Published:Updated:

உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்... காரணம் என்ன?

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை சுற்றியுள்ள கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் 15 யானைகள் இருந்தன. தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் மயூரநாதர் ஆலயம் மற்றும் திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் ஆகிய இரண்டில் மட்டுமே யானைகள் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனுடன் உறவாடி வரும் யானைகளுக்கு மரியாதை தரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று யானைகளை இரண்டு பிரிவாக வகைபடுத்தியுள்ளனர். ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் வசிக்கின்றன. 7 அடி முதல் 12 அடிவரை உயரமும் 5 ஆயிரம் கிலோ வரை எடையும் கொண்டவையாகும். பிரமாண்டத்திற்கு யானைகள் ஓர் உதாரணம். 

யானைகள் தினம்
யானைகள் தினம்

காட்டிலிருந்த யானைகளை  மனிதன் பிடித்து வந்து பழக்கினான். "மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி யானை கட்டிப் போர் அடித்த சோழநாடு" என்ற சொற்றொடர் முற்காலத்தில் விவசாயத்திற்கு யானைகள் எவ்வாறு  பயன்பட்டன என்பதை எடுத்துக்காட்டுகிறது. பண்டையத் தமிழ் மன்னர்களின் நான்குவகை படைகளில், குஞ்சரப் படை எனப்படும் யானைப்படை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

கி.பி. 1225-ல் சீன புவியியலாளர் சா யூ-குவா சோழ நாட்டைப் பற்றியும் சோழர்ப் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"சோழநாடு மேற்கிந்திய நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. சோழ அரசிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்துகிறார்கள். சோழர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் இப்படைதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

யானைகள் தினம்
யானைகள் தினம்

போரிடுவதற்கும், விவசாயத்திற்கும் பயன்பட்ட யானைகள், ஆலயங்களில் தெய்வ காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு  தந்தத்திற்காக யானைகளைக் கொல்வது அதிகரித்த காரணத்தால் 1872-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசு, யானைகளைப் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது. அதன்பிறகு சர்க்கஸ், ஆலயங்கள், திருமடங்கள் ஆகியவற்றில் மட்டுமே யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. சர்க்கஸ்கள் தங்கள் செல்வாக்கை இழந்த பிறகு, ஆலயங்களிலுள்ள யானைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை சுற்றியுள்ள கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் 15 யானைகள் இருந்தன. தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் மயூரநாதர் ஆலயம் மற்றும் திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் ஆகிய இரண்டில் மட்டுமே யானைகள் உள்ளன. இவற்றை மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவர். வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து சான்றளிக்கின்றனர். எந்த ஒரு மிருகமும் மனிதனுடன் வாழ ஒத்துக் கொண்டால் மட்டுமே அவற்றை பழக்குவது சாத்தியமாகும். அந்த வகையில் தமிழரின் பாரம்பர்யத்துடன் கலந்துவிட்ட யானை, கோயில் வழிபாட்டில் இன்றியமையாத ஒன்றாகும்.

யானைகள் தினம்
யானைகள் தினம்

மயூரநாதர் கோயில் பாகன் வினோத்திடம் பேசினோம்.

"யானைகுழந்தையைப் போல பழகும் தன்மை படைத்தது. இக்கோயிலுக்கு ஐம்பது ஆண்டுகளாக யானை உள்ளது. மூன்று தலைமுறைகளாக யானையுடன் பழகி வந்துள்ளோம்.

வைத்தீஸ்வரன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு யானைகள் இல்லாத நிலையில், அவற்றை வாங்கித்தர பெரும் தனவந்தர்கள் தயாராக இருந்தாலும், தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் உள்ளது. பழங்காலத்தில் மாபெரும் ஆலயங்களை கட்டியபோது, மனிதர்களுக்கு ஈடாக யானைகளின் உழைப்பும் இருந்திருக்கிறது.

உலக யானைகள் தினமான இன்று எங்கள் அவையாம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்துள்ளோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு