Published:Updated:

அமெரிக்கா, காட்டெருமைகளை கொல்லத்துடிப்பது ஏன்?! #AmericanBison

american bison

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை இந்த உலகின் அனைத்து காலநிலை, புவியியல், மனித மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து, Survival of the fittest என்ற பதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பூமியில் வாழும் அமெரிக்கன் பைசன்களின் கதை மிகவும் சுவாரஸ்யமானது!

அமெரிக்கா, காட்டெருமைகளை கொல்லத்துடிப்பது ஏன்?! #AmericanBison

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை இந்த உலகின் அனைத்து காலநிலை, புவியியல், மனித மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து, Survival of the fittest என்ற பதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பூமியில் வாழும் அமெரிக்கன் பைசன்களின் கதை மிகவும் சுவாரஸ்யமானது!

Published:Updated:
american bison

சில மாதங்களுக்கு முன் உலகின் கடைசி ஆண் வெள்ளை நிற காண்டாமிருகமும் இறந்து அந்த இனமே வழக்கொழிந்து போன சோகக் கதை உங்களுக்கு நினைவிருக்கலாம். சுற்று சூழல் மாசினாலும் மனித செயற்பாடுகளினாலும் பல விலங்குகள் முற்றாக அழிந்தும், அருகியும் வருகின்றன. சூழலியல் ஆர்வலர்களும் இயற்கை விஞ்ஞானிகளும் இது தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

விலங்குகளை பாதுகாக்க பல சட்டங்களையும் திட்டங்களையும் நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு விலங்கினத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதன் எண்ணிக்கையை குறைக்க ஒரு அரசே பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் அளவுக்கு அதிகமாக பெருகியுள்ள பைசன் என அழைக்கப்படும் காட்டெருமைகளை சுட்டுக்கொல்லத் தீர்மானித்து, அதற்காக தகுதி வாய்ந்த துப்பாக்கி சுடும் நிபுணர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது அதன் நிர்வாகம். 2025-ம் ஆண்டுக்குள் தேசிய பூங்கா சேவை கைபாப் நிலப்பரப்பில் வாழும் பைசன் மந்தையின் அளவைக் குறைக்க தீர்மானித்துள்ளது.

american bison
american bison

அவற்றை உயிருடன் பிடித்து பழங்குடியினர் வாழும் இடத்திற்கு இடம் மாற்றுவதன் மூலமாகவும், திறமையான தன்னார்வலர்களை வைத்து சுட்டுக் கொல்வதன் மூலமாகவும் தற்போது இருக்கும் 600 காட்டெருமைகள் எண்ணிக்கையை 200 ஆகக் குறைக்கவிருக்கிறார்கள். இந்த வாய்ப்புக்காக 45,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் அரிசோனா விளையாட்டு மற்றும் மீன் துறை (AZGFD) 25 நபர்களை தேர்வு செய்து தேசிய பூங்காக்கள் சேவைக்கு அனுப்பும். அவர்களில் இறுதியாக 12 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த காட்டெருமைகள் தொன்மை வாய்ந்த தொல்பொருள் மற்றும் பிற தளங்களையும், விளைச்சல் நிலங்களையும் மிதித்து சேதப்படுத்துவதாகவும், அரிசோனா பள்ளத்தாக்கின் வடக்கு விளிம்பில் உள்ள தண்ணீரை மாசுபடுத்துவதாகவும் காரணம் சொல்கிறார்கள்.

‘’750 கிலோ வரை எடை கொண்ட இந்த ராட்சத மிருகம், புல் தரைகளில் நடக்கும்போது அவற்றின் கனத்த வலிமையான கால்கள் நிலத்தை சேதப்படுத்தி அவ்விடத்தில் மேற்கொண்டு எந்தத் தாவரங்களும் வளர விடாமல் செய்து விடுகிறது. அதேபோல இவை புற்களை எல்லாம் தின்று தீர்த்து விடுவதால் ஏனைய தாவர உண்ணிகள் பசியால் மடியும் சூழல் உருவாகிறது போன்ற காரணங்களால் இந்த சோகமான முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்’’ என்கிறது பூங்கா நிர்வாகம்.

அமெரிக்கவில் தேசிய பூங்காக்களில் வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ‘வேட்டை’ என வகைப்படுத்தப்படவில்லை. ஆனால், பூங்கா ஊழியர்கள் அல்லது தன்னார்வலர்களைப் பயன்படுத்தி பூங்கா வளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை கொல்ல அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அரிசோனாவின் 8,000 அடி (2,440மீ) உயரமான கரடுமுரடான பாறைகள் நிறைந்த, கடும் பனிப்பொழிவு நிகழும் நிலப்பரப்பில் இந்த துர் சம்பவம் நடைபெற இருக்கிறது.

அமெரிக்கா கண்டம் முழுதும் பரவலாக சுற்றித்திரிந்த இந்த காட்டெருமைகள் 19-ம் நூற்றாண்டில் பெருமளவு வேட்டையாடப்பட்டு 6 கோடியில் இருந்து சுமார் 600 ஆகக் குறைந்து அழிவின் விளிம்பு வரை சென்றது. அப்போது பல நடவடிக்கைகள் மேற்கொண்டு இனம் மீண்டும் பெருக ஏற்பாடுகள் செய்த அதே அமெரிக்கா அரசே இன்று அவற்றை கொல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்வதுதான் மிகப்பெரிய சோகம்.

american bison
american bison

கிராண்ட் கேன்யன் தேசிய பூங்கா!

அரிசோனாவில் அமைந்துள்ள கிராண்ட் கேன்யன் தேசிய பூங்கா உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் கொலராடோ நதியின் 277 மைல்களை (446 கி.மீ) உள்ளடக்கியது. வண்ணமயமான பாறையின் அடுக்கு பட்டைகளைக் கொண்ட இந்த பூங்கா பல லட்சம் ஆண்டு கால புவியியல் வரலாற்றைக் கொண்டது. யுனெஸ்கோவினால் World Heritage Site என்ற கௌரவம் வழங்கப்பட்ட இது 2019 பிப்ரவரியில் தனது 100வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

The American Bison அல்லது Buffalo என அழைக்கப்படும் காட்டெருமைகள்

ஆச்சரியம் கலந்த ஒரு நீண்ட வரலாற்றையும், தனித்தன்மையான உருவ அமைப்பையும் கொண்ட Buffalo என்றும் அழைக்கப்படும் இந்த பைசன்கள் தம் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே இன்று பெரும் சவாலை எதிர்நோக்கி நிற்கின்றன. ‘நாகரிக’ மனிதர்களின் சுயநலத்திற்கு சான்றாக இன்று வேகமாக அழிந்து வரும் இந்த கட்டெருமைகளிடம் இருந்து உயிர்த்தெழும் வித்தையை மனிதன் கற்றுக்கொள்ளலாம். ஏனெனில், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை இந்த உலகின் அனைத்து காலநிலை, புவியியல், மனித மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து, Survival of the fittest என்ற பதத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பூமியில் வாழும் அமெரிக்கன் பைசன்களின் கதை மிகவும் சுவாரஸ்யமானது.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே அதிகளவில் காணப்படும் இந்த காட்டெருமைகளின் தாய் வீடு நம் ஆசியா என்பதில் கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். ஆதி காலத்தில் இந்த காட்டெருமைகள் ஆசியா முழுதும் பரந்து வாழ்ந்தன. எனவே ‘நாங்கலாம் அந்த காலத்தில்’ என்று பெருமை பேசும் முழுத் தகுதியும் பைசன்களுக்கே உண்டு.

நம்மவர்களைப் போலவே பைசன்களும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க மோகம் பிடித்து ஆட்டியுள்ளது. ஆனால் என்ன அவை சாஃப்ட்வேர் படிக்காமலே அமெரிக்காவுக்கு ஈசியாக சென்று விட்டன. கண்டங்கள் ஒன்றை ஒன்று நிலத்தால் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் இந்த பைசன்கள் மெதுவாக ஆசியாவிலிருந்து ஐரோப்பா நோக்கி நகர்ந்தன. அதன்பின் ஐஸ் ஏஜ் காலப்பகுதியில் இவை வட அமெரிக்காவில் புகுந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறத் தொடங்கின. அதன்பின் நினைத்தும் பார்க்க முடியாத வேகத்தில் வட அமெரிக்க கண்டத்தில் இந்த இனம் பெருகியது.

அதன் பின் மனிதன் தன் பரவலைத் தொடங்கிய போது, பலர் மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். அவர்களுக்கு மேற்கு அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற இருந்த ஒரே வழி, அப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அமெரிக்க பழங்குடியினரை அடிமைப்படுத்தி, அவர்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி, தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே. அதற்கு அவர்கள் முதலில் கை வைத்தது அந்த ஆதிக்குடியினருக்கு பெரும் பக்க பலமாக விளங்கிய காட்டெருமைகளில். எனவே அமெரிக்க இராணுவம் பைசனைக் கொல்ல ஒரு பிரசாரத்தைத் தொடங்கியது. இதன்போது கோடிக்கணக்கான காட்டெருமைகள் கொன்று குவிக்கப்பட்டன.

1500-களில் வட அமெரிக்காவின் பெரிய சமவெளிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த 6 கோடி காட்டெருமைகளின் பேரழிவு 1830-களில் தொடங்கியது. 1860-ல் அமெரிக்க இரயில் பாதையின் கட்டுமானம் மனித குடியேற்றத்தை விரைவுபடுத்தியது. இதனால் மில்லியன் கணக்கில் காட்டெருமைகள் கொல்லப்பட்டன. 1872-1874 வரையான காலப்பகுதிகளில் மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,000 காட்டெருமைகள் கொல்லப்பட்டன. இவ்வாறு 3 ஆண்டுகளில் 60 லட்சம் பைசன்கள் அப்போது கொல்லப்பட்டன.

american bison
american bison

இன்று அமெரிக்காவின் பிரமாண்டமான நகரங்களும், பல அடுக்கு மாடிக்குடியிருப்புகளும் ஒரு காலத்தில் இந்த பைசன்களுக்கு சொந்தமாக இருந்த நிலப்பரப்பே. அதன்பின் கிழக்கே அப்பலாச்சியன் மலைகள் மற்றும் மேற்கில் உள்ள ராக்கி மலைகள் இடையே அமைந்திருக்கும், மத்திய வட அமெரிக்காவின் பெரிய சமவெளிகளில் ஏராளமான காட்டெருமைகள் சுற்றித்திரிந்தன. கொலம்பஸ் கிழக்கு கரையில் தரையிறங்கியபோது 6 கோடி காட்டெருமைகள் சமவெளிகளில் அலைந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெறும் 100 ஆண்டுகளில் இவை வெறும் 600 ஆகக் குறைந்தது என்பதே வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம்.

மனிதன் என்பவன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்பதனை உணர்ந்த இந்த காட்டெருமைகள் 1884-களில் மக்கள் தொகை மிகவும் குறைந்த இடங்களுக்கு புலம் பெயர்ந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, வேட்டைச் சட்டங்களும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருத்தப்பட்ட பின்னர் மீதமுள்ள காட்டெருமைகள் பாதுகாப்பாக வாழவும், இனம் செழிக்கவும் மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்தது. அழிவு வரை சென்ற பைசன்கள் மீண்டும் உயிர்த்தெழுந்த காலகட்டம் அது.

ஆச்சரியமூட்டும் சூப்பர் ஹீரோஸ்

முழு வளர்ந்த காட்டெருமைகள் சுமார் 3.5 மீட்டர் உயரமும் 750 கிலோ வரை எடையுள்ளதாகவும் இருக்கும். இளம், மென்மையான புற்களை விரும்பும் இவை நாள் ஒன்றுக்கு 13 கிலோவுக்கும் மேல் புற்களை உணவாக உட்கொள்கின்றன. சூப்பர் மேன்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த பைசன்களால் 6 அடி செங்குத்தாகவும் 7 அடிக்கு மேல் கிடைமட்டமாகவும் பாய முடியும். அதேபோல ஒரு மணி நேரத்திற்கு 45 மைல் வேகத்தில் வேகமாக ஓடவும் இவற்றால் முடியும். பார்க்க சாந்த சொரூபியான பசுவின் மூத்த அண்ணன் மாதிரி தோற்றம் அளித்தாலும் காட்டெருதுகள் மிகவும் பலம் வாய்ந்ததும், மூர்க்க குணம் கொண்டதும், ஆபத்தானதும் ஆகும்.

குளிர்காலங்களை சமாளித்து தாக்குப் பிடிக்க இவற்றின் உடலில் வளரும் அதிகப்படியான ரோமங்களை, வெயில் காலங்களில், இளம் மரங்களில் உடலை தேய்த்து அகற்றி விடும். இவைகளின் மிகப்பெரிய எதிரி ஓநாய்கள். இவை நைசாக காட்டெருமைக் கூட்டத்தை பின் தொடர்ந்து சென்று, இளைய அல்லது வயதான அல்லது நோய்வாய்ப்பட்ட எருமையாக தேர்வு செய்து ஸ்கெட்ச் போட்டு தனிமைப்படுத்துகிறது. பின்னர் அதை அடித்து கொன்று சாப்பிடுகிறது. நல்ல திடகாத்திரமான இளம் ஆண் காட்டெருமைகள் கூட சில சமயம் இந்த ஓநாய்களின் தந்திரத்தில் சிக்கி மடிக்கின்றன.

american bison
american bison

மலை சிங்கங்கள் மற்றும் மனிதன் கூட இவற்றின் மிகப்பெரிய எதிரிகளே. வேட்டையாடுபவர்களுக்கும் மனித நடவடிக்கைகளுக்கும் அப்பால், காட்டெருமை மந்தைகளுக்கான முதன்மை ஆபத்துக்களில் ஒன்றாக பனிக்கட்டி ஆறுகள் இருந்து வந்துள்ளன. அதிக எடை காரணமாக ஆயிரக்கணக்கான காட்டெருமைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. 2016-ம் ஆண்டில் அமெரிக்காவின் தேசிய பாலூட்டியாக (National mammal of the United States) பைசன்களை அமெரிக்க அரசு அறிவித்தது.

மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் பைசன்கள் வாழ்ந்தபோது வராத சிக்கல் வெறும் 600 மட்டுமே இருக்கும் போது எப்படி வந்தது? அவை வாழ்ந்த பூமியை மனிதன் அபகரித்து கான்கிரீட் காடுகளை வளர்த்து, அவற்றின் வாழ்வாதாரத்தையே சிதைத்து விட்டு இன்று நொண்டி சாக்கு சொல்லி அவற்றை மேலும் அழிக்க முயல்வது மிகப் பெரிய அநீதி. அதற்கு பதிலாக ஏன் இவர்கள் இந்த விலங்குகளை வேறு நாடுகளின் வனவிலங்கு காப்பகங்களுக்கு இலவசமாக வழங்கக்கூடாது?

உலகத்தின் பிரச்னைகள் அத்தனைக்கும் மத்தியஸ்தம் பண்ண வரும் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு, அவர்கள் நாட்டுக்குள்ளேயே ஒரு அபூர்வ உயிரினத்தை ஏதோ சாக்குப் போக்கு சொல்லி பகிரங்கமாக கொல்ல ஆயத்தங்கள் நடக்கும்போது மட்டும் மௌனம் காப்பது ஏனோ?!