Published:Updated:

சென்னையில் 497 மான்கள் உயிரிழப்பு! வனத்துறையின் காரணமும் தீர்வும் சரியா?!

புள்ளி மான் ( Pixabay )

நியாயமாகப் பார்த்தால், வெளிமான்களுடைய வாழிடத்தை சரியாகப் பராமரிக்காமல் விட்ட, கட்டுமானங்களை அதிகரித்த, நாய்களைக் கட்டுப்பாட்டில் வைக்காத ஐஐடி நிறுவனத்திற்குத்தான் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

சென்னையில் 497 மான்கள் உயிரிழப்பு! வனத்துறையின் காரணமும் தீர்வும் சரியா?!

நியாயமாகப் பார்த்தால், வெளிமான்களுடைய வாழிடத்தை சரியாகப் பராமரிக்காமல் விட்ட, கட்டுமானங்களை அதிகரித்த, நாய்களைக் கட்டுப்பாட்டில் வைக்காத ஐஐடி நிறுவனத்திற்குத்தான் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

Published:Updated:
புள்ளி மான் ( Pixabay )
"ஐஐடி மெட்ராஸ் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகங்களுக்குள், கடந்த 5 ஆண்டுகளில் 497 மான்கள் இறந்துள்ளன. உடற்கூறு பரிசோதனை முடிவுகள், இறந்த மான்கள் பெரும்பாலானவற்றின் வயிற்றில் 4 முதல் 5 கிலோ வரை பிளாஸ்டிக் இருந்ததாகத் தெரிவிக்கின்றன."
சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா, தலைமை வன அலுவலர்
மான் கன்று
மான் கன்று
Pixabay

ஐஐடி மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகங்களிலிருந்து புள்ளி மான்களை இடம் மாற்ற வேண்டுமென்ற வனத்துறையின் முடிவுக்கு எதிராகப் போடப்பட்ட பொதுநல வழக்கில், நவம்பர் 5-ம் தேதி, வனத்துறை சார்பாகத் தலைமை வன அலுவலர் பதிலளித்தபோதுதான் இந்த அதிர்ச்சித் தகவலைக் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிண்டியிலுள்ள ராஜ் பவன், ஐஐடி, தோல் ஆராய்ச்சி மையம் ஆகிய பகுதிகள், புள்ளிமான்களின் இயற்கையான வாழிடம் கிடையாது. அங்கு, அவை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பகுதிகள், மான்களுக்குப் போதுமான உணவு, நீர், வாழிடத்தைக் கொடுக்கவில்லை. கட்டுமானப் பணிகள், வேலிகள், மதிற்சுவர்கள் அனைத்தும் அதிகரித்துவருவதால், இருக்கின்ற குறைவான வாழிடமும் துண்டாகிக்கொண்டிருக்கிறது. முன்னர், மொத்தப் பகுதியிலும் சுதந்திரமாக சுற்றித்திரிந்த மான்கள் இப்போது, அந்தந்த வளாகங்களுக்குள் சுருங்கி வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

தெருநாய்கள், மாசுபாடு, குப்பைகள், நோய்த் தொற்றுகள் என்று பலவும் சேர்ந்து இந்தப் பகுதியை மான்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றிக்கொண்டிருக்கிறது. அதனால், இங்கிருந்து மான்களை வேறு ஆரோக்கியமான பகுதிக்கு இடம் மாற்ற வேண்டுமென்று அந்தப் பதிலில் வனத்துறை சார்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

புள்ளிமான்களுக்கு சென்னை புதிய வாழிடம். வேறு காடுகளிலிருந்து இங்கே அறிமுகப்படுத்தப்பட்டவை. வெளிமான்கள்தான், சென்னையில் இயற்கையான வாழிடத்தைக் கொண்டுள்ளன. புள்ளிமான்கள், அடர்த்தியான மரங்களடர்ந்த பகுதியில்கூட வாழ்ந்துவிடும். ஆனால், வெளிமான்களுக்கு புல்வெளிகள் தேவை. ஐஐடி நிறுவனம் தொடர்ந்து விரிவாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. கட்டுமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. வெட்டவெளி நிலங்கள் எதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. ஒன்று, விளையாட்டுத் திடலாக மாற்றிவிடுகிறார்கள் அல்லது கட்டடம் கட்டிவிடுகிறார்கள். கட்டுமானப் பணிகளின்போது மிச்சமாகும் குப்பைகள் சரியாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. சின்னச் சின்ன பி.வி.சி குழாய்த் துண்டுகள், மான்களுடைய குழம்புகளில் சிக்கி காயம் ஏற்படுத்துகின்றன. அந்தக் காயங்கள் சீல் பிடித்து, பெரிதாகி, அவற்றின் உயிரைப் பறிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோக, ஐஐடி, சிஎல்ஆர்ஐ வளாகங்களுக்குள் நாய்கள் அதிகம். வளர்ப்பு நாய்கள் மட்டுமின்றி, அங்கு சுதந்திரமாக சுற்றித் திரியும் நாய்களும் உள்ளன. இவை, இந்த மாதிரி காயம்பட்ட மான்களைக் கூட்டுசேர்ந்து வேட்டையாடத் தொடங்குகின்றன. காலப்போக்கில், காயம்பட்ட மான்கள் மட்டுமின்றி, மான் கன்றுகளையும் பலவீனமான மான்களையும் வேட்டையாடத் தொடங்கி, நாய்களுடைய மான் வேட்டை தீவிரப் பிரச்னையாகவே உருவெடுத்து நிற்கிறது.

கழிவு மேலாண்மை சரியாக இருந்தால், மான்கள் ஏன் பிளாஸ்டிக் பொருள்களைச் சாப்பிடுகின்றன, கழிவுகளால் காயமடைகின்றன?
புள்ளி மான்கள்
புள்ளி மான்கள்
Pixabay

"வளர்ப்பு நாய்களை வைத்திருப்பவர்கள், அவற்றை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். வெளியே நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்பவர்கள், சங்கிலியிட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். இந்த வளாகங்களுக்குள் இருக்கும் மற்ற நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மான்களை எடுத்துப் போவதற்குப் பதிலாக நாய்களை எடுத்துச்செல்லலாமே.

ஐஐடி, தோல் ஆராய்ச்சி மையம் போன்ற காட்டுயிர் வளம் மிகுந்த வளாகங்களுக்குள், அவற்றின் இருப்புக்கு ஆபத்தாக விளங்கும், புதிய வேட்டையாடிகளாக உருவெடுத்துவரும் நாய்களை வளர்க்கவே கூடாதென்ற கட்டுப்பாடுகூட விதிக்கலாம். மான்களை இடம் மாற்றுவது இதற்குத் தீர்வே கிடையாது. சரியான காட்டுயிர் மேலாண்மையை வனத்துறை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார், சூழலியல் எழுத்தாளரும் ஆர்வலருமான பேராசிரியர் தா.முருகவேள்.

மான் மிகவும் மென்மையான உயிரினம். அவற்றைப் பிடிக்க முயன்றால், அந்த முயற்சியில் அவற்றுக்கு உண்டாகும் பயத்தால், அவற்றின் உயிருக்கே ஆபத்து நேரலாம். கடந்த இரண்டு வாரங்களில், சுமார் ஆறு மான்கள் கிண்டி தேசியப் பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டன. அதில் ஒருசில மான்களுடைய வயிற்றில் பிளாஸ்டிக் இருந்ததால் உயிரிழந்தன. இன்னும் ஒரு சில, பிடிக்கப்பட்டபோது ஏற்பட்ட அச்சத்தாலும் மன அழுத்தத்தாலுமே உயிரிழந்துவிட்டன.

சரி, ஒருவேளை வனத்துறை சொல்வதுபோல் புள்ளிமான்களை இடம் மாற்றினால், அவற்றைக் காப்பற்றலாம் என்றாலும், அங்கு வாழும் வெளிமான்களை என்ன செய்வது? ஆனால், இயற்கையாகவே அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் வெளிமான்களையும் இடம் மாற்றுவது தீர்வாகுமா?

ஐஐடி வளாகத்திற்குள் வெளிமான்களின் வாழிடமாக, உணவுக்கான ஆதாரமாக விளங்கும் புல்வெளிகள், திறந்தவெளி நிலங்கள் அப்படியே விடப்படுவதில்லை. அவற்றை, விளையாட்டுத் திடல்களாக, கட்டடங்களாக மாற்றிவிடுவதால் வெளிமான்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டிருக்கிறது. அதற்கு என்ன தீர்வு!

இந்தப் பகுதியில் மான்களுடைய இயற்கையான வேட்டையாடிகளாக குள்ளநரிகள் இருக்கின்றன. ஆனால், வளாகங்களைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டிருப்பதால், அவை கிண்டி தேசியப் பூங்காவோடு சுருங்கிவிட்டன. அந்தப் பகுதியிலுள்ள நரிகள், அவற்றுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்துகொள்வதால், மரபணுக் குறைபாட்டிற்கு விரைவில் ஆளாகிவிடும் ஆபத்தும் உள்ளது. நாய்களைக் காரணம் காட்டி, சுவர் எழுப்புவது, மான்களை இடம் மாற்றுவது என்று செய்வதைவிட, அங்கு வாழும் காட்டுயிர்களுடைய வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் அரண்களைத் தகர்த்தெறிந்து, சூழலை மீட்டுருவாக்க முயற்சி செய்வதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

ஐ.ஐ.டி-யில் நாய்களால் வேட்டையாடப்பட்ட வெளிமான்
ஐ.ஐ.டி-யில் நாய்களால் வேட்டையாடப்பட்ட வெளிமான்
The New Indian Express

நியாயமாகப் பார்த்தால், வெளிமான்களுடைய வாழிடத்தைச் சரியாகப் பராமரிக்காமல் விட்ட, கட்டுமானங்களை அதிகரித்த, நாய்களைக் கட்டுப்பாட்டில் வைக்காத ஐஐடி நிறுவனத்திற்குத்தான் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து, காட்டுயிர்களுடைய நிலத்தைப் பாதுகாப்பதைவிட்டு, அவற்றை அவற்றின் நிலத்திலிருந்து பிரிப்பது எந்த விதத்திலும் நியாயமான காட்டுயிர் மேலாண்மையாக இருக்க முடியாது.

எது சரியான, நியாயமான காட்டுயிர் மேலாண்மை என்பதைச் சிந்தித்து, வனத்துறை செயல்பட வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism