Published:Updated:

மனிதன் - யானை மோதலுக்குத் தீர்வு கண்டுபிடித்த 9-ம் வகுப்பு மாணவன்! #CelebrateElephants

Elephants
Elephants

யானைகள் வீட்டுக்குள் வருவதைத் தடுக்க அற்புதக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநவ நாகராஜன்.

மனிதர்களின் சுயநலம், இயற்கை சமநிலையைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. காடு, மலைகளை அழித்து, பல்லுயிர் பெருக்கத்திற்குக் கள்ளிப்பால் ஊற்றிவிட்டோம். காடுகளை அழித்ததால், அங்கே தங்களுக்கான வசதிகளுடன் சுற்றித் திரிந்த யானை உள்ளிட்ட விலங்குகள், வழி மாறி, உணவு, தண்ணீர் தேவைக்காகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையத் தொடங்கிவிட்டன.

Elephants
Elephants

இதனால், மனிதன் யானைகளைக் கொல்வதும், யானைகள் மனிதனைக் கொல்வதும் தொடர்கதையாகி விட்டது. கோயம்புத்தூர், ஊட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தகைய அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. மனிதன் - யானை மோதலைத் தடுக்கும் வழி தெரியாமல், குழம்பிக்கொண்டிருக்கிறது வனத்துறை.

இந்நிலையில், யானைகள் வீட்டுக்குள் வருவதைத் தடுக்க அற்புதக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநவ நாகராஜன் என்ற மாணவர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 9-ம் வகுப்பு படிக்கும் அபிநவ நாகராஜன், தனது ஆசிரியர் ராஜசேகரன் வழிகாட்டுதலுடன், யானை - மனிதர்கள் மோதலைத் தடுக்கும் நவீனக் கருவியை வடிவமைத்துள்ளார்.

அபிநவ நாகராஜன் தனது வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரனோடு...
அபிநவ நாகராஜன் தனது வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரனோடு...

மாணவரின் அந்த அசத்தல் கண்டுபிடிப்பை, சமீபத்தில் கோயம்புத்தூர் கொடிசியாவில் நடைபெற்ற தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். அந்தக் கருவி பலரது கவனத்தை ஈர்த்ததுடன், பலத்த பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறது.

அந்த கருவிகுறித்து, அபிநவ நாகராஜனிடம் பேசினோம்.

மனிதர்களாகிய நாம் இயற்கையைச் சிதைத்ததின் விளைவால்தான் இன்று யானைகளால் மனிதர்கள் தாக்கப்படும் செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியது மனிதர்கள் தான். யானைகள் என்ன செய்யும்?. காட்டை அழித்து, யானைகளின் வழிகளைச் சிதைத்த நாம்தான், பொறுமையாக அவற்றைக் கையாண்டு காட்டுக்குள் அனுப்ப வேண்டும். அதற்காக, நான் புதிய கருவியைக் கண்டுபிடித்திருக்கிறேன்.
- அபிநவ நாகராஜன்
அபிநவ நாகராஜன் தனது வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரனோடு...
அபிநவ நாகராஜன் தனது வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரனோடு...

"பொதுவாக, யானைகளின் கேட்கும் திறன் மிக அதிகம். நுண்ணிய ஒலியைக்கூடத் துல்லியமாக அறியக்கூடிய நுண்ணறிவு கொண்ட விலங்கு. அவை காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதற்குக் காரணம், அருகில் ஒலியில் ஏற்படும் மாற்றத்தை அறியவும், மற்ற யானைகளோடு தகவல்களைக் காற்றின் மூலம் பரிமாறிக் கொள்வதற்காகவும்தான். அடிப்படையில் யானைகள், தேனீக்களின் ரீங்கார ஒலியைக் கேட்டு அஞ்சக்கூடிய விலங்கு. தேனீக்களின் ரீங்கார ஒலியை 8 மீட்டர் தூரத்திலேயே உணரக்கூடியது யானை. தேனீயின் ரீங்கார ஒலியின் அதிர்வெண் 150 ஹெர்ட்ஸ் முதல் 200 ஹெர்ட்ஸ் வரை. அந்த ரீங்கார ஒலியை யானைகள் உணரும்போது, உடனடியாக அப்பகுதியிலிருந்து வேறு பகுதிக்குச் செல்லத் தொடங்கிவிடும்.

எனவே, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேனீக்களின் ரீங்கார ஒலியை உருவாக்கினேன். செயற்கை முறையில் சிறிய ஒலிபெருக்கி, தானியங்கி மூலம் நவீன சென்சார்களை கொண்டு இயங்கும் கருவியைப் பயன்படுத்தி, யானைகளால் ஏற்படும் தாக்குதலிலிருந்து பாதுகாக்கக்கூடிய கருவியை வடிவமைத்துள்ளேன். இக்கருவியைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். இக்கருவியை வீடுகள் மற்றும் சுற்றுச்சுவரில் பொருத்துவதன் மூலம், யானைகள்-மனிதர்கள் தாக்குதலை 100 சதவிகிதம் தடுக்கலாம்.

Elephant
Elephant

மேலும், நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய சி.சி.டி.வி கேமராக்களோடு இக்கருவியை இணைத்து, பல மீட்டர்கள் தொலைவில் வரும் யானைகளைக்கூடக் கண்டறிந்து மனிதர்கள் - யானை மோதலைத் தடுக்கலாம். இந்தக் கருவியைச் சிறிய வடிவில் கைக்கடிகாரம் போன்ற சிறிய அமைப்பில் வடிவமைத்தும், கையில் அணிந்து கொண்டால், மலைப்பகுதிகளில் யானைகளால் ஏற்படக்கூடிய தனிமனித தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்க முடியும்" என்றார்.

இந்த கருவிபற்றிப் பேசிய அபிநவ நாகராஜனின் வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரன், "இந்தக் கருவியைக் குடியிருப்பு பகுதியில் மட்டுமின்றி, தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளிலும் பொருத்தி, யானைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பயிர்கள் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்க முடியும். மலைப்பகுதிகளில் பயணிக்கக்கூடிய வாகனங்களின் வெளிப்பகுதியில் இக்கருவியைப் பொருத்துவதன் மூலம், யானைகளால் வாகனங்களின் மேல் ஏற்படக்கூடிய தாக்குதல்களை முழுமையாகத் தடுக்கலாம். இக்கருவியினால் மனிதர்கள் மட்டுமன்றி, மனிதர்களால் யானைகள்மீது ஏற்படும் தாக்குதல்களையும் முழுமையாகத் தடுக்க முடியும். இக்கருவி அனைத்து விதமான யானை - மனித மோதல்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

ராஜசேகரன் (வழிகாட்டி ஆசிரியர்)
ராஜசேகரன் (வழிகாட்டி ஆசிரியர்)

தற்பொழுது யானைகளைக் கட்டுப்படுத்த பல இடங்களில் மின்வேலி முறையைப் பயன்படுத்துகிறார்கள். இதனால், யானைகள் மட்டுமின்றி மனிதர்களே கூட அதிகளவு ஆபத்தைச் சந்திக்கிறார்கள். மின்கம்பிகளில் பாயும் மின்சாரம் தாக்கி யானைகள் மட்டுமின்றி, மனிதர்களும் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. யானைகளை விரட்டத் தீ மூட்டுவது மற்றும் பட்டாசுகள் வெடிப்பது போன்றவை மேலும் ஆபத்திற்கு வழிவகை செய்து விடும்.

Vikatan

இந்தச் சூழலில், இந்தக் கருவி அனைத்து வகை பிரச்னைக்கும் சரியான தீர்வாக அமையும். இந்த கருவியை அமைக்கப் பெரிய அளவில் செலவும் ஆகாது. எனது மாணவர் அபிநவ நாகராஜனின் இந்த கண்டுபிடிப்பு, கொடிசியாவில் காட்சிப்படுத்தப்பட்டு, பலரது பாராட்டுகளைப் பெற்றது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருந்தது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு