Published:Updated:

`அமைதியை நேசிக்கும்; தனியாகத்தான் இருக்கும்!'‍ - சக காட்டு யானைகளால் கொல்லப்பட்ட மணியன்

குருபிரசாத்

வயநாடு மக்களின் அன்பைப் பெற்ற மணியன் என்ற காட்டு யானையின் மறைவு, கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணியன்
மணியன்
`இதுவே எங்களுக்கு கடைசி வழி'- மதம் பிடித்த யானை மீது கற்களை வீசி சர்ச்சையான பாகன்கள்!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை மணியன், 9 அடி உயரம், பெரிய தந்தம் என்று பிரமாண்டமாகக் காட்சியளித்தாலும், இந்த யானையால் அந்தப் பகுதியில் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை.

மணியன்
மணியன்

இதுவரையில், மணியன் யானை ஒருபோதும் உயிருக்கோ அல்லது எந்தவொரு சொத்துக்கும் சேதம் விளைவித்ததில்லை.

இந்நிலையில், வயநாடு அருகே புல்லுமாலா காட்டில் மணியன் இறந்து கிடந்தது. மற்றொரு காட்டு யானை தாக்கியதில், மணியனின் வயிறு, தலை உட்பட பல்வேறு இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

மணியன் காயம்
மணியன் காயம்

குறிப்பாக, இந்தச் சம்பவம் நடந்தபோது, ​​மணியன் கூச்சலிடுவதை உள்ளூர்வாசிகள் கேட்டுள்ளனர். மணியனின் மறைவு வயநாடு மற்றும் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, வயநாட்டின் பல்லுயிர் பெருக்கத்தில் மணியன் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளது. வயநாட்டில், கடந்த சில ஆண்டுகளாக மனித-விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், மணியன் அத்தகைய தாக்குதல்களில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.

இறந்த நிலையில் மணியன்
இறந்த நிலையில் மணியன்

2000-களின் முற்பகுதியில் வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்கு வழக்கமான பார்வையாளராகத்தான் மணியன் வந்ததாகப் பார்க்கப்பட்டது.

"மணியன் ஓர் அசாதாரண காட்டு யானை. அமைதியை நேசிக்கும் யானையாகத்தான் இருந்தது. பெரும்பாலும் கூட்டத்தில் சுற்றாமல் தனியாகத்தான் சுற்றும். மணியனின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு" என்கின்றனர் வயநாடு மக்கள். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, மக்கள் புல்லுமாலாவுக்கு வந்து மணியனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.