Published:Updated:

6 ஆண்டுகளில் 2,330 யானைகள் பலி... யார் காரணம்!- விரிவான அலசல்! #ExtricateElephants

ஆசிய யானை
ஆசிய யானை ( Pixabay )

'இந்த உலகம் மனிதனால் ஆனது. மனிதத் தேவைகளுக்கு அடுத்ததுதான் மற்றவற்றின் தேவைகள்' என்பதுதான், மனிதர்களின் எண்ணமாகிப் போனது. அத்தகைய எண்ணத்தை விதைக்கும் வகையில்தான் நமது சமுதாய அமைப்புகளும், அரசாங்கமும் செயல்படுகின்றன.

இந்தியாவில் யானைகள் அதிகமாக இருக்கின்றனவா?

இது, சமீப காலமாக அதிக விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கும் கேள்வி. யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருபுறமும், பிரச்னை யானைகளின் எண்ணிக்கையல்ல, அவற்றுக்குப் போதிய வாழிடம் இல்லாததுதான் என்று இன்னொரு புறமும் நின்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் காட்டுயிர் ஆர்வலர்கள். சரி, உண்மையில் யானைகளின் நிலை என்ன?

மரணம்
மரணம்

எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமா? வாழிடத்தை அதிகரிக்க வேண்டுமா?

இந்த விவாதத்திற்குத் தீர்வுகாண நாம், முதலில் ஒன்றைச் செய்தாக வேண்டும். 'மனிதத் தேவைகளுக்கு அடுத்ததுதான் மற்றவற்றின் தேவைகள்' என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதன் - யானை இரண்டு தரப்பிலும் அலசிப் பார்ப்போம்.

எண்ணிக்கை என்று வரும்போது, இரண்டு தரப்பையுமே நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். முதலில் யானை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் காடுகளில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்தன. 2017-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 27,000 யானைகள் இருந்தன. 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பு, தோராயமாக 31,368 யானைகள் இருப்பதாகச் சொல்கிறது. சரி, மக்கள் தொகை?

1971-ம் ஆண்டு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 177 பேர் இருந்தார்கள். 2011-ம் ஆண்டு, ஒரு சதுர கி.மீ-க்கு 382 பேர் வாழ்கிறார்கள். ஒரு நூற்றாண்டில் யானைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. அதே நேரம், அரை நூற்றாண்டில் மக்கள் தொகை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளில் 2,330 யானைகள் இறந்துள்ளன. அதில் மின்சாரம், ரயில் விபத்து, விஷம் வைத்தல், வேட்டை போன்றவற்றால் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான யானைகள் கொல்லப்பட்டுள்ளன. மற்றவை, போதிய வாழிடமின்றி இறந்தவை. அதேநேரம் மனிதர்களில் 2,398 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். இரண்டு பக்கமுமே அதிகளவில் சேதங்கள் நிகழ்கின்றன.

இதற்குக் காரணம் என்ன?

யானைகள்
யானைகள்
Pixabay
யானை டேட்டா
இந்தியாவில் 101 யானை வழித்தடங்கள் உள்ளன.
யானை மந்தைகள் ஆண்டுக்குச் சுமார் 350 முதல் 500 சதுர கி.மீ வரை உணவுக்காகப் பயணிக்கின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளில் 2,330 யானைகள் இறந்துள்ளன.
70 சதவிகிதத்துக்கும் அதிகமான யானைகள் மின்சாரம், ரயில் விபத்து, விஷம் வைத்தல், வேட்டை போன்றவற்றால் கொல்லப்பட்டுள்ளன.

யானை மந்தைகள் ஆண்டுக்குச் சுமார் 350 முதல் 500 சதுர கி.மீ வரை உணவுக்காகப் பயணிக்கின்றன. அப்படிப் பயணிக்க ஏதுவாக இருப்பவைதான் யானை வழித்தடங்கள். அந்த வழித்தடங்கள் அடைக்கப்படுவதால், ஆக்கிரமிக்கப்படுவதால் குறுகிய வட்டத்திற்குள்ளேயே மேய்ந்தாக வேண்டிய சூழலுக்கு அவை வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகின்றன. இந்தியாவில் 101 யானை வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்கள் வடக்கே உத்தரகாண்ட் வரையிலும், கிழக்கே வியட்நாம் வரையிலும் யானைகள் பயணிக்க உதவுகின்றன.

தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 70 சதவிகித வழித்தடங்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுபவை. ஆனால், அவற்றில் 74 சதவிகித பாதைகள் ஒரு கி.மீ-க்கும் குறைவாகச் சுருக்கப்பட்டுவிட்டன. தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து பெரிய பெரிய கட்டுமானங்கள், நிறுவனங்கள் என்று பலவற்றாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. ஆசிய யானைகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலிருந்தது. மேலே சொன்ன காரணங்களால் ஆசிய யானைகளின் இறப்பு விகிதத்திலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.

யானைகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் பல இடங்களில் மீறப்படுகிறது. விபத்துகளும், மின்சாரத் தாக்குதல்களும் அவற்றை அதிகமாகக் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திலுள்ள நெல்லித்துறையில் விதிகளை மீறி அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய யானை உயிரிழந்தது. அந்த மாதத்தின் தொடக்கத்தில் சிறுமுகையில் ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கடந்த மாதம் மதுக்கரையில் மின்சார வேலியில் சிக்கி ஒரு யானை உயிரிழந்தது. இப்படியான யானை மரணங்கள், கடந்த வாரம் கிருஷ்ணகிரி அருகே தென்கனிக்கோட்டையில் மின்சாரத்தால் உயிரிழந்த யானை வரை தொடர்கிறது.

வடகிழக்கு மாநிலங்கள் வளமான காடுகளையுடையவை. 2018-ம் ஆண்டின் முதல் பத்து மாதங்களிலேயே 38 யானைகள் இறந்தன. ஒவ்வோர் ஆண்டும் இறக்கக்கூடிய யானைகளின் எண்ணிக்கையில் அது 47.5 சதவிகிதம்.

அதிகளவில் யானைகளைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம், கேரளா. 2012-ம் ஆண்டு அங்கு 6,177 யானைகள் இருந்தன. இப்போது, 5,706 யானைகளே இருக்கின்றன. யானைகளுடைய எண்ணிக்கையையும் அவற்றின் இறப்பு விகிதத்தையும் பார்க்கையில் அவை அதிகச் சேதங்களைச் சந்திப்பது புரிகிறது.

யானை டேட்டா
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் காடுகளில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்தன.
2017-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 27,000 யானைகள் இருந்தன.
2019-ம் ஆண்டு கணக்கெடுப்பு, தோராயமாக 31,368 யானைகள் இருப்பதாகச் சொல்கிறது.

பழங்குடிகள் மற்றும் காடுசார்ந்து வாழும் மக்கள், 'காடு யானைகளின் இடம். அவை எடுத்துக்கொண்டது போக மீதிதான் நமக்கு' என்று நினைக்கிறார்கள். ஆனால், வனங்களை ஒட்டிய பகுதிகளில் வாழும் விவசாயிகளும் சாதாரண மக்களும் யானைகளின் இறப்பைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பயிர்களை அழிக்கும் பூச்சிகளும், யானையும் ஒன்று தான். ஒரு ஏக்கர் வாழை மகசூலில் பாதியை யானைகள் தின்றுவிடுவதால், பாதி விளைச்சல் தான் கிடைக்கிறது. அதனால் அவர்கள் யானையை எதிரியாகத்தான் பார்ப்பார்கள். பயிர்ச் சேதம் மட்டுமின்றி, உயிர்ச் சேதங்களும் சேர்ந்து விளையும்போது மேலும் கோபம் அதிகமாகிறது.

Elephant
Elephant
Pixabay

கூடலூர் அருகே, பந்தலூரில் ஐயன்கொல்லி என்ற பகுதியில் 32 வயதான அசோக் என்பவரை யானை மிதித்ததை அவரது ஏழு வயது மகள் நேரில் பார்த்துள்ளார். அந்தப் பிஞ்சு மனது யானையை எதிரியாகத்தான் பார்க்கும். இப்படி எத்தனையோ குழந்தைகள் தங்கள் தந்தையை, தாயை இழந்திருக்கிறார்கள். எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். காடு ஓரங்களில் வாழும் மக்கள், கடந்த பத்து வருடங்களாகத் தங்கள் இரவுகளைப் போராடித்தான் கடக்கிறார்கள்.

உண்மையிலேயே காடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதா? எண்ணிக்கை அதிகமானதால்தான் காடுகளுக்குள் போதிய உணவின்றி ஊருக்குள் வருகின்றனவா?

யானைகளின் 74 சதவிகித பாதைகள் ஒரு கி.மீ-க்கும் குறைவாகச் சுருக்கப்பட்டுவிட்டன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு யானைகளுக்கு இருந்த வாழ்விடம் இப்போது இல்லை என்பதுதான் உண்மை. அவை ஏன் அவ்வளவு ஆபத்துகளையும் கடந்து மீண்டும் மீண்டும் ஊருக்குள் வருகின்றன என்பது முக்கியமான கேள்வி. அதற்கான ஒரே பதில் உணவு. யானை-மனித எதிர்கொள்ளல் நடப்பதற்குக் காரணமும் அதுதான். அவை காடு விட்டுக் காடு பயணித்து தேவையான உணவை எடுத்துக்கொள்ள முடியாத நிலை. காட்டைவிட்டு இடம்பெயர முடியாத சூழலில், அருகில் வேறு எங்கு உணவு கிடைக்கிறது என்று தேடுகின்றன.

காட்டுக்குள் கிடைக்காத சூழலில், அதன் ஓரங்களில் பலா, வாழை, சோளம் என்று ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் கிடைப்பதால் எவ்வளவு ஆபத்து இருந்தாலும் உணவுக்காக அவை அங்கு வந்துவிடுகின்றன. தன்னுடைய வழித்தடங்களை ஆக்கிரமிப்புகள் மறித்து விட்டன. உணவுக்காக, நீருக்காக போராடி அதைக் கடந்து போகவேண்டும். முடியாத நிலையில் வேறு வழியைக் கண்டுபிடித்துப் போகவேண்டுமென அவற்றின் உள்ளுணர்வு உந்தும். அதற்குக் காரணம், பசி. வழித்தடங்களில் கட்டுமானங்கள் இருந்தால், அதைக் கடந்து போக முடியாத அளவுக்கு அரண் அமைத்திருந்தால் அருகிலிருக்கும் ஊர் வழியாகப் பயணித்துப் போக முயல்கின்றன. உணவுக்காகவும் நீருக்காகவும் தவிர வேறு எதற்காகவும் யானைகள் இத்தகைய அபாயங்களை வலிந்து சந்திப்பதில்லை.

ஆசிய யானைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.
யானை வழித்தடம்
யானை வழித்தடம்
Quartz

ஆம், யானைகளுடைய வாழிடங்களும் வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்படுவதே யானை-மனித எதிர்கொள்ளலுக்கு முக்கியக் காரணம். வேதனை என்னவென்றால், இத்தகைய ஆக்கிரமிப்புகளைச் செய்யும் நிறுவனங்களோ, அமைப்புகளோ இந்தப் பேருயிர் ஏற்படுத்தும் சேதங்களுக்குப் பலியாவதில்லை. பலியானவர்கள் அனைவருமே சாதாரண கிராமத்து மக்கள்தான். காபித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், கல் குவாரிகள், சுரங்கங்கள், ரயில்வே பாதைகள், கட்டுமானங்கள் என்று பலவும் தங்கள் வழித்தடத்தை நிரப்பியிருக்கையில் யானைகளும் வேறு வழியின்றி அபாயமென்று தெரிந்தே காலடி எடுத்து வைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றன.

இதை விட்டால் யானைகளுக்கும் வேறு வழி தெரியவில்லை. சிக்கியிருக்கும் காட்டில் இருக்கும் அத்தனைத் தாவரங்களையும் தின்று தீர்த்து, பாலைவனமாக்கித் தானும் பட்டினியில் இறக்கவேண்டிய சூழலைத் தவிர வேறு வழியில்லை.

தென்னிந்தியாவில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை ஒட்டியே ஈஷா யோகா நிறுவனம் அமைந்திருக்கிறது. ஈஷா யோகா அமைப்பு 1994 முதல் 2008 வரை பூலுவபட்டி கிராமத்தில் சுமார் 32,856 சதுர அடி பரப்பளவில், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் (Hill Area Conservation Authority) அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியிருப்பதாக, இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை 2018-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

CAG Report
CAG Report

மலைகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் எந்த வளர்ச்சித் திட்டம் வரவேண்டுமென்றாலும் காடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த ஆணையத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

download
காட்டுயிர் வளம்
காட்டுயிர் வளம்
Pixabay

தென்-மேற்கிலுள்ள பூலுவபட்டி-அட்டப்பாடி யானை வழித்தடத்திலேயே இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளாவிலுள்ள அமைதிப் பள்ளத்தாக்கிற்குச் செல்லும் யானைகளுக்கான முக்கியப் பாதையும் இதுதான்.

அதிகளவில் யானைகளைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம், கேரளா. 2012-ம் ஆண்டு அங்கு 6,177 யானைகள் இருந்தன. இப்போது, 5,706 யானைகளே இருக்கின்றன.

கோயம்புத்தூரில் இதுபோல, அம்ரிதா, விஷ்வ வித்யபீத் பல்கலைக்கழகம், காருண்யா பல்கலைக்கழகம், கார்ல் குபெல் நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று வழித்தடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுவதாக, 2018-ம் ஆண்டு IndiaSpend என்ற இதழுக்குக் கோயம்புத்தூர் வனச்சரகம் கொடுத்த தரவுகள் சொல்கின்றன. இவைதவிர, 190 செங்கல் சூளைகளும் தடாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மனிதர்கள், கேரளா, தமிழ்நாடு, கோவா என்று காடுகளைப் பிரிக்கலாம். ஆனால், யானையைப் பொறுத்தவரை மொத்த மேற்குத்தொடர்ச்சி மலையுமே காடுதான்.
யானை வழித்தடம்
யானை வழித்தடம்
Quartz

காடுகளில் அவை எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பயணிக்கும். அவற்றின் அவ்வளவு பெரிய வீட்டிற்குள் புகுந்து, துண்டாக்கி அவற்றைக் கைதிகளைப் போல் சிற்சில பகுதிகளோடு சுருக்கிவிட்டோம். அதனால் ஏற்பட்ட வாழிடத் துண்டாக்குதலே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம்.

காடுகளையும் அவற்றின் தொடர்புகளையும் பாதுகாப்பதோடு, இழந்தவற்றை மீட்டுருவாக்குவதே யானை-மனித எதிர்கொள்ளலுக்குச் சரியான தீர்வாக இருக்கமுடியும். அரசும் அதிகாரிகளும் காடுகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாழிடங்களை மீட்டுருவாக்க வேண்டும்.

யானைகள் இழந்த வாழிடங்களை அவற்றுக்கே மீட்டுத்தர வேண்டும். அது சாத்தியமாகும் நாள்தான், யானைகளின் எண்ணிக்கை உயர்கிறதா, என்பதை நாம் விவாதிக்கச் சரியான நேரமாக இருக்கமுடியும்.

போதுமான காடு இல்லையென்றால், உணவுக்காக ஊருக்குள் ஊடுருவுவது தொடரும். யானை, மனிதர் இருபுறமும் சேதங்கள் அதிகமாகத்தானிருக்கும். அதற்குக் காரணம் யானைகளின் எண்ணிக்கையல்ல, மனிதர்கள் செய்த ஆக்கிரமிப்பு!

` சின்னத்தம்பியால் எனக்கு ஏற்பட்ட இழப்பு!' - விருது பாரபட்சத்தால் கலங்கும் `யானை டாக்டர்' அசோகன்
அடுத்த கட்டுரைக்கு