Published:Updated:

``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி பகிரும் போட்டோகிராபர்

"மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே விலங்குகள் விரும்பும். நாமதான் விலங்குகளின் குணாதிசியங்களைத் தெரிஞ்சுக்காம, அதன் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செஞ்சு தொந்தரவு செய்றோம்."

Tiger
Tiger ( Photo: Varun Aditya )

கோயம்புத்தூரைச் சேர்ந்த வருண் ஆதித்யா, வைல்ட் லைஃப் போட்டோகிராபியில் கலக்கிக்கொண்டிருக்கும் இளைஞர். 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்திருக்கும் வருண், `National Geographic Nature Photographer of the Year' என்ற உயரிய விருதையும் வென்றவர். தன் அனுபவத்திலிருந்து, விலங்குகளின் சுவாரஸ்யமான குணாதிசயங்களைப் பகிர்கிறார், வருண்.

`National Geographic Nature Photographer of the Year' award winning photo
`National Geographic Nature Photographer of the Year' award winning photo
Varun Aditya

* ``மனிதர்களைவிடவும் விலங்குகளே அதிகமா வேலை செய்கின்றன. சிங்கம், புலி, சிறுத்தையெல்லாம் ஒருநாளைக்கு 18 மணிநேரம் தூங்கும். அது சோம்பேறித்தனம் இல்லை. அவற்றைப் பொறுத்தவரை அதுவும் அத்தியாவசிய ஒன்று. அவ்வளவு நேரம் தூங்கினால்தான், வேட்டையாடுற வேலையைச் சரியா செய்ய முடியும்.

varun aditya
varun aditya

* சிங்கம், பெரும்பாலும் பகலில் வேட்டையாடாது. பெண் சிங்கம்தான் பெரும்பாலும் வேட்டைக்குச் செல்லும்; தன் குட்டிகளைக் கவனிச்சுக்கும்.

* டிவியில், இணையதளத்தில் விலங்குகள் வெற்றிகரமாக வேட்டையாடுவதைத்தான் பார்த்திருப்போம். ஆனா, அவற்றுக்கு வேட்டையாடும்போது 60 சதவிகிதம் தோல்விகள்தான் கிடைக்கும். ஒவ்வொரு விலங்குமே உயிர்வாழ தினமும் கடுமையா உழைக்குது. `தி லயன் கிங்' படத்துல வரும் முக்கால்வாசி விஷயங்கள் உண்மைதான்.

``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி  பகிரும் போட்டோகிராபர்
varun aditya Photography

* அடுத்தவேளை உணவை முன்கூட்டியே சேமித்து வைக்கும் குணம் விலங்குகளுக்குக் கிடையாது. பசித்தால் மட்டுமே வேட்டையாடும்.

``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி  பகிரும் போட்டோகிராபர்
varun aditya photography

* எல்லா மிருகங்களும் மனிதர்களைக் கண்டால் பயப்படும். இனச்சேர்க்கை மற்றும் சாப்பிடும்போது தொந்தரவு செய்தால் மட்டுமே அவை மனிதர்களைத் தாக்க வரும்.

* புலி வேட்டையாடிய பிறகு, உடனடியாகச் சாப்பிடாது. எனர்ஜியை இழந்திருக்கும் என்பதால், இரையின் அருகில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டுச் சாப்பிடும்.

varun aditya
varun aditya

* காடுகளிலுள்ள புலிகள் சராசரியாக 16 வயது வரை உயிர்வாழும். வயதான புலிகளுக்கு, அதன் வெட்டுப் பற்கள் (canine tooth) வலுவிழந்து விடும். அதனால், எளிதில் கடித்துச் சாப்பிடக்கூடிய உணவுகள் காடுகளில் கிடைக்காத பட்சத்தில்தான், அதன் வாழ்விடத்தில் வீடு கட்டியிருக்கும் மனிதர்கள் வசிப்பிடத்துக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகிறது. மான் உள்ளிட்ட மற்ற விலங்குகளைக் காட்டிலும், புலியால் ஆடு மாடுகளை எளிதில் வேட்டையாடிச் சாப்பிட முடியும்.

மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே விலங்குகள் விரும்பும். நாமதான் விலங்குகளின் குணாதிசியங்களைத் தெரிஞ்சுக்காம, அதன் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செஞ்சு தொந்தரவு செய்றோம்.
வருண் ஆதித்யா

* மாமிசம் சாப்பிட்டால் உடலில் அதிக வெப்பம் உண்டாகும். எனவே, விலங்குகள் அதிகளவில் தண்ணீர் குடிக்கும். முடிந்தவரை நீர் நிலைகளின் பக்கத்துலதான் விலங்குகள் வேட்டையாடும். தண்ணீருக்காக விலங்குகள் சண்டையிட்டு உயிரிழப்பதும் அதிகம் நடக்கும்.

* பாம்பை மிதித்தால்தான் அது நம்மைக் கொத்தும். பாம்புகள், மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே நினைக்கும்.

``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி  பகிரும் போட்டோகிராபர்
varun aditya photography

* எல்லா வகை விலங்குகளுமே, தங்களுடைய ஜோடியைக் கவர்வதற்கு அதிகளவில் முயற்சிகளை மேற்கொள்ளும். தன் இணையுடன் இனச்சேர்க்கைக்கு இடையூறாக இருந்தால், ஆண் சிங்கம் தன் குட்டியையே கொல்லும்.

``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி  பகிரும் போட்டோகிராபர்
varun aditya photography

* ஒரு நேரத்துல ஒரு வேலையை மட்டும்தான் எல்லா விலங்குகளும் செய்யும். எதிர்காலத் தேவைக்காக நிகழ்கால சந்தோஷத்தை விலங்குகள் இழக்காது" என்கிற வருண் ஆதித்யா, இயற்கையிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டிய முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கூறுகிறார்.

``ஆண்டுதோறும் ஆகஸ்ட் - செப்டம்பர் வரை, நல்ல மழைப்பொழிவால் கென்யாவிலுள்ள காடுகள் பச்சைப்பசேலென இருக்கும். அந்தக் காலங்கள்ல, தான்சானியாவிலிருந்து கென்யாவுக்கு கோடிக்கணக்கான வரிக்குதிரைகள் மற்றும் காட்டு மான்கள் இடம்பெயரும். அந்தக் கண்கொள்ளா காட்சியை 2014-ம் ஆண்டு பார்த்து வியந்தேன்.

``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி  பகிரும் போட்டோகிராபர்
varun aditya photography

அதன்பிறகு, அவ்விரண்டு விலங்குகளின் இடப்பெயர்வும் இப்போ ரொம்பவே குறைஞ்சுடுச்சு. இப்போது சரியான மழைப்பொழிவு இல்லாம, சரணாலயங்களின் ராஜாவான கென்யாவிலுள்ள மசாய் மாரா காட்டிலேயே வறட்சிதான் அதிகம் நிலவுது.

``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி  பகிரும் போட்டோகிராபர்
varun aditya photography

புவி வெப்பமயமாதல் (Global warming), பருவநிலை மாற்றங்களால் இயற்கை வாழ்விடங்கள் மோசமா பாதிக்கப்படுது. அதனால, உணவின்றி, வாழ்விடம் குறைஞ்சு, விலங்குகள் அழிஞ்சுகிட்டே இருக்கு. வனவிலங்குகள் எதிர்கொள்ளும் சூழலியல் சிக்கல்களிலிருந்து நாம பாடம் கற்கலைன்னா, பருவநிலை மாற்றங்களால் வனவிலங்குகள் எதிர்கொள்ளும் எல்லா பிரச்னைகளும் எதிர்காலத்துல மனிதர்களுக்கும் ஏற்படும்.

வனவிலங்குகள் என்றாலே, அவை மனிதர்களைத் தாக்கும் என்ற எண்ணம்தான் பலர் மனதிலும் இருக்கு. ஆனா, அது உண்மையில்லை. மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே விலங்குகள் விரும்பும். நாமதான் விலங்குகளின் குணாதிசயங்களைத் தெரிஞ்சுக்காம, அதன் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செஞ்சு தொந்தரவு செய்றோம்.

``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி  பகிரும் போட்டோகிராபர்
varun aditya photography

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் சஃபாரி போறதுக்கு அனுமதி உண்டு. அதன் மூலம் கிடைக்கிற கட்டணத் தொகை, அந்தந்தச் சரணாலயங்களின் வளர்ச்சிக்கு உதவும். தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை, முதுமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட எந்தக் காடுகளிலும் சஃபாரிக்கு அனுமதியில்லை. தமிழகத்திலும் அனுமதி கிடைச்சா, வனத்துறைக்கு வருவாய் கிடைக்கும். சுற்றுலாப் பயணிகளும், விலங்குகளின் குணநலங்களைக் கண்கூடாகத் தெரிஞ்சுப்பாங்க" என்று வேண்டுகோள் விடுக்கிறார் வருண் ஆதித்யா.

வருண் ஆதித்யாவின் வைல்ட் லைஃப் போட்டோகிராபி அனுபவங்கள் குறித்த விரிவான பேட்டியை, விகடன் தீபாவளி மலரில் படிக்கலாம்.