லாம் சரியாக நடந்தால் முதல் ஹைபிரிட் யானை-மாமூத் குட்டியை ஆறு வருடங்களில் பார்க்கலாம். ஆர்டிக்கில் எந்த உதவியுமின்றி வாழும் ஒரு குழு மொத்தமாக உருவாக இன்னும் பல தசாப்தங்கள் ஆகலாம்.

ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறதென்றாலும் அழிந்த உயிரினங்களை இன்றைய உலகிற்கு எடுத்துவருவது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், இது போன்ற மேம்பட்ட மரபியல் தொழில்நுட்பங்கள் எந்த அளவில் பயன்படுத்தப்படவேண்டும் எனப் பல கேள்விகளை எழுப்புகிறது கொலோஸலின் திட்டங்கள்.

சரி, மாமூத்களுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் என்ன தொடர்பு?
உடையும் permafrost
உடையும் permafrost

2013-ல் ஜார்ஜ் சர்ச், ரஷ்ய சூழலியலாளர் செர்ஜி ஜிமோவ்வை சந்தித்தார். 1980-களிலிருந்து சைபீரியாவில் இருக்கும் permafrost-ஐ ஆய்வு செய்து வருபவர் இவர். பெருமளவில் மீத்தேனையும் கார்பன் டை ஆக்ஸைடும் அடைத்து வைத்திருக்கிறது இந்த நிலத்தடி உறைபனி. அவை உருக உருக உள்ளிருக்கும் கரிம வாயுக்கள் வெளிவந்து இன்னும் புவி வெப்பமடைதலை வேகமாக்கும் என்று எச்சரிக்கை மணி அடித்தவர் இவர்தான். இந்த கரிம வாயுக்களை வெளிவராமல் தடுக்க ஒரு யோசனையும் அவரிடமும் இருந்தது. 1996-ல் அவரும் அவரது மகன் நிகிதா ஜிமோவ்வும் இணைந்து 'ப்ளீஸ்டோசீன் பார்க்' என்று ஒன்றை ஆரம்பித்தனர். சிறிய ஆர்டிக் துந்திர பகுதி ஒன்றை வேலியிட்டு எல்க், பைசன், ரெய்ன்டீர், பாக்ட்ரியன் ஓட்டகங்கள் போன்ற உயிரினங்களை உலவ விட்டு என்ன நடக்கிறது எனக் கண்காணிக்க ஆரம்பித்தனர். எதற்குத் தெரியுமா?

Sergey and Nikita Zimov
Sergey and Nikita Zimov

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் யுகத்தில் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கக் கண்டங்களின் வடதுருவத்தை ஒட்டிய பகுதிகள் அடர்ந்த புல்வெளிகள் கொண்ட நிலப்பரப்புகளாகவே இருந்தன. அங்குத் தாவர உண்ணிகள் செழித்தன. மாமூத்தும் அதில் ஒன்று. இந்த உயிரினங்கள் அழிய அழிய இந்த நிலப்பரப்பு அப்படியே தலைகீழாக மாறியது. புல்வெளிகள் இன்று புதர்கள், மரங்கள், பாசிக்கள் என மாறியிருக்கின்றன. புல்வெளிகளாக இருக்கும்போது மேலே படரும் பனி, சூரிய ஒளியை உள்வாங்காமல் மீண்டும் பிரதிபலித்துவிடும். இன்றைய ஆர்டிக் நிலப்பரப்பு அப்படி இல்லை என்பதுதான் சிக்கல்.

ஜிமோவ்வை பொறுத்தவரையில் அன்றைய ஆர்டிக் பகுதிகளைச் செழிப்பான புல்வெளிகளான வைத்திருப்பதில் மாமூத்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அதன் சாணம் உரம் ஆனது, அதன் வழித்தடங்களில் அளவுக்கு மீறிய மரங்களின் வளர்ச்சியைத் தடுத்தன. அன்றைய சுற்றுச்சுழல் சமநிலையைத் தக்கவைத்ததில் மாமூத்களின் பங்கு ஈடு இணையற்றது. அப்படியான மாமூத்கள் இல்லை என்றாலும் மற்ற தாவர உண்ணிகளாலேயே 25 ஆண்டுகளில் 'ப்ளீஸ்டோசீன் பார்க்' பெருமளவில் மாறியிருப்பதைக் கண்டறிந்தார் ஜிமோவ். கடந்த வருடம் அவரும் அவரது மகனும் இணைந்து சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் ஒரு முக்கிய விஷயத்தை உலகிற்குச் சொன்னார்கள். தாவர உண்ணிகள் உலாவிய 'ப்ளீஸ்டோசீன் பார்க்' பகுதியில் பனிக்காலத்தில் வெப்பமானது சுற்றியிருக்கும் பகுதிகளை விட 10 பாரன்ஹீட் குறைவாக இருந்தது. ஆர்டிக் பகுதியை மீண்டும் சீரமைக்க முடியும் என இது பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறது.

ப்ளீஸ்டோசீன் பார்க் | Pleistocene Park
ப்ளீஸ்டோசீன் பார்க் | Pleistocene Park

வனப்பகுதிகளின் சமநிலையைப் பேணிக்காப்பதில் யானைகளின் பங்கு எவ்வளவு முக்கியமானது எனத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அன்றைய ஆர்டிக் பகுதிகளில் மாமூத்களின் பங்கும் அப்படியானதாகவே இருந்திருக்க வேண்டும் எனக் கணிக்கின்றனர். இருப்பினும் அன்றைய சுற்றுச்சுழல் எப்படி இருந்தது என நமக்கு முழுவதுமாக தெரியாது. அப்படி இருக்கும்போது மாமூத்களை இன்றைய உலகத்திற்குக் கொண்டுவருவது உண்மையில் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதில் சூழலியலாளர்கள் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. 'காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும்' என்ற காரணத்தை வைத்து மட்டும் இத்தனை பெரிய திட்டத்தைக் கையில் எடுப்பது சரியா என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர்.

Woolly Mammoth
Woolly Mammoth

மேலே குறிப்பிட்ட ஜிமோவ்வின் ஆய்வுதான் சர்ச் மற்றும் Revive & Restore அமைப்பை மாமூத் DNA ஆராய்ச்சியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வைத்தது. இதுவரை பகுதி நேர ஆய்வாகவே இது இருந்தது. அதனாலேயே சர்ச் இதுகுறித்து எந்த ஆய்வறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை. இதுவரை வருடத்திற்குப் பத்தாயிரம் டாலர்கள் நிதியில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், கொலோஸல் கைவசம் இருப்பது 15 மில்லியன் டாலர் நிதி. இது இந்த ஆய்வில் பல புதிய கதவுகளைத் திறந்துவைக்கும் என நம்புகிறார் சர்ச். ஏற்கெனவே பல முன்னணி ஆராய்ச்சியாளர்களை பணியமர்த்தத் தொடங்கியிருக்கிறது கொலோஸல்.

சவால்கள்!
மாமூத்களுக்கும் ஆசிய யானைகளும் ஒரே முன்னோரிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவைதான் என்றாலும் இரண்டுக்கும் மரபியல் குணங்கள் அளவில் லட்சம் வித்தியாசங்கள் உள்ளன.
மாமூத் & ஆசிய யானைகள்
மாமூத் & ஆசிய யானைகள்

அதனால் யானையிலிருந்து ஹைபிரிட் மாமூத்தை உருவாக்குவது அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்காது. முதல்கட்டமாக மாமூத்திலிருந்து அதிக கொழுப்புச் சத்தை சேமிக்கும் திறன், குறைவான தட்பவெப்பநிலையிலும் ஆக்சிஜனை, அடர்ந்த தோல் மற்றும் ரோமம், குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளச் சிறிய காதுகள் எனக் குறைந்தது 60 மரபியல் குணங்களை மாமூத் மரபணுவிலிருந்து எடுப்பதே இவர்களது திட்டம். ஏற்கெனவே மரபணு கத்தரி என அழைக்கப்படும் CRISPR-Cas9 தொழில்நுட்பம் மூலம் இப்படி மரபணுக்களை வெட்டி ஒட்டியிருக்கிறது சர்ச்சின் குழு. சமீபத்தில் கூட பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் வண்ணம் அவற்றை மாற்றும் ஆராய்ச்சியில் இது பயன்படுத்தப்பட்டது. CRISPR தொழில்நுட்பத்திற்குத்தான் கடந்த வருடம் வேதியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரே நேரத்தில் பல்வேறு மரபியல் குணங்களை வெட்டி ஓட்டுவது, அதுவும் யானை போன்ற உயிரினத்தில் ஓட்டுவது என்பது பெரும் சவால்.

CRISPR
CRISPR

மனிதர்கள் பத்து மாசம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கிறார்கள் என்றால் யானைகள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் (18-22 மாதங்கள்) கருவை வயிற்றில் சுமக்கின்றன. அதனால், ஆராய்ச்சியில் உருவாகும் ஹைபிரிட் கருக்களைச் சுமக்கச் செயற்கை கருவறைகளையும் இவர்கள் உருவாக்கப்போகிறார்களாம். இதுவரை செயற்கை கருவறைகள் எலிகள், ஆடுகள் அளவில்தான் சோதனை செய்துபார்க்கப்பட்டிருக்கின்றன. அதுவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே. யானைகள் பிறக்கும் போதே 100 கிலோ வரை எடையுடையதாக இருக்கும் என்பது கூடுதல் சிக்கல். இந்த ஆராய்ச்சிக்கு அதிக அளவில் ஆசிய யானைகளின் மரபணுக்கள் தேவைப்படும். அதை எப்படிப் பெறப்போகிறார்கள் என்றும் இதுவரை தெரியவில்லை.

இது அவசியம்தானா?
இந்த ஆராய்ச்சி குறித்து அறிவியலாளர்கள் பலரும் முன்வைக்கும் கேள்வி இது.

ஒருவேளை கொலோஸல் நிறுவனம் ஓர் ஆரோக்கியமான ஹைபிரிட் மாமூத் குட்டியை உருவாக்கிக் காட்டுகிறது என்றே வைத்துக்கொள்வோம். யானைகள் குழுக்களாக வாழும் உயிரினங்கள். தொன்று தொட்டு மரபியல் நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் விலங்குகள். மாமூத்களும் அப்படியே வாழ்ந்திருக்கின்றன. இப்படியான சூழலில் முதல் ஹைபிரிட் மாமூத் தன்னை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ளும், பெற்றோரும் இல்லாமல் உடன் பழக வேறு மாமூத்களும் இல்லாமல் அவை என்ன செய்யும், ஆர்டிக் பகுதிகளில் தானாகவே அது எப்படி உயிர்பிழைக்கக் கற்றுக்கொள்ளும் எனத் தார்மீக கேள்விகள் பல இருக்கின்றன.

மேலும் யானைகள் நாடோடிகளாகப் பல தூரம் பயணிக்கக்கூடியவை. மாமூத்களும் அப்படியே. ஒரு சமீபத்திய ஆய்வு 17,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மாமூத் அதன் 28 வருட வாழ்நாளில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்தது உறுதிசெய்யப்பட்டது. அவ்வளவு தூரம் இன்று பயணிக்க ஆர்டிக்கில் எங்கு இடம் இருக்கிறது என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் | Climate Change
காலநிலை மாற்றம் | Climate Change
Robert S. Donovan

மேலும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை இது போன்ற ஆராய்ச்சிகள் திசைதிருப்பும் என்றும் எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காலநிலை மாற்றம் என்பது உடனடி பிரச்னை. கொலோஸல் சொல்வது போல ஆறு வருடங்களில் ஒரு மாமூத் ஹைபிரிட் குட்டி உருவாக்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும் அதன் இனப்பெருக்கக்காலம் தொடங்க இன்னும் 14 வருடங்கள் ஆகும், அவை குழுக்களாக மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியாது. அவ்வளவு நேரம் நம்மிடம் இல்லை. இப்படிச் செய்வதால் காலநிலை மாற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று தீர்மானமாகத் தெரியவும் இல்லை. அதனால் அறிவியலாகக் கேட்க வியப்பாக இருந்தாலும் இதைக் காலநிலை மாற்றத்திற்கான ஆராய்ச்சி என முன்மொழிவது ஏமாற்று வேலை என்கின்றனர் சூழலியலாளர்கள். உடனடியாக செய்யவேண்டும் என ஏற்கெனவே முன்மொழியப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு இதற்காகக் கிடைத்திருக்கும் முதலீட்டுக்களைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களது வாதம்.

கொலோஸல் இப்போது முன்வைக்கும் பிரமாண்ட திட்டம் சாத்தியமாகாமல் போனாலும் கூட பல புதிய மரபணு தொழில்நுட்பங்களை இந்த ஆராய்ச்சி எடுத்துவரும் என நம்பப்படுகிறது. மாறிவரும் உலகில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் அரிய உயிர்களைப் பேணிக்காப்பதற்காகவாவது அது பயன்பட்டால் நல்லது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு