Published:Updated:

கடித்தவுடன் வெடிக்கும்... யானைகளை பலிவாங்கும் பன்றிக்காய்! #ExtricateElephants #வேழம்காப்போம்

வசிம் கும்கி யானை
வசிம் கும்கி யானை

மனிதன், மற்ற உயிர்களைக் கொல்வதற்கும், அவற்றிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் அவற்றின் பசியையே மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.

கானுயிரில், பேருயிர் யானை. எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் உயிரினம். வனங்களில் வலசைப் பாதைகள் அமைத்துக்கொண்டு சுதந்திரமாகச் சுற்றித்திரியும் அற்புத விலங்கு. ஆனால், சமீப காலமாக, யானைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது. அதன் வலசைப் பாதைகள், கட்டடங்கள், தண்டவாளங்கள் போன்றவற்றால் தடைப்பட்டுக் கிடக்கின்றன. நாம் போகும் பாதை ஏதோ ஒரு காரணத்தால் மறிக்கப்பட்டிருந்தால் மாற்றுப்பாதையில் போவோம் அல்லவா? அப்படித்தான் யானைகளும் மாற்றுப் பாதைகளைத் தேர்வு செய்கின்றன. அந்தப் பாதைகள் குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள் வழியாகச் செல்கின்றன. இதில் யானையின் பிழை என்ன? பாதையை ஆக்கிரமித்த மனிதர்கள்தானே குற்றவாளிகள்?

கூடலூரில் இறந்த யானை
கூடலூரில் இறந்த யானை

தவறு செய்யும் மனிதன், தண்டனையை யானைக்கு அளிக்கிறான். தீ வைத்தார்கள்; மின்சாரக் கம்பி வைத்தார்கள்; துப்பாக்கியில் சுட்டார்கள்; குழி பறித்தார்கள்; இன்னும் பல வழிகளில் யானைகளுக்குத் தண்டனை தருவதில் மகிழ்கிறார்கள் சில மனிதர்கள். உண்மையில் உலகத்தில் இருக்கும் ஜீவன்களில் யானைகள் அளவிற்குத் துயரத்தைச் சந்தித்த ஓர் உயிரினம் வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறன். வழி மாறி, மலைக்கிராமங்களுக்குள் புகுந்துவிடும் யானைகளை விரட்டப் பட்டாசுகள் வெடிக்கிறார்கள். தீயைக் கொளுத்திப் போடுகிறார்கள். இப்போது யானைகளுக்கு அதுவும் பழகிவிட்டது.

'அட... இதைப் பார்த்துப் பயப்படவில்லையே... வேறு எப்படி யானைகளை விரட்டுவது' என யோசித்தவர்களுக்குக் கிடைத்த ஆயுதம்தான் பன்றிக்காய். அதன் மற்றொரு பெயர் “அவுட்டுக்காய்”

'பன்றிக்காய்' என்பது வெடிபொருள் நிரப்பிய ஒரு பந்து. அழுத்தம் ஏற்பட்டால் வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் பன்றிகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். அதனால்தான் 'பன்றிக்காய்' என்று பெயரே வந்தது. காட்டுப்பன்றிகள் கடிக்கும்பொழுது ஏற்படும் அழுத்தத்தால் காய் வெடிக்கும். வாயில் இருக்கும்பொழுது வெடிப்பதால் பன்றியின் தலை சிதறி அதே இடத்தில் இறந்துவிடும். இதுதான் பன்றிக்காயின் நடைமுறை.

தேயிலை தோட்டத்தில் விழுந்து இறந்த யானை
தேயிலை தோட்டத்தில் விழுந்து இறந்த யானை

எந்த ஒரு ஜீவனுக்கும் வாழ்வாதாரமே அதனுடைய வாய் பகுதிதான். பின் விளைவுகள்பற்றி சிறிதும் யோசிக்காமல், அதிலும் கை வைத்தது மனித இனம். மனிதன், மற்ற உயிர்களைக் கொல்வதற்கும், அவற்றிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் அவற்றின் பசியையே மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். யானைகள் பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் முதலில் அதைக் காலில் உருட்டிப் பார்த்தும், முகர்ந்து பார்த்தும், சோதித்த பிறகே உணவாக எடுத்துக் கொள்ளும்.

யானைகள் பலாப்பழங்களை மரத்திலிருந்து பிடுங்கி உண்பதைப் பார்த்திருக்கிறீர்களா? யானைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் பலாப்பழத்தை ஓரிரு நிமிடங்கள் பார்க்கும் யானை, அதைப் பறிப்பதற்கு தன்னுடைய முன் கால்களைத் தூக்கி, மரத்தில் வைத்து, தும்பிக்கை உதவியுடன் பிடுங்கி எடுக்கும். பின்னர் காலில் போட்டோ அல்லது தும்பிக்கையால் பிளந்தோ சாப்பிட்டு விட்டுப் போகும். அதனுடைய கழிவுகளில் கிளறிப் பார்த்தால் பலாப் பழத்தின் கொட்டைகள் எந்தச் சேதாரமுமின்றி இருக்கும்.

நீலகிரி மலை சரிவில் யானைகள்
நீலகிரி மலை சரிவில் யானைகள்
யானையை அவ்வளவு எளிதில் பன்றிக்காயைப் பயன்படுத்தி வீழ்த்திவிட முடியாது என்பது மனிதனுக்கும் தெரியும்.

மரத்திலிருந்து பலாப்பழத்தை ஆசை ஆசையாய் பிய்த்து எடுக்கிற யானை, அதைக் காலில் போட்டு மிதித்து இரண்டாகப் பிளக்கும். அதன் ஒரு பகுதியை அப்படியே எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். இதைக் கவனித்த மனிதன், பலாப்பழத்தின் உள்ளே பன்றிக்காயை மறைத்து வைத்தான். யானை பலாப்பழத்தைக் கடித்தவுடன், அதிக அழுத்தத்துடன் காய் வெடிக்கும். வாய் மற்றும் தாடை கிழிந்த நிலையில் வலியோடு ஓடத் தொடங்கும். வாயில்லாத ஜீவனால் பிளிறவோ, தண்ணீர் அருந்தவோ, உணவு எடுக்கவோ கூட முடியாமல் போய்விடும். யானையின் வலியை, எழுத்தில் எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம், ஆனால் துயரத்தையும், துரோகத்தையும் சொல்ல ‘கொடூரம்’ என்ற ஒரு சொல்லே போதுமானது. தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய வரலாறுகளிலும், தனக்கெனத் தனி இடம் பிடித்த யானைகளின் இன்றைய நிலை இதுதான்.

வலியின் வீரியத்தால் ரத்தம் சொட்டச் சொட்ட யானை வனத்திற்குள் திரியும். காயம்பட்ட முதல் நாள் என்ன நடந்தது என்றே தெரியாமல் வலியோடு நடந்து கொண்டிருக்கும். இரண்டாவது நாள்தான் நமக்கு ஏதோ நடந்திருக்கிறது எனப் புரியத்தொடங்கும். முதல் நாள் எப்படியோ சமாளித்து விடும் யானை, இரண்டாவது நாளிலிருந்து உயிர் வாழ்வதற்கான போராட்டத்தைத் தொடங்கும். உடல் இளைத்து, பிம்பம் உடைந்து, கண்கள் சுருங்கி, மிகப்பெரிய அந்த உருவம் அதன் இயல்பைத் தொலைக்கத் தொடங்கும்.

முதலில் தண்ணீருக்காக ஏங்க ஆரம்பிக்கும். தண்ணீர் கண் முன்னே இருந்தாலும் அருந்திவிட முடியாத அளவிற்குக் காயம் ரணமாக மாறிவிடும். இனி பிழைக்கவே முடியாது என்கிற நிலையில் சரிந்து விழுந்துவிடும். ஒருவேளை வனத்துறை யானையைக் கவனித்து சிகிச்சை அளித்தால் காப்பாற்றிவிடலாம். ஆனால், துரதிஷ்டவசமாகக் காயம்பட்ட யானையை வனத்துறையால் கண்டுபிடிக்க முடிவதில்லை. காரணமானவர்களையும் கண்டுபிடிக்க முடியாது.

யானைகள் இறப்பு
யானைகள் இறப்பு
Vikatan Infography

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டாரத்தில் பன்றிக்காய் பாதிப்பால் மட்டுமே 4 யானைகள் இறந்திருக்கின்றன. உள்ளூர் மக்கள் யானையின் இறப்பிற்கு பன்றிக்காய்தான் காரணமெனச் சொல்கிறார்கள். யானை, பன்றிக்காய் மறைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழத்தை எந்தத் தோட்டத்தில் வைத்துக் கடித்தது என்பதைக் கண்டறிந்தால் மட்டுமே காரணமானவர்களைத் தண்டிக்க முடியும். அது அவ்வளவு சுலபமில்லை. யானை விழுந்து கிடந்த இடத்தை வைத்து மட்டுமே யார் வைத்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. வேறு எங்கோ பாதிக்கப்பட்ட யானை நடக்க முடியாத நிலையில்தான் வேறு இடத்தில் விழுந்து விடுகிறது. இப்போது வரை வனத்துறையும் யானைகள் இறப்பை மர்ம மரணம் என்றே குறிப்பிட்டு வருகிறது.

சில ஆண்டுகளாகவே யானைகளுக்கும் மனித இனத்துக்குமான போராட்டம் தொடங்கிவிட்டது. யானைகளுக்காகப் போராடிய இனம், இப்போது யானைகளோடு போராடிக் கொண்டிருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைவிட யார் அழிந்து போவார்கள் என்பதே பெரும் கேள்வியாக நிற்கிறது.

அடுத்த கட்டுரைக்கு