Published:Updated:

வன உயிர்களை வாழ விடுங்கள்!

காண்டாமிருகம்
பிரீமியம் ஸ்டோரி
காண்டாமிருகம்

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் சர்வதேசக் கள்ளச்சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான உயிரினங்கள் வாழ்கின்றன.

வன உயிர்களை வாழ விடுங்கள்!

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் சர்வதேசக் கள்ளச்சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான உயிரினங்கள் வாழ்கின்றன.

Published:Updated:
காண்டாமிருகம்
பிரீமியம் ஸ்டோரி
காண்டாமிருகம்
மனிதர்கள் நாம் இந்தப் பூமிக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறோம் தெரியுமா? சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான உயிரினங்களை அழிவை நோக்கித் தள்ளியிருக்கிறோம். அதில் பாதிக்கும் மேற்பட்டவை அழிந்தேவிட்டன.

மனித இனம் பிழைத்திருக்க நாம் தந்திருக்கும் விலை இதுவரை 5 லட்சம் இனங்கள் என்கிறது சூழலியல் சேவைகளின் அறிவியல் கொள்கைளுக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஓர் ஆய்வு. பல காரணங்களால் உயிரினங்கள் அழிந்தாலும் அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது சட்டவிரோத விலங்குக் கடத்தல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எறும்புத்தின்னிகள் தொடங்கி கடல் அட்டை வரை ஏகப்பட்ட உயிரினங்கள் கடத்தப்படும்போது சிக்கியதாகச் செய்திகளில் பார்த்திருப்போம். இந்த விலங்குக் கடத்தல்களைப் பற்றிய சர்வதேசச் செய்திகளைப் பார்த்தால் பக்கென்றிருக்கிறது. அத்தனை விதமான விலங்குகள் அன்றாடம் கடத்தப்படுகின்றன.

காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாகங்களை மனிதப் பயன்பாட்டிற்காக விற்பனைப் பண்டமாக மாற்றி லாபம் பார்ப்பதையே ‘வனப்படு பொருள் வியாபாரம்’ என்கிறார்கள். இதில் அனைத்தையும் சட்டவிரோதம் எனச் சொல்லிவிட முடியாது. மூலிகைத் தாவரங்களைச் சேகரித்தல், தேன் எடுத்தல், விறகு சேகரித்தல் போன்றவை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தில் பங்கு வகிக்கின்றன. அவை, அந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை நல்குகின்றன. இருப்பினும், சட்டபூர்வமான வனப்படுபொருள் வியாபாரம் மற்றும் அதனால் எளிய மக்கள் காணும் பலன்களைப் பின்னுக்குத் தள்ளி, அத்தகைய வாய்ப்புகளைப் போலியாகப் பயன்படுத்தி சட்டவிரோத காட்டுயிர் கடத்தல்களைச் செய்துகொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சட்டவிரோத காட்டுயிர் கடத்தல்தான் எண்ணற்ற உயிரினங்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, 2018-ம் ஆண்டு தன் இனத்தின் கடைசி ஆண் காண்டாமிருகத்தை இழந்த ஆப்பிரிக்காவின் வடக்கு வெள்ளை காண்டாமிருக இனத்தைச் சொல்லலாம். அது எண்ணிக்கையில் அரிதாகக் குறைந்தபோதும்கூட, வேட்டைக்காரர்கள் பரிசுகளை அறிவித்துக் கங்கணம் கட்டிக்கொண்டு அவற்றின் உடல் பாகங்களுக்காக வேட்டையாடினர். அதன் விளைவாக ஓர் இனமே அழிவைச் சந்தித்தது. இந்தியாவிலுள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமும் அதேபோல் கொம்புகளுக்காகத் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறது.

காண்டாமிருகம்
காண்டாமிருகம்

காண்டாமிருகங்களின் கொம்புக்கு மருத்துவ குணம் உள்ளது என்ற கட்டுக்கதை உலகளவில் பரவியிருப்பதால், அதற்கான சட்டவிரோத வர்த்தகமும் பெரிதாக நடந்துகொண்டிருக்கிறது. ஆசிய நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை இங்கு இல்லாததால், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கள்ளத்தனமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் மட்டுமே, 2007-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை அவை வேட்டையாடப்படுவது 7,700 மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச இயற்கை நிதியம், போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் மனிதக் கடத்தலுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் சட்டவிரோதத் தொழில் இப்படியான விலங்குக் கடத்தல்தான் என்று அறிவித்துள்ளதில் ஆச்சர்யம் இல்லை.

எறும்புத்தின்னி, புலி, யானை, காண்டாமிருகம், ஆமை, கரடி போன்ற காட்டுயிர்கள்தான் கடத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் முக்கிய இடங்களில் உள்ளன.

பூமியிலேயே அதிகம் கடத்தப்படும் பாலூட்டியாக விளங்குவது எறும்புத்தின்னிதான். குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில், கடந்த பத்து ஆண்டுகளில் பத்து லட்சத்திற்கும் அதிகமான எறும்புத்தின்னிகள் கடத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு காடுகளில் வாழ்ந்த அவை, இப்போது எண்ணிக்கையில் மிகவும் குறுகி அழிவின் விளிம்பில் தம் இருப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

அதற்கு அடுத்ததாக, யானை வேட்டை மற்றும் கடத்தல். கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் தந்தங்களுக்காகக் கொல்லப்படும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் அதிகம். உலகக் காட்டுயிர் நிதியத்தின் கணக்குப்படி ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை வேட்டையாடப் படுகிறது. இதை உடனடியாகக் கவனித்துச் சரிக்கட்டவில்லையெனில், அடுத்த சில ஆண்டுகளில் அந்த பிரமாண்ட இனம் சுத்தமாகத் துடைத்தழிக்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கவும் செய்கிறது அந்த அமைப்பு.

மருத்துவம், அலங்காரம், கௌரவம் என்று பல காரணங்களுக்காக ஒரு விலங்கின் அனைத்துப் பாகங்களும் பயன்படுத்தப் படுகின்றன என்றால் அது புலி மட்டுமே. அதற்காக நடக்கும் புலி வேட்டை மற்றும் கடத்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. சர்வதேசக் கள்ளச்சந்தைகளில் அவற்றுக்கான முக்கியத்துவமும் கூடிக்கொண்டே போகிறது. கடந்த நூற்றாண்டில் கிட்டத்தட்ட பத்து லட்சம் என்கிற அளவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை இப்போது வெறும் 4,000 மட்டுமே.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் சர்வதேசக் கள்ளச்சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான உயிரினங்கள் வாழ்கின்றன. கள்ள வர்த்தகத்திற்காக, அதிகம் வேட்டையாடும் நாடுகளின் பட்டியலிலும் சரி, கள்ளச் சந்தைகளில் அதிகமாக விலங்குகளைக் கடத்தும் நாடுகளின் பட்டியலிலும் சரி சீனாவே முதலிடம் வகிக்கிறது.

வன உயிர்களை வாழ விடுங்கள்!

புலி எலும்பு, காண்டாமிருகக் கொம்பு ஆகியவற்றின் வர்த்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 25 ஆண்டுக்காலத் தடையை சீனா நீக்கியதும் காட்டுயிர்க் குற்றங்களைக் கண்டும்காணாமல் அமைதியாக இருப்பதும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், சீனா அதைக் கண்டுகொள்ளாமல் தன் கள்ளச்சந்தை வேலையைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மெக்சிகோ, இந்தோனேசியா, நியூ கினியா போன்ற பகுதிகள்தான் கள்ளச்சந்தைகளின் சர்வதேச மையங்களாகத் திகழ்கின்றன.

ராயல் யுனைடெட் சர்வீசஸ் என்ற அமைப்பு 2014-ம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை, இதுபோன்ற விலங்குக் கடத்தல்களும் கள்ளச் சந்தைகளும் தீவிரவாதக் கும்பல்களுக்குத் தேவைப்படும் நிதியுதவிக்குப் பேருதவி புரிவதாக நிரூபித்துள்ளது. 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ப்ரூக்கிங்ஸ் என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பும் அதை நிரூபித்துள்ளது. “தற்போதுள்ள சட்டங்கள் கடுமையானதாக இல்லாததும் முறையாக அமல்படுத்தப்படாததுமே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம். சிக்கலான நிர்வாக அமைப்பு, ஊழல், அக்கறையின்மை போன்றவை, அவற்றுக்குக் கூடுதல் சாதகத்தை உருவாக்குகின்றன. இந்தக் காரணங்களால் குற்றவாளிகள் எளிதாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து மீண்டும் தங்கள் கடத்தலைத் தொடர்கிறார்கள்” என்று அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

1975-ம் ஆண்டு, அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் வர்த்தக உடன்படிக்கையைச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் கொண்டுவந்தது.

அரசுகளுக்கு இடையிலான இந்த உடன்படிக்கையின்படி, அனைத்து அரசுகளும் காட்டுயிர்களின் இருப்பை உறுதிப்படுத்தச் செயல்பட்டாக வேண்டும். யானை, புலி, காண்டாமிருகம் போன்ற விலங்குகளின் கள்ளக்கடத்தல், விலங்குப் பாகங்கள் விற்பனைக்குத் தடை விதித்தல், சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்குதல், முறையாக அமல்படுத்துதல் போன்றவற்றுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அந்த உடன்படிக்கை கூறுகின்றது. ஆனால், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் அந்த உடன்படிக்கையின்படி, இன்னும் முழுமையாகச் சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்கவில்லை. இந்த மெத்தனம்தான் குற்றவாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம்.

கடுமையான சட்டங்கள், கானுயிர் பற்றிய கல்வியைத் தொடர்ச்சியாக வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நேர்மையாக நடவடிக்கை எடுத்தல் போன்றவையே காட்டுயிர் வேட்டை, கடத்தல் மற்றும் அவற்றுக்கான கள்ளச்சந்தை அனைத்தையும் முடக்கி, காடுகளின் பல்லுயிரிய வளத்தைப் பாதுகாக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism