Published:Updated:

தந்தம், தோல், ரோமம், நகம்... எல்லாமே கோடிகள்! - யானைக் கடத்தல் பயங்கரம் #ExtricateElephants

Elephant
Elephant ( Vikatan )

உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோதப் பொருள்களில் போதைப்பொருள் முதலிடத்தில் இருக்கிறது. ஆயுதக் கடத்தல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருப்பவை யானைத் தந்தங்கள்.

யானை, பெயரில் மட்டும் பிரமாண்டம் இல்லை. அதை அடிப்படையாக வைத்து உலகில் நடக்கும் கடத்தலும் வியாபாரமும் கூட மிகப்பெரியவைதான். உணவுக்காக மட்டுமே ஓர் உயிரினம் மற்றொரு உயிரினத்தைக் கொல்லும். ஆனால், மனித இனம் மட்டுமே, பணத்துக்காகவும் மற்ற உயிரினங்களைக் கொல்கிறது. இதில், அதிகம் பாதிக்கப்படுவது யானைகள். `யானை இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற வாசகம் பள்ளிகளில் இன்றைக்கும் சொல்லித் தரப்படுகிறது. ஓர் உதாரணத்துக்காகச் சொல்லப்படும் அந்த வாக்கியத்துக்குப் பின்னால் உள்ள அரசியல் மிகக்கொடூரமானது.

ஆப்ரிக்க யானையின் தந்தம்
ஆப்ரிக்க யானையின் தந்தம்

யானை, நாம் என்ன சொன்னாலும் செய்யும் என்று கண்டறிந்த மனிதன், அடுத்து யானையை வைத்துக் காசு பார்க்கத் தொடங்கினான். அந்தச் சில்லறை வருமானம் போதாது என்று யோசித்தவன், யானைகளைக் கொன்று லட்சங்களில் வியாபாரம் பார்க்கத் தொடங்கினான். இந்த வியாபார சிந்தனைதான், யானை என்கிற உயிர் கடத்தல் தொழிலை உச்சத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோதப் பொருள்களில் போதைப்பொருள் முதலிடத்தில் இருக்கிறது. ஆயுதக் கடத்தல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருப்பவை யானைத் தந்தங்கள். கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை, யானைத் தந்தம் என்கிற பெயரே ஒரு போதைப் பொருள்தான். இதற்காக ஆண்டுக்கு 25,000 முதல் 50,000 யானைகள் கொல்லப்படுகின்றன. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான வர்த்தகம் சுமார் 19 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெறுகின்றன.

மலேசியா சுங்கத்துறை பறிமுதல் செய்த தந்தங்கள்
மலேசியா சுங்கத்துறை பறிமுதல் செய்த தந்தங்கள்

2016-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி. மலேசியாவிலிருந்து, சீனாவுக்குப் பொருள்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலை வியட்நாமில் உள்ள ஹய்போங் துறைமுகத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, `கடல் சிப்பிகள்' என எழுதி ஒட்டப்பட்டிருந்த ஒரு கன்டெய்னரை திறந்து பார்த்தனர். உள்ளே யானைத் தந்தங்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அந்தக் கன்டெய்னரை பறிமுதல் செய்து, சுமார் 2,000 கிலோ தந்தங்களைக் கைப்பற்றினர். 2009-ம் ஆண்டு இதே துறைமுகத்தில் தான்சானியா நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 7 டன் யானைத் தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து கென்யாவுக்குக் ‌கடத்தி வரப்பட்ட 40,000 தந்தங்களைக் கென்யா அரசு பறிமுதல் செய்தது. 2011 ஜூலை 21-ம் தேதி சுமார் 5 டன் எடையுள்ள அந்தத் தந்தங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்து, தீ வைத்துக் கொளுத்தினார் கென்யா அதிபர் மிவாய் கிபாகி.

2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் 7-ம் தேதி மலேசியாவிலிருந்து ஹாங்காங் துறைமுகத்துக்கு வந்த கப்பலில் ஒரு கன்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுமார் 7.2 டன் எடையுள்ள யானைத் தந்தங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய். உலகிலேயே ஒரே இடத்தில் அத்தனை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது அங்குதான். அதற்கு முன்னர் 2002-ம் ஆண்டு, சிங்கப்பூரில் 7.1 டன் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இப்படிக் கைப்பற்றப்படும் கன்டெய்னர்களில், யானைத் தந்தங்களை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற எந்த விவரங்களும் இருப்பதில்லை.

கென்யா அரசு தீயிட்டு கொளுத்திய தந்தங்கள்
கென்யா அரசு தீயிட்டு கொளுத்திய தந்தங்கள்
மனிதன் - யானை மோதலுக்குத் தீர்வு கண்டுபிடித்த 9-ம் வகுப்பு மாணவன்! #CelebrateElephants

யானைத் தந்தங்கள் கடத்தல் தொழிலில் மலேசியாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. பினாங்கு, கிள்ளான், பாசிர் கூடாங் துறைமுகங்கள் வழியாகத்தான், பெரும்பாலும் உலகம் முழுக்க யானைத் தந்தங்கள் அனுப்பப்படுகின்றன. ஜனவரி 2003 முதல் மே 2014 வரை 63,419 கிலோ தந்தங்கள் 66 முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டவைதான் அதிகம்.

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் நீல் கோலிங்ஸ் என்பவர் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் இரண்டு நபர்கள் யானையை வேட்டையாடும் காணொளியைப் பதிவு செய்திருந்தார். அந்தக் காணொலி, உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. நமீபியாவின் வடகிழக்குப் பகுதியில் எடுக்கப்பட்ட அந்தக் காணொலி, வெளியானபோது யானை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கடத்தல்காரர்கள் யானையை மட்டும் வேட்டையாடுவதில்லை... வேட்டையைத் தடுக்க நினைக்கும் மனிதர்களையும் வேட்டையாடுகிறார்கள்.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் யானைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணம். தந்தங்கள், தோல், பற்கள், ரோமம், நகங்கள் எனப் பல காரணங்களுக்காக வேட்டையாடப்படும் யானைகளைக் காக்கப் பலரும் போராடி வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் வைன் லாட்டர். தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர். யானைகள் வேட்டை தொடர்பாகத் தீவிரமாக இயங்கியவர். சர்வதேச ரேஞ்சர் கூட்டமைப்பு துணைத் தலைவராக இருந்தவர். அவரும் அவரது நண்பர் க்ரிஸ்ஸி க்ளார்க்கும் பல ஆண்டுகளாக வன உயிரினங்களுக்காகப் பணியாற்றியவர்கள். 2009 - 2014 ஆண்டுகளில், தான்சானியா அதன் யானைகளில் 60 சதவிகிதத்தை இழந்தது. அதிர்ச்சியுற்ற இருவரும் யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்காகப் பாம்ஸ் (Protected Area Management Solutions) என்ற அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் வனம் சார்ந்த விழிப்புணர்வையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்கள்.

பல இடங்களில் காடுகளைப் பாதுகாக்கும் ரேஞ்சர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தனர். குறிப்பாக யானைகளைப் பாதுகாக்கும் ரேஞ்சர்களை மிக அதிகளவில் உருவாக்கினார்கள். காவல்துறை மற்றும் ஒரு சிறப்புப் படையினருடன் இணைந்து வேட்டை மற்றும் கடத்தல் நெட்வொர்க்குகளை அடையாளம் கண்டனர். கண்டறியப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காகப் பல தரப்புகளிலிருந்தும் எச்சரிக்கைகளும் கொலை மிரட்டல்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால், லாட்டர் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் யானைகள் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து பணியாற்றினார். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 புதன்கிழமை தான்சானியாவின், டார் எஸ் - சலாம் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் பயணம் செய்தபோது, லாட்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது? #DoubtOfCommonman
wayne lotter
wayne lotter
ஆப்ரிக்க யானைகளைப் பாதுகாப்பதற்காக மிகவும் கடினமாகப் போராடிய உண்மையான பாதுகாப்புப் படையை நாங்கள் இழந்தோம்.
லியானார்டோ டிகாப்ரியோ

ஆப்பிரிக்க காடுகளில் 2013-ம் வருடம் மட்டும் 20,000 யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யானைத் தந்தம் என்பதைத் தாண்டி அதிர்ச்சியூட்டும் மற்றொரு விஷயம், யானைகளின் தோல் பிரித்தெடுக்கப்படுகிறது என்ற செய்திதான். தந்தங்களுக்காக வேட்டையாடிய காலம் போய், தோலுக்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக, மியான்மர் நாட்டில் இது அதிகளவில் நடைபெறுகிறது. மியான்மரில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்கின்றன. 'யானைத் தோல்' கள்ளச்சந்தைகளில் புழங்கி வந்தாலும், மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால், மிகச் சமீபமாக அவை அதிகமாகியிருக்கின்றன. யானைகளின் தோல், மனிதர்களின் தோல் நோய்களுக்கான சிறந்த மருந்தாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மியான்மரின் ரங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களிலிருந்து தொடங்கும் கடத்தல் பயணம் லஷியோ, மியூஸ் வழியாகச் சீனா, தாய்லாந்து நாடுகளைச் சென்றடையும். மொத்தம் 4 எல்லைகளைக் கடந்து, இதைச் செய்கிறார்கள். யானைத் தோல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒருங்கிணைந்த குழுவாகச் செயல்படுகிறார்கள். இந்தக் கும்பலைக் கட்டுக்குள் கொண்டுவர உலகளவில் பல நாடுகளும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. ஆனாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

யானை தோல்
யானை தோல்
`இரவு முழுவதும் முகாம்.. உள்காயம்.. நெஞ்சை உலுக்கிய புகைப்படம்'-பரிதாபமாக உயிரிழந்த மேற்குவங்க யானை!

உலகச் சந்தையில் யானைத் தந்தத்துக்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூடத் தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. இவற்றுக்காகவும், பாரம்பர்ய மருத்துவப் பொருள்களுக்காகவும் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. பெரும்பாலான விலங்குகளின் அழிவுக்கும் காரணமாய் இருக்கிற சீன அரசு யானை அழிவுக்கும் காரணமாகவே இருக்கிறது. ஆனால், தற்போது யானைகள் அழிவில் அக்கறை கொண்ட சீன அரசு, 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தந்தங்கள் விற்பனை செய்வதை அதிகாரபூர்வமாகத் தடை செய்திருக்கிறது.

1986-ம் வருடம் தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்தது. ஆனாலும் கள்ளச்சந்தையில் அவை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. யானை என்கிற பெயருக்குப் பின்னால் இருக்கும் அரசியலும் அதற்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் பல அத்தியாயங்களைக் கடக்கும். தந்தங்களுக்காகக் கொல்லப்பட்ட யானைகளைப் போலக் கொல்லப்பட்ட மனிதர்களும் அநேகம்.

கொல்லப்பட்ட யானை உடல்
கொல்லப்பட்ட யானை உடல்
Nat Geo
70 குண்டுகள்; தந்தத்துக்கான வேட்டை! - கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆண் யானை

ஆப்பிரிக்காவில் ஆண் யானைகளுக்குத் தந்தங்கள் பெரிதாக இருக்கும் என்பதால், கடந்த காலங்களில் அவையே அதிகம் வேட்டையாடப்பட்டன. இதனால், ஆண் - பெண் யானைகளுக்கான பாலின விகிதம் குறைந்தது. மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சி முடிவு, ஆப்பிரிக்காவில் சமீபகாலங்களில் பிறக்கும் யானைக் குட்டிகள் 6% வரை தந்தங்கள் இல்லாமல் பிறப்பதாகச் சொல்கிறது. யானைகளுக்கு எதிராக மனிதர்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக இயற்கையாக விளைந்த ஒரு `பரிணாம வளர்ச்சி' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறக்கின்றன. ஆப்பிரிக்க யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பன்னாட்டு விலங்குகள் நல அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன. இவற்றில், ஆப்பிரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிக்கைகளுடன் இவை தோற்றமளிக்கும். தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு