Published:Updated:

Elephant: `யானைகளுக்கும் எல்லா எமோஷன்களும் இருக்கு!’ - அனுபவம் பகிரும் டாக்டர் அசோகன்

யானையுடன் டாக்டர் அசோகன்
யானையுடன் டாக்டர் அசோகன்

`யானைகள், உணவுக்காக ஒருநாளைக்கு 16 மணிநேரம் செலவிடுகின்றன. உணவைத் தேடி ஒருநாளைக்கு 190 கி.மீ வரை பயணம் செய்கின்றன. இப்படி அலைந்தும் எதுவும் கிடைக்காத பட்சத்தில்தான் யானைகள் கோபம் கொள்கின்றன’.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனக் கால்நடை மருத்துவராக இருப்பவர் அசோகன். முதுமலை புலிகள் காப்பகம், கோவை வ.உ.சி பூங்கா என தமிழகத்தின் பல இடங்களில் பணிபுரிந்திருக்கிறார். பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்வது, ஊருக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பது, யானைகளுக்கு சிகிச்சையளிப்பது என எல்லா வன விலங்குகளை அவ்வளவு அன்பாகக் கையாள்கிறார்.

அனைத்து விலங்குகள் மீதும் அசோகனுக்கு பிரியம் இருந்தாலும், யானையின் மீதான அவருடைய காதல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அட்டகாசம் செய்த மக்னா யானை, விநாயகா, சின்னத்தம்பி யானை போன்ற யானைகளைப் பிடிக்கும் பல ஆப்ரேஷன்களில் இருந்திருக்கிறார். ரெளடியிசம் செய்யும் யானையாக இருந்தாலும் அதன்மீதும் கரிசனம் காட்டுபவராக இருக்கிறார். ஆகஸ்ட் - 12, உலக யானைகள் தினத்தையொட்டி அசோகனிடம் பேசினோம்.

டாக்டர் அசோகன்
டாக்டர் அசோகன்

``வருஷம் முழுக்க ஏகப்பட்ட தினங்கள் கொண்டாடிக்கிட்டு இருக்கோம். அந்தநாள் முடிஞ்சிடுச்சின்னா அதை மறந்துடுறோம். குறிப்பாக, `உலக யானைகள் தினம்’ன்னு ஒருநாள் மட்டும் கொண்டாடிட்டு விட்டா போதாது. இன்றைய சூழலில் யானைகள், ஏராளமான பிரச்னைகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றன. அவற்றையெல்லாம் சரிசெய்ய ஒரு பெரிய பிராசஸ் தேவைப்படுது. யானைகளைப் பாதுகாக்க காடுகளின் இயற்கை வளம் குன்றாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு காடுகளில் வெட்டப்படும் மரங்கள், குவாரிகள், வலசைப்பாதை ஆக்கிரமிப்பு, வேட்டையாடல் போன்றவற்றால் யானைகள் கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கின்றன.

இதனால்தான் கடந்த சில வருடங்களாக மனிதனுக்கும் யானைகளுக்குமான மோதல் அதிகமாகியிருக்கிறது. பருவநிலை மாற்றம், வறட்சி போன்றவற்றால் யானைகளுக்குத் தேவையான தாவரங்கள், தண்ணீர் போன்றவை கிடைப்பதில்லை. இதனையெல்லாம் சரிசெய்யாமல் வெறுமனே `உலக யானைகள் தினம்’ என பெயருக்கு ஒருநாள் கொண்டாட்டமாக முடிந்து போவதில் எந்தவிதமான பயனும் இல்லை.

யானைக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் அசோகன்
யானைக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் அசோகன்

யானைகள் 200 வகையான தாவரங்களை உட்கொள்வதாகச் சொல்கிறார்கள். ஒருநாளைக்கு ஒரு யானைக்கு 200 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணியும் தேவை. குறிப்பாக சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் சுமார் 700 யானைகள் இருப்பதாகப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இந்த 700 யானைகளுக்கும் தினமும் தேவையான உணவும், தண்ணீரும் கிடைக்கின்றனவா என்பது சந்தேகம்தான். யானைகள், உணவுக்காக ஒருநாளைக்கு 16 மணிநேரம் செலவிடுகின்றன. உணவைத் தேடி ஒருநாளைக்கு 190 கி.மீ வரை பயணம் செய்கின்றன. இப்படி அலைந்தும் எதுவும் கிடைக்காத பட்சத்தில்தான் யானைகள் கோபம் கொள்கின்றன. தாய்லாந்து நாட்டைப் போல வனப்பகுதிகள் மற்றும் வன எல்லைகளில் அரசே அதிகளவில் தாவரங்களை வளர்க்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``யானைகளோட புத்திக்கூர்மை ரொம்ப அபாரம். 5.மீ சுற்றளவுல எங்க தண்ணி இருக்குன்னு சரியாகக் கண்டுபிடிச்சிடும். யானைகள் பொதுவாக யாரையும் சீண்டாது. `என் வழியில் குறுக்கிடாத’ன்னு சிலுப்பிக்கிட்டு ஒரு பிளிறலோட லேசா எச்சரிக்கும். அதையும் மீறினால்தான் அது வேலையைக் காட்டும்.

30 ஆபரேஷன்... உயிரைப் பணயம் வைக்கும் யானை டிரைவர் ஆறுச்சாமியின் கதை ! | Elephant

1998-ல் முதுமலையில் பிடிபட்ட மக்னா யானை 22 பேரை கொன்னுருக்கு. நான் ட்ரீட்மென்ட் கொடுக்குறப்ப 2-3 தடவை தடுமாறி அதோட காலடியில் விழுந்துருக்கேன். என்னை எதுவுமே செய்யலை. அந்த மக்னா யானை உடம்பு முழுக்க துப்பாக்கிக் குண்டுகள். எனக்கு மக்னா யானையைப் பார்க்குறப்ப பாவமாகத் தான் இருந்துச்சி. ஈரோடு கடம்பூர் மலையில் 5 வயசு குட்டியானை உடலில் உணர்ச்சியில்லாம விழுந்து கிடந்தது. அந்த யானைக்கு சிகிச்சை கொடுத்து, உடம்பை தேச்சி சூடாக்கி 2 நாளுக்கு அப்புறமாக சரியாக்கி காட்டுக்குள்ள அனுப்பி வைச்சோம்.

குட்டியானைக்கு உணவூட்டும் டாக்டர் அசோகன்
குட்டியானைக்கு உணவூட்டும் டாக்டர் அசோகன்

ஒருதடவை ஒரு தாய் யானை உடம்பு முடியாம படுத்துடுச்சி. அதோட குட்டி யாரையுமே பக்கத்துல விடலை. எப்படியோ போராடி, தாய் யானைக்கு சிகிச்சை கொடுத்து காப்பாத்திட்டோம். `தன்னோட அம்மாவை காப்பாத்திட்டாங்க’ன்னு அந்த குட்டியானை முகத்துல தெரிஞ்ச சந்தோஷத்தை வார்த்தையால சொல்லவே முடியாது. என்னோட 30 வருஷ சர்வீஸ்ல 16 டிரான்ஸ்ஃபர், பல தடைகள் இருந்துருக்கு. இதுக்கு இடையில் 50 யானைகளுக்கு சிகிச்சை கொடுத்து காட்டுக்குள்ள அனுப்பியிருக்கேன்.

யானைகளுக்கும் மனுசனை மாதிரியே சிந்தித்தல், புரிதல், நினைவாற்றல், மகிழ்ச்சி, பிரிவு, ஏமாற்றம், ஏக்கம் என எல்லா எமோஷன்களும் இருக்கு. ஒரு அதிர்ஷ்டசாலியாக அந்த நவசரங்களையும் நான் பார்த்திருக்கேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு