Published:Updated:

நீலகிரியில் தொடரும் காட்டுமாடுகள் இறப்பு... கண்ணீர் வடிக்கும் காட்டுயிர் ஆர்வலர்கள்!

கோத்தகிரி அருகே மிளிதேன் பகுதியில் செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த பெண் காட்டுமாடு மீட்க முடியாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.

Indian Gaur
Indian Gaur ( Arun.K )

நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே சாலையோரங்கள், தேயிலைத் தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கலாம். மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடிக் குடியிருப்புகளுக்கு அருகில் உலவுகின்றன. அப்படி உலவும்போது, சில நேரங்களில் மனிதன் - காட்டுமாடு எதிர்கொள்ளல் நடைபெறுகின்றன. இதில் மனிதர்கள் உயிரிழக்கின்றனர். மனித தவறுகளால் காட்டுமாடுகளும் உயிரிழக்கின்றன.

Indian Gaur
Indian Gaur

வனப்பரப்பு மிகுந்த நீலகிரியில் யானைகளுக்கு அடுத்த படியாகக் காட்டுமாடு தாக்கும் சம்பவங்கள் அதிகம். இந்நிலையில், கோத்தகிரி அருகேயுள்ள மிளிதேன், லில்லியட்டி பகுதியில் உணவு தேடி வந்த காட்டுமாடு ஒன்று, புதிதாகக் கட்டப்பட்டு வந்த இடத்தில் திறந்த நிலையிலிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இரவு நேரம் என்பதால் அதனை யாரும் பார்க்கவில்லை. காலையில் தான் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி மேலே ஏற முடியாமல் காட்டுமாடு போராடுவதைப் பார்த்தனர். உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

கழிவுநீர் தொட்டியில் சிக்கிய பெண் காட்டுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏற்கனவே தாமதம், அத்துடன் அவர்களிடம் மாட்டை மீட்க போதிய உபகரணங்கள் இல்லை. மாடு சிக்கியது குறுகலான கான்கிரிட் வளையங்கள் என்பதால் அதில் சிக்கியிருந்த காட்டுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், "மிளிதேன் பகுதியில் கழிவுநீர் தொட்டிக்குள் ஏழு வயது மதிக்கத்தக்கப் பெண் காட்டுமாடு சிக்கியிருந்தது. குறுகிய கான்கிரிட் வளையங்கள் என்பதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் காட்டுமாடு இறந்து விட்டது. ஜே.சி.பி. வரவழைக்கப்பட்டு நாளை அதன் உடல் மீட்கப்படும். கழிவுநீர் தொட்டி, பள்ளங்கள் தோண்டுபவர்கள் உடனுக்குடன் அவற்றை மூடி விட வேண்டும். இல்லாதபட்சத்தில் இது போன்று வன விலங்குகள் விழுந்து உயிரிழக்கக்கூடிய சூழல் உள்ளது" என்றனர்.

Indian Gaur
Indian Gaur

"இன்று காலைக் காட்டுமாடு சிக்கியிருந்ததைப் பார்த்து உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் உடனடியாக வந்திருந்தால் அதனை உயிருடன் மீட்டிருக்கலாம்" என்கிறார்கள் அருகில் உள்ள மக்கள். இது தொடர்பாகப் பேசிய காட்டுயிர் ஆர்வலர்கள், "நீலகிரி மாவட்டத்தில் காட்டுமாடுகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மனித தவறுகளால் காட்டுமாடுகள் உயிரிழப்பது வருத்தமளிக்கிறது. இதனைத் தடுக்க வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மனித தவறுகளால் பத்துக்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. இவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்கிறார்கள்.