Published:Updated:

உலகளவில் ஆண்டுக்கு 1,38,000 பேர் பாம்புக்கடியால் இறக்கின்றனர்... தீர்வு என்ன?

பாம்புக்கடி
பாம்புக்கடி ( Pixabay )

ஒரு சராசரி மனிதரிடம் கேட்டால், பாம்புகள் குறித்து அவர் தெரிந்து வைத்திருப்பதில் 99% அறிவியலுக்குப் புறம்பானதாகத்தான் இருக்கின்றது. நமக்குப் பாம்புகள் குறித்த தெளிவு இல்லாதது, இதற்கொரு முக்கியக் காரணம்.

கடந்த ஜூன் மாதம் ஒரு நாள், மத்தியப் பிரதேசத்தின் ஒரு கிராமப்புறத்தில் ஒரு தந்தையும் அவருடைய இரண்டு மகன்களும் தங்களுடைய இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் சென்றனர். ஆனால், அதுதான் அவர்களுடைய கடைசி இரவு என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுடைய வீட்டிற்குள் தற்செயலாக வந்து தஞ்சம் புகுந்திருந்தது ஒரு பாம்பு. விடிந்தபின், அவர்கள் மூவரும் பாம்பு கடித்து உயிரிழந்திருந்தனர். அவர்களுக்கு நஞ்சுமுறி மருந்து உரிய நேரத்தில் கொடுக்கப்பட்டிருந்தால், அவர்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த டிசம்பர் மாதம், சென்னை நாசரேத்பேட்டையில் 22 வயது நிரம்பிய புஷ்பா என்பவர், பாம்பு கடித்து மரணமடைந்தார். இதில் வேதனை என்னவென்றால், அவர் இறக்கும்போது, மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார். அவர் திடீரென்று மயங்கி விழுந்து, வாயில் நுரை தள்ளிய பிறகு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு போதிய வசதிகளோ நஞ்சுமுறி மருந்தோ இல்லாததால், உரிய சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்தார்.

நாகம்
நாகம்
Pixabay

சென்னை கே.கே.நகரில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதத்தின் ஒரு வியாழக்கிழமையன்று, அவரது வீட்டில் பாம்புக்கடிக்கு ஆளாகி உயிரிழந்தார். இரவு 10.30 மணியளவில் அவரைப் பாம்பு கடித்தது. சம்பவம் நடந்தவுடன், அவரது குடும்பத்தார், கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பின்னர், ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருந்தும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழக்க நேர்ந்தது.

கடந்த செப்டம்பர் மாதம், திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரில் அமைந்திருந்த ஒரு பள்ளி விடுதியில், 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர், பாம்புக்கடிக்கு ஆளாகி, பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவையனைத்துமே, நகர்ப்புறங்களிலும் பெருநகரங்களிலும் நிகழ்ந்த பாம்புக்கடி மரணங்கள். இவை நமக்குத் தெரிந்து நடப்பவை. இவைபோக, தமிழகத்தின் கிராமப்புறங்களில் இதைவிட அதிகமாகவே மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழகக் கிராமப்புறங்களில் மட்டுமே, ஆண்டுக்குச் சுமார் 10,000 பேர் பாம்புக் கடிக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் என்று சக்திவேல் வையாபுரி என்ற ஆய்வாளர், தன்னுடைய ’Snakebite and Its Socio-Economic Impact on the Rural Population of Tamil Nadu’ என்ற ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஆய்வின்படி, கிராமப்புறங்களில் பாம்புக்கடிக்கு ஆளாகுபவர்களில் 79 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளிகளே.

அப்படிப் பாதிக்கப்படும் சூழலில், நகர்ப்புற மக்களைப்போல கிராமப்புற மக்கள் பெரும்பாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதில்லை. இயன்றவரை கை வைத்தியத்தையே அவர்கள் கையாள முயல்கின்றனர். அது அவர்களை ஆபத்தில்தான் தள்ளுகின்றது. உரிய நேரத்தில் நஞ்சுமுறி மருந்து கொடுக்கப்படவில்லை என்றால், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், அவர்கள் மரணமடைய நேரிடும். இந்தியாவைப் பொறுத்தவரை அப்படி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது மட்டுமே மரணங்களுக்குக் காரணமாக இருப்பதில்லை. மேலே கூறிய செய்திகளையும் நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் அனைவருமே சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தாம். இருப்பினும், பாம்புக்கடிக்குத் தேவையான சிகிச்சை கிடைக்காததால் உயிரிழக்க நேர்ந்தது. சமீபத்தில் ஈ-லைஃப் (eLife) என்ற ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வறிக்கை, இந்தியாவில் 2001 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், 12 லட்சம் பேர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாம்புகள் குறித்த மூட நம்பிக்கைகளை உடைத்து, எது நச்சுப் பாம்பு, எது நஞ்சற்ற பாம்பு என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தி, அவற்றை எப்படி அணுக வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
விஷ்வநாத், ஊர்வனம் அமைப்பின் தலைவர், மதுரை
மீட்கப்பட்ட `கவை முக ஆந்தை...' சாலைக்கு வந்த கட்டுவிரியன் பாம்பு... ஒரு கள அனுபவம்!

பாம்புக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத கை வைத்தியங்களை மேற்கொண்டவாறு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைத் தாமதப்படுத்துவது ஒரு காரணமென்றால், மருத்துவமனைக்குச் சென்றாலும்கூட உரிய சிகிச்சை கிடைக்காதது ஒரு முக்கியக் காரணமாக இருக்கின்றது. அதுகுறித்துப் பேசிய பாம்புகள் மீட்பு மற்றும் விழிப்புணர்வு அமைப்பான ஊர்வனம் அமைப்பின் தலைவர் விஷ்வநாத்,

"இந்தியா வெப்பமண்டலப் பகுதியில் இருப்பதால், இங்கு பாம்புகளுக்கான வாழ்விடம் சிறப்பாக உள்ளது. மக்களுக்கு வழிவழியாக, பாம்பு குறித்த பல கதைகள் கூறப்பட்டுள்ளன. அவை குறித்த கதைகள், நம்பிக்கைகள் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளாகத்தான் இருக்கின்றன. ஒரு சராசரி மனிதரிடம் கேட்டால், பாம்புகள் குறித்து அவர் தெரிந்து வைத்திருப்பதில் 99% அறிவியலுக்குப் புறம்பானதாகத்தான் இருக்கின்றது. இந்த நிலைதான் இங்கு நிலவுகின்றது. நமக்குப் பாம்புகள் குறித்த தெளிவு இல்லாதது, இதற்கொரு முக்கியக் காரணம்.

பாம்புக்கடி என்று எடுத்துக்கொண்டால், பாம்பு கடித்தவுடன் முதலுதவியாக என்ன செய்ய வேண்டுமென்ற விழிப்புணர்வு இங்கில்லை. அதிகமான கிராமப்புறங்களைக் கொண்ட நாடு இது. இங்கு அதிகப் பாம்புக்கடி விபத்துகளும் கிராமப்புறங்களில்தான் நடக்கின்றன. அங்குள்ள மக்கள் உரிய முதலுதவி வழங்காமல், கை வைத்தியங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். அது ஆபத்திற்குத்தான் வழிவகுக்கின்றது. இரண்டாவதாக, சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான உரிய போக்குவரத்து வசதி இருப்பதில்லை. அப்படியே அழைத்துச் செல்வதாக இருந்தாலும் அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குக் காரணம், பாம்பு கடித்தால் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். அது அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கிடைப்பதில்லை.

கட்டுவிரியன்
கட்டுவிரியன்
Jayendra Chiplunkar/Wikimedia Commons

அப்படியே கிடைத்தாலும், அது பொருளாதார ரீதியாகச் சாதாரண மக்கள் அணுகும் விதத்தில் இல்லை. இவையெல்லாவற்றையும் தாண்டி, அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும்கூட, அங்கு தேவைப்படுகின்ற சிறப்பு சிகிச்சையைக் கொடுக்கும் அளவுக்குத் தொழில்நுட்பங்கள் இல்லை. அதோடு, ஒவ்வொரு வயதுடையவர்களுக்கும் ஒவ்வொரு விகிதத்தில் நஞ்சு முறி மருந்தைக் கொடுக்க வேண்டும். அதுவே, முறையாகக் கொடுக்கப்படுவதில்லை. வெப்பமண்டல நாடுகளில் அதிகமாகத் தவிர்க்கப்படும் சிகிச்சை முறைகளில் முதன்மையாக பாம்புக்கடி சிகிச்சை முறைகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. இந்த நிலை மாறி, பாம்புகள் குறித்த மூட நம்பிக்கைகளை உடைத்து, எது நஞ்சுள்ள பாம்பு, எது நஞ்சற்ற பாம்பு என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தி, அவற்றை எப்படி அணுக வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது நிகழாமல் இந்த இழப்புகளைத் தடுக்க முடியாது" என்று கூறினார்.

மக்கள் பாம்புக் கடிக்கு ஆளாவதும் அதனால் உயிரிழப்பதும் இந்தியாவில் ஏதோ அரிதாக நடப்பதல்ல. உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 1,38,000 பேர் பாம்பு கடித்து உயிரிழக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதில், ஆண்டுக்குச் சுமார் 45,000 பேர் இந்தியாவில் மரணிக்கின்றனர். ஆக, பூமியில் நடக்கின்ற பாம்புக்கடி மரணங்களில் கிட்டதட்ட பாதியளவு மக்கள் இங்குதான் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் குறைந்தபட்சம் 15,000 முதல் அதிகபட்சமாக 50,000 பேர் வரை இதனால் பலியாகின்றனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக, இந்தோனேசியா (11,581), நைஜீரியா (9,900), பாகிஸ்தான் (8,264), பங்களாதேஷ் (8,000) ஆகிய நாடுகளில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மட்டுமே கடந்த 20 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் பாம்புக்கடிக்குப் பலியாகியுள்ளனர். அந்த ஆய்வறிக்கையில், பாம்பு கடிப்பது மட்டுமன்றி, அதன்பிறகான சில காரணிகளையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்துள்ளனர். அதன்படி, பாம்பு கடிப்பது மட்டுமே இங்கு மக்கள் உயிரிழப்பதற்குக் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

2001 முதல் 2014-ம் ஆண்டு வரையிலுமான காலகட்டத்தில் 8,08,000 பேர் மரணமடைந்துள்ளனர். அதாவது, 1,00,000 பேரில் 4 முதல் 5 பேர் என்ற விகிதத்தில் மரணிக்கின்றனர்.

விரியன், நாகம் போன்ற பல வகை நஞ்சுள்ள பாம்புகள் இந்தியாவில் வாழ்கின்றன. புகழ்பெற்ற ஊர்வனவியலாளரும் சென்னை முதலைகள் பூங்காவின் தோற்றுநருமான ரோமுலஸ் விடேகர் தன்னுடைய 'இந்தியாவின் பாம்புகள் (Snakes of India)' நூலில், அத்தகைய அனைத்து வகையான நச்சுப் பாம்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர், பாம்புக்கடி மரணங்களைக் குறைப்பதைத் தன்னுடைய நோக்கமாகக் கொண்டு நீண்டகாலமாக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். நான்கு வகையான நாகப் பாம்புகள், அதுபோக, சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் வகைகளில் பலவகைப் பாம்புகள், மேலும் பலவகைக் கடல் பாம்புகள் இங்கு வாழ்கின்றன. அதில் கண்ணாடி விரியன்தான், மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் ஏற்படுகின்ற மரணங்களில் பாதியளவு மரணங்களுக்கு கண்ணாடி விரியனிடம் கடிபடுவதே காரணமாகவும் அமைகின்றது. அதற்கு அடுத்தபடியாக, பட்டியலில் கட்டுவிரியன், சுருட்டை விரியன், நாகம் போன்ற பாம்புகள் இருக்கின்றன.

2001 முதல் 2014-ம் ஆண்டு வரையிலுமான காலகட்டத்தில் 8,08,000 பேர் மரணமடைந்துள்ளனர். அதாவது, 100,000 பேரில் சுமார் 4 முதல் 5 பேர் என்ற விகிதத்தில் மரணிக்கின்றனர். அந்த மரணங்களில், 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர்களே பெரும்பான்மையாகப் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார், 70 வயது மதிக்கத்தக்கவர்களில் 250 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உயிரிழக்கின்றனர். இதுவே, 2015 முதல் 2020 வரையிலான தரவுகளைக் கவனித்தால், டெங்கு போன்ற நோய்களுக்குப் பலியாவோரின் எண்ணிக்கைக்கு நிகராகப் பாம்புக் கடி மரணங்களின் எண்ணிக்கை இருக்கின்றது. அதிலும், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாம்பு கடித்து உயிரிழப்பவர்களின் விகிதம் 100 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணாடி விரியன் (Russell's viper), வீரியமிக்க நஞ்சுள்ள பாம்பு வகை
கண்ணாடி விரியன் (Russell's viper), வீரியமிக்க நஞ்சுள்ள பாம்பு வகை
Shahid Shaikh
`பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?'- ஆராய்ச்சி தம்பதியின் அட்வைஸ்

இதில் பெரும்பான்மை உயிரிழப்புகள், கிராமப்புறங்களில்தான் நிகழ்ந்துள்ளன. அதேபோல், சென்னை போன்ற பெருநகரங்களில், கழிவு மேலாண்மை முறையாக மேற்கொள்ளப்படாதது இதற்கொரு முக்கியக் காரணமாக இருக்கின்றது. கழிவுகளைத் தேடி வந்து குடியிருக்கும் எலி, பெருச்சாளி போன்ற கொறி உயிரினங்களை வேட்டையாட பாம்புகள் வருகின்றன. அங்கிருக்கும் கொறி உயிரினங்கள், அருகிலிருக்கும் குடியிருப்புகளுக்கும் உணவு தேடிச் செல்கின்றன. கூடவே, அவற்றைத் தேடி பாம்புகளும் செல்கின்றன. சென்னை கே.கே.நகரில், திண்டுக்கல் பேகம்பூரில் ஏற்பட்ட மரணங்கள் அப்படிப்பட்டவையே. அதேபோல், கிராமப்புறங்களில் மழைக்காலங்களின்போதுதான் பாம்புக்கடி விபத்துகள் அதிகமாகப் பதிவு செய்யப்படுகின்றன.

ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் அதிக மழை பெய்வதால் அவற்றுடைய வாழிடங்கள் நீருக்குள் மூழ்குவது அதிகமாக நடைபெறும். அந்த நேரங்களில் மேடான பகுதிகளைத் தேடியும் அடைக்கலம் தேடியும் அவை மனிதக் குடியிருப்புகள் பக்கமாக வருகின்றன. அப்படி வரும்போது, இருட்டில் மனிதர்களோடு தற்செயலாக ஏற்படும் தொடர்பு, அவற்றுக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்குகின்றது. அந்த அச்சத்தினால், தற்காப்பிற்காக எதிர்படும் மனிதர்களைத் தாக்குகின்றன. அதோடு, மழைக்காலத்தில்தான் அவற்றுடைய இரை உயிரினங்களும் அதிகமாக வெளியே வரும். அந்த நல்ல வாய்ப்பைப் பாம்புகள் பயன்படுத்திக்கொள்கின்றன. அந்த நேரத்தில், இதுபோன்ற பாம்பு-மனித எதிர்கொள்ளல் நடக்கின்றது.

சுருட்டை விரியன்
சுருட்டை விரியன்
Subagunam Kannan

வெப்பமண்டல நாடுகளில் உள்ள இதர நோய்களைவிட அதிகமாக பாம்புக் கடியால் மனிதர்கள் உயிரிழக்கின்றனர். நல்ல செய்தி என்னவென்றால், பாம்புக் கடிக்கு நஞ்சு முறி மருந்துகள் இருக்கின்றன. கெட்ட செய்தி என்னவென்றால், அது அனைவருக்குமே கிடைக்கும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளில் கிடைக்காதும் அப்படியே கிடைத்தாலும் அதற்குரிய சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்குரிய வசதிகள் இல்லாததும்தான்.

அது நிகழ வேண்டுமெனில், இதைத் தீவிரப் பிரச்னையாக அரசுகள் கவனிக்க வேண்டும். பல ஆண்டுகளாகவே, அரசாங்கம் பாம்புக் கடி பிரச்னைகளைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்டது கிடையாது. தேசியளவில் இதுகுறித்த ஆய்வுகளுக்குக்கூட போதிய நிதியுதவி கிடப்பதில்லை. ஏனென்றால், இதனால் பாதிக்கப்படுபவர்கள் எளிய மக்களே. இந்த நிலையைச் சரிசெய்து, நிலவுகின்ற பிரச்னையைக் களைந்தால், பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றலாம்.

அடுத்த கட்டுரைக்கு